கோபூஜை – பசுவை பூஜிப்பது ஏன்?

ஆன்மிக கட்டுரைகள்

 

ஆதிகால மனிதன் தனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தவற்றை மதிப்பளித்துப் போற்றினான். நாகரிக வளர்ச்சி பெருகப்பெருக, கால்நடைகளை வைத்து பயிர் விளைவித்து உணவுத் தேவையை சரிக்கட்டிக் கொண்ட போது, வயிற்றுப் பசியைத் தணிக்க உதவிய அனைத்தையும் வணங்கினான். அவ்வகையில் பழங்காலத்தில் இருந்தே பசுவின் தேவை மனிதனுக்கு மிகவும் இன்றியமையாததாக இருந்தது. எனவே பசுவை தன் தாயாகப் பாவித்து வணங்கியதில் வியப்பு ஒன்றும் இல்லை.

ஆனால், பசு அதற்கும் ஒரு படி மேலே போய், தெய்வம் என்ற இடத்தைப் பிடித்தது வேதங்கள் தழைத்த காலத்தில்! பசுவை காமதேனு என்ற பெயரில் வணங்கும் நடைமுறை தோன்றியது. எனவே இறை வழிபாட்டில் பசு முக்கிய இடத்தை வகித்தது.

இன்றளவும் புகழ்பெற்ற திருக்கோயில்களில் காணலாம̷் 0; அதிகாலை வேளையில் கோயில் நடை திறக்கும் முன் கோபூஜை செய்கிறார்கள். விச்வரூப தர்சனம் என்ற பெயரில் அதிகாலை பெருமானின் கர்ப்பக்கிரக வாசல் கதவுகள் திறக்கும் முன், கோயில் காராம்பசுவை அலங்கரித்து, பூக்கள் கொண்டு பூஜித்து, கர்ப்பூர ஆரத்தி காட்டி, குங்குமம் கொடுத்து, அஷ்ட மங்கல திரவியங்களையும் வைத்து, திரையை அகற்றி, தீபாராதனை நடைபெறுவதைக் காணலாம். ஆழ்வார்களால் கோயில் என்று கொண்டாடப்பட்ட திருவரங்கம் உள்ளிட்ட முக்கியத் திருத்தலங்களில் இது தினசரி தரிசனம்தான்!

மனிதனுக்கு பயன்படாது என்று கழிக்கப்பட்ட பொருள்களான வைக்கோல், புல், கழுநீர், புண்ணாக்கு, தவிடு, தானியங்களின் தோல் போன்றவற்றை உணவாக ஏற்று, மனிதர்களுக்கு உணவாகும் பால் தருவது பசுவின் தெய்வீகத் தன்மையை உணர்த்தும். காரணம், இறைவனும் அப்படித்தான். குழந்தை செய்யும் குறும்புகளையும் தொல்லைகளையும் தாங்கிக் கொண்டு, குழந்தைக்கு நல்லதையே செய்யும் தாயின் நிலையைப் போன்றும், பக்தன் மீது பரிவு கொண்டு அருள் புரியும் தெய்வத்தின் நிலையைப் போன்றும் திகழ்வதால் பசு தெய்வமாக வணங்கப்பட்டது. இதன் காரணத்தால் கோபூஜை பண்டைய நாட்களிலேயே பிரசித்தி பெற்றது. கேட்டதை அள்ளித் தரும் தெய்வீகப் பசுவாக, தேவலோகப் பசுவாக காமதேனு போற்றப்பட்டது.

பசுவுக்குப் புல் கொடுப்பதால், பஞ்ச மஹா பாவங்களும் விலகும் என்றனர் முனிவர்கள். ஜாதகத்தில் சுக்ரன் நீசனாகவோ, தோஷமுள்ளவனாகவோ இருந்தால், பசுவின் சாபம் இருக்கக்கூடும். அவர்கள் இந்தப் பாவங்கள் விலக, ஒரு சுலோகத்தைச் சொல்லி, பசுவுக்கு புல் கொடுத்துவர, இந்த தோஷங்கள் விலகும்.

