திருப்புகழ்க் கதைகள்: விருகோதரன் என்ற பீமன்-2

ஆன்மிக கட்டுரைகள்
thiruppugazh stories - Dhinasari Tamil

திருப்புகழ்க் கதைகள் பகுதி – 344
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

நெச்சுப் பிச்சி – திருவேங்கடம்
விருகோதரன் என்ற பீமன் 2

     துரியோதனனின் அழைப்பைக் கேட்ட யுதிஷ்டிரன் அதற்குச் சம்மதித்ததால், திருதராஷ்டிரன் மைந்தர்கள், பாண்டவர்களை அழைத்துக் கொண்டு, பெரும் வடிவங்களிலான நாட்டு யானைகளின் மேலும், நகரத்தைப் பிரதிபலிக்கும் தேர்களின் மேலும் பயணித்து அந்த நகரத்தை விட்டகன்றனர்.  குறிப்பிட்ட அந்த இடத்திற்கு வந்த இளவரசர்கள், பணியாட்களை அனுப்பிவிட்டு, அங்கே இருந்த நந்தவனம் மற்றும் சோலைகளின் அழகை ரசித்துக் கொண்டே குகைக்குள் நுழையும் சிங்கங்கள் போல அரண்மனைக்குள் நுழைந்தனர். உள்ளே நுழைந்ததும், கட்டுமானக்கலைஞர்களின் நிபுணத்துவத்தை, அந்த மாளிகையின் அழகான சுவர்களிலும், உத்தரத்திலும் கண்டனர். அந்த மாளிகை அழகாக வண்ணம் பூசப்பட்டிருந்தது. அதில் இருந்த சாளரங்களும் {ஜன்னல்களும்}, செயற்கை நீரூற்றுகளும் அருமையாக இருந்தன. அந்த மாளிகைக்கருகில் தெளிந்த நீருடன், அடர்த்தியான தாமரைகளைக் கொண்ட குளங்களும் இருந்தன. அதன் கரைகள், சுற்றுப்புறத்தை நறுமணத்தால் நிறைக்கும் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கௌரவர்களும், பாண்டவர்களும் கீழே அமர்ந்து, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொருட்களை அனுபவிக்கத் தொடங்கினர். அவர்கள் விளையாட்டில் ஈடுபட்டு, ஒருவருக்கொருவர் உணவுக்கவளங்களைப் பரிமாரிக்கொண்டனர்.

     அதே வேளையில், பொல்லாதவனான துரியோதனன், பீமனைக் கொல்லும் நோக்கோடு ஒரு குறிப்பிட்ட அளவு உணவில் திறன்மிக்கக் கடும் நஞ்சை {காளகூட விஷத்தைக்} கலந்தான். நாவில் அமுதத்தையும், இதயத்தில் கத்தியையும் வைத்திருந்த அந்தத் தீய இளைஞன் {துரியோதனன்}, வேகமாக எழுந்து, பீமனிடம் {சகோதரனாகவும், நண்பனாகவும்} நட்பு பாராட்டிக் கொண்டே, அவனது  {பீமனின்} முடிவை அடைய முடிந்தது நற்பேறென்றெண்ணி, இதயத்தில் மகிழ்ந்து நஞ்சு கலந்த உணவை அதிகமாகக் கொடுத்தான். அதில் எந்தக் குற்றத்தையும் காணாத பீமனும் அஃதை உண்டான். பிறகு திருதராஷ்டிரன் மைந்தர்களும், பாண்டு மைந்தர்களும்  உற்சாகமாக நீர்விளையாட்டுகளில் ஈடுபட்டனர் {ஜலக்கிரீடை செய்தனர்}. விளையாட்டு முடிந்ததும், அவர்கள் அனைவரும் வெள்ளுடை தரித்துப் பல்வேறு ஆபரணங்களை அணிந்து கொண்டனர். விளையாட்டால் களைப்படைந்த அவர்கள், மாலையில், {நதிக்கரையை ஒட்டியிருந்த} அந்த நந்தவனத்தின் இன்பமாளிகையில் ஓய்வு எடுக்க நினைத்தனர்.

