திருப்புகழ் கதைகள்: கறைபடும் உடம்பு

ஆன்மிக கட்டுரைகள்
thiruppugazh stories - Dhinasari Tamil

திருப்புகழ்க் கதைகள் பகுதி – 294
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

கறைபடும் உடம்பு – சுவாமி மலை

     அருணகிரிநாதர் அருளிச்செய்துள்ள இருநூற்றிப் பதினொன்றாவது திருப்புகழான “கறைபடும் உடம்பு” எனத் தொடங்கும் திருப்புகழ் சுவாமிமலை தலத்துப் பாடலாகும். இத்திருப்புகழில் அருணகிரியார் “சுவாமிநாதா, உமது திருவடி மலரை, ஞானமலர்களால் அர்ச்சித்து வீடு பெற அருள்புரிவாயாக” என வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.

கறைபடுமு டம்பி ராதெனக்

     கருதுதலொ ழிந்து வாயுவைக்

          கருமவச னங்க ளால்மறித் …… தனலூதிக்

கவலைபடு கின்ற யோககற்

     பனைமருவு சிந்தை போய்விடக்

          கலகமிடு மஞ்சும் வேரறச் …… செயல்மாளக்

குறைவறநி றைந்த மோனநிர்க்

     குணமதுபொ ருந்தி வீடுறக்

          குருமலைவி ளங்கு ஞானசற் ……    குருநாதா

குமரசர ணென்று கூதளப்

     புதுமலர்சொ ரிந்து கோமளப்

          பதயுகள புண்ட ரீகமுற் ……         றுணர்வேனோ

சிறைதளைவி ளங்கு பேர்முடிப்

     புயலுடன டங்க வேபிழைத்

          திமையவர்கள் தங்க ளூர்புகச் ……   சமராடித்

திமிரமிகு சிந்து வாய்விடச்

     சிகரிகளும் வெந்து நீறெழத்

          திகிரிகொள நந்த சூடிகைத் ……      திருமாலும்

பிறைமவுலி மைந்த கோவெனப்

     பிரமனைமு னிந்து காவலிட்

          டொருநொடியில் மண்டு சூரனைப் …… பொருதேறிப்

பெருகுமத கும்ப லாளிதக்

     கரியெனப்ர சண்ட வாரணப்

          பிடிதனைம ணந்த சேவகப் ……      பெருமாளே.

     இத்திருப்புகழின் பொருளாவது – சக்ராயுதத்தை உடையவரும், ஆதிசேடன் முடியில் விளங்குபவரும், ஆகிய திருமால், தன் மகன் பிரமதேவர் தலையில் குட்டுவதைக் கண்டு, “சந்திர சேகரரது, திருக்குமாரரே, இது முறையோ?” என ஓலமிட, பிரணவத்தின் பொருள் உரைக்காது விழித்த பிரமதேவனைக் குட்டிச் சினந்து, சிறையில் அடைத்து, சிறையிலிருந்து துன்புறுகின்ற மேகவானனாகிய இந்திரன் முதலிய இமயவர்கள் சிறையினின்று, நீங்கித் தங்கள் பொன்னுலகஞ் சேர்ந்து இன்புறவும், இருள் நிறைந்த கடல் ஓலமிட்டலறவும், குலமலைகள் வெந்து நீறாகவும், நெருங்கி வந்த சூரனை ஒரு நொடிப் பொழுதில் போர்புரிந்து வென்று, மதம் பொழிகின்ற மத்தகத்தையுடைய அழகிய யானையென்று கூறுமாறு மிகுந்த வலிமையுடைய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட தெய்வ குஞ்சரியம்மையை மணந்துகொண்ட வீரரே; பெருமிதம் உடையவரே;

     இரத்தம் நிறைந்த உடம்பு நிலைத்திராது என்று எண்ணுவதைத் தவிர்த்து, நிலைத்திருக்குமென்று எண்ணி, பிராணவாயுவை ஆகருஷண ஸ்தம்பனாதி மந்திரங்களால் கும்பித்து, அப்பிராணவாயுவால் குண்டலிசத்தியை எழுப்பி, “சித்தியடைய வேண்டுமே” என்று கவலைப்படுகின்ற ஹட யோகம் முதலியவைகளின் கட்டளைகளை நினைக்கின்ற சிந்தனை தொலையவும், ஒருமுகப்பட்டுத் தியானிக்க வொட்டாமல் கலகம் புரிகின்ற ஐவாய் வழிச் செல்லும் சத்தாதி ஐந்தும் அடியோடு அழியவும், ‘என்செயல்‘ என்பது நீங்கவும், குறைவில்லாத நிறைந்த மௌனத்தையடைந்தும் சத்துவ, ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்கள் நீங்கி அருட்குணம் பெற்று முக்தியை யடையவும், “சுவாமிமலையில் எழுந்தருளியுள்ள ஞானசற்குருநாதரே! குமாரக் கடவுளே,” என்று துதித்து, புதிய கூதள மலர்களால் அருச்சித்து, தேவரீருடைய இளமை பொருந்திய இரண்டு திருவடித் தாமரைகளை யடைந்து அத்திருவடி இன்பத்தை உணர்ந்து உய்வேனோ? – என்பதாகும்.

     இப்பாடலில் யோக மார்க்கத்தை விட பக்தி மார்க்கம் சிறந்தது என அருணகிரியார் கூறுகிறார். யோக மார்க்கம் என்றால் என்ன? நாளை காணலாம்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply