திருப்புகழ் கதைகள்: வாய்மையே வெல்லும்!

ஆன்மிக கட்டுரைகள்
thiruppugazh stories - Dhinasari Tamil

திருப்புகழ்க் கதைகள் பகுதி 297
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

கறைபடும் உடம்பு – சுவாமி மலை
வாய்மையே வெல்லும்

     சத்தியத்திற்கு உள்ள மற்றொரு விலக்கு என்னவென்றால் ஊரிலே பலவிதமான அயோக்கியர்கள் இருக்கிறார்கள். அதைப் பார்த்து ஒருவருடைய மனசு கொதிக்கிறது. அவர் இந்தத் தப்பையெல்லாம் ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார். ‘அவன் அந்த அயோக்கியத்தனத்தைச் செய்தான். இவன் இந்த அயோக்கியத்தனத்தைச் செய்தான்’ என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். இவருக்கு வாக்கும் மனசும் ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், இவர் அப்படிச் சொல்வதால் இவருக்கோ மக்களுக்கோ பிரயோஜனமில்லை. தப்புச் செய்கிறவர்களுக்கும் பிரயோஜனமில்லை. இப்படி வீணாக வாக்கும் மனசும் ஒன்றுபட்டிருப்பதை சத்தியம் என்று சொல்வதற்கில்லை.

     ஒருவன் மனசில் கெட்ட எண்ணங்கள் எழுகின்றன. அதை அவன் அப்படியே வாக்கிலே வெளியிடுகிறான். அது சத்தியமாகிவிடுமா? ஆகாது. ஆகவே சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றுபடுவது மட்டுமில்ல. நல்ல மனசிலே தோன்றுகின்ற நல்ல எண்ணங்களை வாக்கில் சொல்வதே சத்தியம். நல்ல விளைவுகளை உண்டாக்குவதே சத்தியம். மக்களுக்கு நன்மை பயப்பதாகவும் பிரியமாகவும் எது இருக்கிறதோ அதுவே சத்தியம் என்பதாக சத்தியத்துக்கு ஒரு வரையறையை பெரியோர் வகுத்திருக்கின்றனர்.

     ஒருவனுக்கு நல்லதைச் சொன்னால் மட்டும் போதாது. அதை அவன் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் சொல்ல வேண்டும். நல்லதைக் கூட கடுமையாகச் சொன்னால் அதை யாறும் ஏற்கமாட்டார்கள். இவ்வாறு பலனில்லாமல் போகிற நல்ல வாக்கு சத்தியமாகாது. நல்லதாகாவும் இருக்க வேண்டும். அது யாரை உத்தேசித்துச் சொல்லப்படுகிறதோ அவனுக்கு இன்பம் தரும் விதத்தில் இதமாகவும் சொல்லப்பட வேண்டும். இதுவே சத்தியம்.

     ‘சத்தியத்தைச் சொல், பிரியமானதைச் சொல். சத்தியத்தைப் பிரியமாக சொல்ல முடியவில்லை என்றால், அப்போது அப்படிப்பட்ட சத்தியத்தையும் சொல்லாதே. கேட்கப் பிரியமானாலும், அசத்தியத்தைச் சொல்லாதே,’ என்பது பெரியோர் வாக்கு. சமஸ்கிருதத்தில் இதனை

சத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத் ந ப்ரூயாத் சத்யம் அப்ரியம்

ப்ரியம் ச நான்ருதம் ப்ரூயாத் ஏஷ தர்ம: சநாதன:

(மனு ஸ்மிருதி 4-138)

அதாவது உண்மையே பேசு; இனிமையாகப் பேசு; கசப்பான உண்மையைச் சொல்லாதே; இனிமையான பொய்களைப் பேசாதே; இதுதான் சநாதன தர்மம்.

     ஆசையும் கோபமும் உள்ள மனசிலிருந்து இப்படிப்பட்ட பிரியமான, நன்மையான வாக்கு வராது. நன்மையை உண்டாக்கும் சத்திய வாக்கு வரவேண்டுமானால், அதற்கு அடிப்படையாக ஆசை கோபமற்ற நல்ல மனம் வேண்டும்.

     சத்தியத்திலேயே ஒருவன் நிலைத்து நின்று விட்டால் அதற்கு ஓர் விளைவு உண்டு – அதாவது அந்த சத்தியசந்தனுக்குத் தெரியாமலேயே ஒரு விளைவு உண்டாகும். அது என்னவெனில், ஒருவன் சத்தியமே பேசிப் பேசி பழகிவிட்டால் கடைசியில் அவன் எது சொன்னாலும் அது சத்தியமாகிவிடும். இப்படிப்பட்டவன் மனமறிந்து பொய் சொல்லவே மாட்டான். ஆனால், அறியாமையாலோ தவறிப்போயோ அவன் ஒரு விஷயத்தைத் தப்பாகச் சொல்லி விட்டாலும், அந்தத் தப்பே நிஜ வாழ்க்கையில் சத்தியமாக நடந்துவிடும். அபிராமி பட்டரின் கதை இதற்கு நல்ல எடுத்துக்காட்டாகும்.

     இயமம் என்பதற்கு கட்டுப்பாடு என்று பொருள் கொள்ளலாம். யோக நெறியில் ஈடுபடுபவன் சுய கட்டுப்பாடுகளாகச் சில விதிகளை கடைபிடித்தல் வேண்டும். தன்னைக் கட்டுப்படுத்தி ஆளும் ஆற்றளுடையவனால்தான் மற்றவற்றையும் கட்டுப்படுத்த முடியும். இது தன்னாளுமைப் (Personality) பண்புகளில் ஒன்றாகும். உளத்திற்குத் தீயன செய்கின்ற செயல்களை விலக்குகின்றபோது அகத்தூய்மையைப் பெற முடிகின்றது. அகத்தூய்மை பெற்றவர்களால்தான் புறத்தூய்மையை எளிதில் பெற இயலும்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply