திருப்புகழ் கதைகள்: காகம் உற அருள் செய்த மாயன்!

ஆன்மிக கட்டுரைகள்
thiruppugazh stories - Dhinasari Tamil

திருப்புகழ்க் கதைகள் பாகம் 316
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

பாதி மதி நதி– சுவாமி மலை
காகம் உற அருள் செய்த மாயன்

     இத்திருப்புகழில் அருணகிரி நாதர் காதும் ஒருவிழி காகம் உற அருள் மாயன் என்ற வரியில் இராமயண் நிகழ்ச்சி ஒன்றினைப் பாடியுள்ளார். ஸ்ரீரகுராமர் சீதையுடனும், இலக்குவருடனும், கானகம் புகுந்து, சித்திரக்கூட மலையிலே, வடகிழக்குப் பாகத்திலே மந்தாகினி நதிக்கு அருகில் உறைந்து வருவாராயினார். அங்கு பழங்களும் கிழங்குகளும் நீரும் நிறைந்திருந்தன. சித்தர் பலர் அங்கு தவம் செய்து கொண்டிருந்தார்கள். பலவகை மலர்கள் நிறைந்து நறுமணங் கமழ்ந்து கொண்டிருந்தது. குயில்கள் கூவ, மயில்கள் ஆட, வண்டுகள் பாட அவ்விடம் மனத்திற்கு இனிமையைத் தந்து கண்ணுக்கு நல்விருந்து நல்கிக் கொண்டிருந்தது.

     ஒரு நாள் இராமர் சற்று களைப்புடன் சீதையின் மடியின் மீது தலைவைத்து இனிது கண் துயின்றார். சீதை சித்திரப் பதுமை போல் அசைவற்று இருந்தார். அவ்வழிச் சென்ற இந்திர குமாரனாகிய சயந்தன் சீதாதேவியைக் கண்டு காமுற்றான். காமத்தால் அவன் அறிவுக்கண் கெட்டது. எப்படியாவது முயன்று அம்மையாரது திருமேனியைத் தீண்டிவிட வேண்டுமென எண்ணினான். எண்ணியவன் காக உருவெடுத்தான். அம்மையாரது தனங்கள் புண்படுமாறு பல முறை குத்தினான். தனங்கள் கிழிந்து உதிரம் பெருகி இராமர் முகத்தில் சிந்தியது. நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த இராமர் கண்விழித்தெழுந்தார். “சீதா! உன் தனங்கள் கிழிந்து இரத்தம் வடிவதற்குக் காரணம் என்ன?” என்று வினாவினார். சீதை, “இராகவரே! அதோ அந்தக் கிளையில் இருக்கும் காக்கை பலமுறை என்னைக் குத்தித் துன்புறுத்தியது” என்றார். இராமர், “ஏன் என்னை அப்பொழுதே எழுப்பாமலிருந்தாய்?” என்றார். சீதை, “தாங்கள் அயர்ந்து உறங்கும் போது உங்கள் உறக்கத்திற்குத் தடை செய்யக்கூடாதென்று பொறுத்துக் கொண்டிருந்தேன்” என்றார்.

     இராமர் உடனே திருக்கண் சிவந்து, தான் படுத்திருந்த தருப்பைப் பாயிலிருந்து ஒரு புல்லை எடுத்து, அக்காகத்தை “காதும்” (கொல்லும்) என்று விட்டார். “வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்” என்றபடி அப்புல் அத்திரமாகி காகத்தை விரட்டியது. காகவுருக்கொண்ட சயந்தன் பயந்து, எண்திசையும் ஓடி ஓடி ஒளிந்தான். இராமபாணம் சென்ற இடமெல்லாம் தொடர்ந்து சென்றது. முடிவில் அவன் கூற்றுவனிடம் அபயம் புகுந்தான். கூற்றுவன் இராமபாணத்தைக் கண்டு அஞ்சி, ஜெயந்தனை விரட்டிவிட்டான். ஜெயந்தன் இந்திரனிடமும், நான்முகக் கடவுளிடமும் சென்று முறையிட்டான். அவர்களும் அஞ்சி விரட்டினார்கள். முடிவில் சிவபிரானிடம் ஓடினான். சிவமூர்த்தி, “குற்றம் எங்கு செய்தனையோ அவ்விடமே மன்னிப்புக் கேட்டுக்கொள். இராமர் காப்பாற்றுவார்” என்று கூற, காகம் ஓடிவந்து சித்திரக் கூடத்திலிருந்த சீதாபதியினுடைய தாள்களில் வீழ்ந்து, “இராமா அபயம்; இரகுவீரா அபயம்; தாசரதே அபயம்; காத்தருள்வீர்” என்று அலறியது. உடனே இராமர் தண்ணருள் செய்து, “காகமே, கலங்கற்க; தஞ்சம் என்றவரைக் காப்பது எங்கள் குலநெறி. நின் உயிரைக் கொடுத்தேன். பிறன் மனைவியைத் தீய எண்ணத்துடன் காண்பது பெருந்தவறு. நீ சீதையைத் தீய எண்ணத்தோடு பார்த்தனை. அங்ஙனம் பார்த்த கண்களில் ஒன்று நமது கணைக்கு இலக்கு ஆகுக. இன்று முதல் நின் குலத்தோர்க்கு ஒரு கண்ணாகவே இருக்க” என்று ஒரு கண்ணைக் கொடுத்து அருள்புரிந்தார். இதனைப் பெரியாழ்வார்,

சித்திர கூடத்து இருப்பச் சிறுகாக்கை முலைதீண்ட,

அத்திரமே கொண்டு எறிய, அனைத்துலகுந் திரிந்து ஓடி,

“வித்தகனே! இராமா! ஓ நின்அபயம்” என்று அழைப்ப

அத்திரமே அதன் கண்ணை அறுத்ததும் ஓர் அடையாளம்.

மன்னிக்க முடியாத குற்றத்தைப் புரிந்த காகத்தையுங் காத்த கருணை வள்ளலாகிய திருமாலினுடைய மருகராதலால், அடியேன் புரிந்த குற்றங்களையும் மன்னிக்க வேண்டும் என்பது குறிப்பு.

     காலன் எனை அணுகாமல் அருள்வாயே என்ற வரியில் அருணகிரியார் இயம பயம் நீங்க அருள் புரியுமாறு வேண்டுகிறார். “சந்திரனைத் தக்க சாபமும், காகத்தை இராமபாணமும் விரட்டித் துன்புறுத்தியது போல் அடியேனைக் காலன் துன்புறுத்த வருகின்றான். அங்ஙனம் அக்காலன் வந்து என்னையணுகா வண்ணம் உமது திருவடித் தொழும்பனாக ஆக்கிக் கொள்வீர்” என்று சுவாமிகள் முறையிடுகின்றார். இதனால் நாம் அறியப் பெறுவது என்னவெணில் முருகனடியாரிடம் காலன் அணுகுவதில்லை என்பதாகும்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply