திருப்புகழ்க் கதைகள் – பகுதி- 300 – முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
காமியத்து அழுந்தி – சுவாமி மலை
அருணகிரிநாதர் அருளிச்செய்துள்ள இருநூற்றிப் பன்னிரண்டாவது திருப்புகழான “காமியத்து அழுந்தி” எனத் தொடங்கும் திருப்புகழ் சுவாமிமலை தலத்துப் பாடலாகும். இத்திருப்புகழில் அருணகிரியார் “சுவாமிநாதா, பிரணவ மந்திரத்தைத் தியானித்து, ஓவியம் போல் அசைவற்று இருந்து, அருள் பெற அருள்புரிவாயாக” என வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.
காமியத் தழுந்தி …… யிளையாதே
காலர்கைப் படிந்து …… மடியாதே
ஓமெழுத்தி லன்பு …… மிகவூறி
ஓவியத்தி லந்த …… மருள்வாயே
தூமமெய்க் கணிந்த …… சுகலீலா
சூரனைக் கடிந்த …… கதிர்வேலா
ஏமவெற் புயர்ந்த …… மயில்வீரா
ஏரகத் தமர்ந்த …… பெருமாளே.
இத்திருப்புகழின் பொருளாவது – திருமேனியில் நறும்புகை படியும்படிச் செய்து உயிர்கள் இன்புறும் பொருட்டு திருவிளையாடல் புரிபவரே; சூரபன்மனைத் தண்டித்து அடக்கிய ஒளிவீசும் வேற்படையையுடைவரே; மேருகிரி போல் உயர்ந்து பொற்பிரகாசமாகிய மயில் மீது ஊர்ந்து வருகின்ற வீரரே; திருவேரகமென்கின்ற சுவாமி மலையில் எழுந்தருளியுள்ள பெருமிதமுடையவரே;
பயன் கருதிச் செய்யும் கிரியை முதலியவற்றில் மனம் அழுந்தி இளைக்காமலும், காலன் கையிற் சிக்குண்டு வீணே மடிந்து போகாமலும், பிரணவ மந்திரத்தில் மிகுந்த அன்பு பூண்டு, அம்மந்திரத்தை மானசிகமாக நினைந்து, ஓவியம் போல் அசைவற்று இருக்கும் முடிந்த முடிவை (அடியேனுக்கு) அருள் புரிவீர்.
இத்திருப்புகழில் இடம்பெறும் காமியத்து அழுந்தி இளையாதே என்ற வரியில் காமியம் என்பதைப் பற்றி அருணகிரியார் சொல்லுகிறார். காமியம் என்றால் பயன் கருதிச் செய்வது; இறைவழிபாடு இறையன்பு முதலியவற்றைப் பயன் கருதிச் செய்வது உயர்ந்த லட்சியமாகாது. செல்வம் வேண்டுமென்றும் பதவி வேண்டுமென்றும், உத்யோகம் வேண்டுமென்றும், இப்படிப் பலவகையான பயன் பருதி கோவிலுக்குப் போய் கும்பிடுகின்றார்கள். எந்ந எந்தப் பயனைக் கருதுகின்றார்களோ அந்த அந்தப் பயனை இறைவன் தருகின்றனன். ஆனால், அந்தப் பயனுடன் அது நின்று விடுகின்றது. இறைவன் திருவருளை நாடி வழிபட்டால் அத்திருவருளால் எல்லா நலன்களும் எய்தும்; இம்மையிலும், மறுமையில் இன்புற்று இனிப் பிறவா நலமும் உண்டாகும்.
பயன் கருதாமல் செய்கின்ற நிஷ்காம்ய கர்மம் பற்றி வாலி தன்னுடைய வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைச் சொல்லுவார். சிவாஜி, பிரபு நடித்த ‘சுமங்கலி’ என்னும் படத்தில் ‘கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை’ என்ற ஒரு பாடலை எழுதியவர் வாலி; இசையமைத்தது திரு.எம்.எஸ்.வி; பாடியது திரு. டி.எம்.எஸ். இவர்கள் மூவரும் அக்மார்க் ஆத்திகர்கள்.
பிரபு நடித்து – இந்தப் பாட்டு, தி.நகர் பஸ் நிலையம் அருகே இருக்கும் பெரியார் சிலையைச் சுற்றி டைரக்டர் திரு.யோகானந்த் அவர்களால் படமாக்கப்பட்டது. கடுமையான கடவுள் நம்பிக்கை உடைய நானும், எம்.எஸ்.வி-யும்; டி.எம்.எஸ்-ஸும் இந்தப் பாடலை – நூறு விழுக்காடு ஈடுபாட்டோடு உருவாக்கினோம். இதற்குப் பெயர்தான் ‘நிஷ்காம்ய கர்மம்’. விருப்பு வெறுப்பின்றி – நமக்கிட்ட பணியைச் செவ்வனே செய்வது தான், ‘நிஷ்காம்ய கர்மம்’.
மகாபாரதத்தில் ஒரு கதை வருகின்றது. ஒரு மகா முனிவன், தருக்கும் செருக்கும் ஏறி நிற்பவன். ஒரு குடும்பப் பெண்ணிடம் குட்டுப்படுகிறான். அவள், எங்கோ இவன் ஒரு கொக்கைக் கொன்றதைப் பேசுகிறாள். ‘தருமம் யாதென முழுமையாய்த் தான் அறியவில்லை’ என்று அந்த முனிவன் ஒப்புக்கொண்டு, அதைத் தனக்குக் கற்பிக்கும்படி அந்தப் பெண்ணை வேண்டுகிறான்.
அவள் – ஒருவன் பெயரைக் குறிப்பிட்டு, அங்கு போய் அவனிடம் அறத்தை அறிந்துகொள் என்கிறாள். அந்தப் பெண் குறிப்பிட்ட தர்மிஷ்டனின் பெயர் ‘தரும வியாதன்’. அவனிடம் முனிவன் சென்று, தனக்கு தர்மத்தை உபதேசிக்க வேண்டுகிறான். ‘இரு; என் வேலையைச் செய்துவிட்டு வருகிறேன்!’ என்று அவன் ஆட்டை வெட்டுகிறான்; ஆம்! அவன் கசாப்புக் கடை வைத்திருப்பவன். இதுதான் நிஷ்காம்ய தர்மம்.