ஸெளரபேப்ய: ஸர்வஹிதா: பவித்ரா: புண்யராசய:|

ப்ரதிக்ருண்ணம்த்விமம் க்ராஸம் காவஸ்த்ரைலோக்ய மாதர:||

(காமதேனு வம்சத்தைச் சேர்ந்தவையும் எல்லோருக்கும் நன்மை செய்பவையும், பரிசுத்தமானவையும், புண்ணியக் கூட்டங்களுமான மூவுலகத்துக்கும் தாயான பசுக்கள் இந்தப் புல்லைப் பெறட்டும் என்பது இதன் பொருள்)

பசுவின் கழிவுப் பொருள்கள் மருந்துப் பொருள்களாக பயன்படுகின்றன. இன்று குஜராத் மாநிலத்தில் பசுவின் கழிவுப் பொருள்களில் இருந்து, மருந்து சோப்புகள், வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. கோஜலமும் மருந்துப் பொருளே. உடல் அரிப்பையும் தோல்நோய்களையும் போக்கும் வல்லமை இதற்கு உண்டு என்று ஆயுர்வேதம் கூறுகிறது. பசுவின் சாணம் உரமாகப் பயன்படுகிறது. சாணத்தை காயவைத்து வராட்டியாக்கி, ஹோமங்களில் பயன்படுத்துகின்றோம். இந்த வராட்டியே பஸ்மமாக்கப்பட்டு, நெற்றியில் பூசிக்கொள்ளும் விபூதியாகிறது. சாணத்திலிருந்து இன்று எரிவாயு தயாரிக்கப்படுகிறது. பண்டைய காலத்தில் மட்டுமல்ல, இன்றளவும் சில கிராமங்களில் காணலாம்… மண் வீட்டை பசுவின் சாணத்தால் மெழுகி வைப்பர். காரணம், எறும்பு உள்ளிட்ட பூச்சிகள் வீட்டுக்குள் அண்டாமல் இருக்க பசுவின் சாணமே மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது. கிராமத்து வீடுகளிலும், சுத்தம் பேணும் இல்லங்களிலும், தரையில் அமர்ந்து உணவு உண்ட பிறகு, அந்த இடத்தை பசுவின் சாணத்தால் சுத்தம் செய்வதைப் பார்க்கலாம். அதிகாலை நேரங்களில் வீட்டின் முன் ஒரு வாளியில் தண்ணீர் எடுத்து அதில் பசுவின் சாணத்தைக் கலந்து நன்றாகக் கலக்கி, அந்தத் தண்ணீரைக் கொண்டே வாசலைத் தெளித்து கோலம் போடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். இதை, இன்றளவும் கிராமங்கள் கடைப்பிடித்து வருகின்றன.

நலம் பயக்கும் பசு, இல்லங்களில் வளர்க்கப்படுவது மட்டுமல்லாது, கோயில்களில் கோசாலையில் வளர்க்கப்படுவதை இன்றும் காண்கிறோம். பழங்காலத்தில் எத்தனையோ தானங்களில் கோதானமும் சிறப்பான இடத்தை வகித்துள்ளது. இப்போதும்கூட, கோயில்களுக்கு கோதானம் செய்து புண்ணியம் தேடிக்கொள்ளும் செயலை சிலர் செய்துவருகிறார்கள்.

மனிதர்க்கு தெய்வமாகத் திகழும் பசுவை எல்லோரும் வழிபட ஒரு நாளையும் முன்னோர் ஒதுக்கியிருக்கிறார்கள். அது, தை மாதம் 2ம் நாள். அந்த நாளில் பசுவைக் குளிப்பாட்டி, மஞ்சள் குங்குமம் வைத்து, மாலை சூட்டி, அலங்காரம் செய்து, கோபூஜை செய்து வழிபடவேண்டும்.

Leave a Reply