     மற்ற இளைஞர்களை நீரில் விளையாடவிட்ட அந்த இரண்டாம் பாண்டவன் {பீமன்} மிகவும் களைப்படைந்தவனாக, நீரில் இருந்து எழுந்து, தரையில் வந்து படுத்துக் கொண்டான். நஞ்சின் ஆதிக்கத்தால் அவன் மிகவும் தளர்ந்திருந்தான். அங்கே வீசிய குளிர்ந்த காற்றானது, அந்தக் கடும் நஞ்சை வேகமகாக உடலெங்கும் பரவச் செய்ததால், உடனே அவன் {பீமன்} தன்னுணர்வை இழந்தான். இதைக் கண்ட துரியோதனன், கொடிகளாலான கயிறுகளைக் கொண்டு அவனைக் கட்டி நீருக்குள் அவனை வீசி எறிந்தான். இப்படி உணர்வை இழந்த அந்தப் பாண்டுவின் மைந்தன் {பீமன்}, நாகலோகம் வரை மூழ்கிப் போனான்.

     அப்போது கடும் விஷப்பற்களைக் கொண்ட நாகங்கள் அவனை ஆயிரக்கணக்கில் கடித்தன. அந்த வாயு தேவனுடைய மைந்தனின் உடலில் கலந்திருந்த தாவர விஷமானது {காளகூடம்}, இந்தப் பாம்பு விஷத்தால்  முறிந்தது.  பாம்புகளின் விஷப்பற்கள் ஊடுருவ முடியாத அளவிற்கு அவனது மார்பு கடினமானதாக இருந்ததால், அவை அந்தப் பகுதியை {மார்பை} மட்டும் விட்டுவிட்டு அவனது உடலெங்கும் கடித்திருந்தன. தன்னுணர்வு மீண்ட அந்தக் குந்தியின் மகன் {பீமன்}, தனது கட்டுகளை அவிழ்த்தெறிந்து, பாம்புகளைப் பிடித்துத் தரையில் அழுத்தி நசுக்கினான்.

     பீமனின் கரங்களில் அகப்படாத எஞ்சியிருந்த பாம்புகள் உயிருக்காகத் தப்பி ஓடி, இந்திரனுக்கு இணையானவனான தங்கள் மன்னன் வாசுகியிடம் சென்று, அவனிடம், “ஓ பாம்புகளின் மன்னா! கொடிகளால் கட்டப்பட்ட மனிதன் ஒருவன் நீரில் மூழ்கி வந்தான்; ஒருவேளை அவன் நஞ்சுண்டிருக்க வேண்டும். ஏனெனில், எங்களுக்கு மத்தியில் விழுகையில் அவன் உணர்வற்றவனாக இருந்தான். ஆனால், நாங்கள் அவனைக் கடிக்கத் தொடங்கியபோது, தன்னுணர்வு மீண்ட அவன், தனது கட்டுக்களை அறுத்தெரிந்து, எங்களை நசுக்கத் தொடங்கினான். மாட்சிமை பொருந்திய நீரே, அவன் யார் என்பதை விசாரிக்க வேண்டும்” என்றன.

     அப்போது வாசுகி, சக்தி குறைந்த அந்த நாகங்களின் வேண்டுகோளுக்கிணங்க, அந்த இடத்திற்குச் சென்று, பீமசேனனைக் கண்டான். பாம்புகளில் ஆர்யகன் என்ற பெயர் கொண்ட ஒருவன் இருந்தான். அவன் குந்தியின் பாட்டனாவான். குந்தியின் தந்தையான சூரன் என்பவன், ஆர்யகனின் பெண் வயிற்று பிள்ளையாவான். பாம்புகளின் தலைவன் {வாசுகி} தனது உறவினனைக் {பீமனைக்) கண்டு மகிழ்ந்து, ஆரத்தழுவிக் கொண்டான். யாவையும் கேட்டறிந்த வாசுகி, பீமனிடம் மனநிறைவு கொண்டு, ஆர்யகனிடம் பெரும் மனநிறைவுடன், “நாம் இவனை எவ்வாறு மனநிறைவு கொள்ளச் செய்வது? இவன் செல்வங்களையும், இரத்தினங்களையும் தாராளமாக எடுத்துக் கொள்ளட்டும்” என்றான்.

     பீமன் இரத்தினங்களைப் பெற்றானா? நாளை காணலாம்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply