அண்ணா என் உடைமைப் பொருள் (44): தெய்வத்தின் குரல்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

e0af8de0aea3e0aebe-e0ae8ee0aea9e0af8d-e0ae89e0ae9fe0af88e0aeaee0af88e0aeaae0af8d-e0aeaae0af8ae0aeb0e0af81e0aeb3e0af8d-44.jpg" style="display: block; margin: 1em auto">

anna en udaimaiporul 2 - 5
anna en udaimaiporul 2 - 2

அண்ணா என் உடைமைப் பொருள் – 44
தெய்வத்தின் குரல்
– வேதா டி. ஸ்ரீதரன் –

‘‘தெய்வத்தின் குரல், தெய்வத்தின் குரல்’’ என்று நாம் அனைவரும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறோம். அண்ணா என்றால் பெரும்பாலோருக்கு தெய்வத்தின் குரல் தான் நினைவு வரும்.

தெய்வத்தின் குரல் முழுக்க முழுக்க அண்ணாவின் உழைப்பு என்பதையும் முன்னரே சுட்டிக் காட்டி இருக்கிறேன். ஆனால், அந்த உழைப்பைத் தாண்டிய மிக முக்கியமான இன்னோர் அம்சமும் உண்டு.


‘‘நாம் நமது வாழ்க்கையை வாழ்கிறோம்’’ என்று சொல்கிறோம்.

எப்படி வாழ்கிறோம்?

நமக்குத் தெரிந்த விதத்தில் வாழ்கிறோம். சட்டப்படி…. நமக்குத் தெரிந்த தர்ம-நியாயங்களின் படி… மனசாட்சிப்படி…. நமது அறிவுக்கு எட்டிய வரையில்…

உண்மையில், நாம் எப்படி வாழ வேண்டும்?

தர்மத்தின் வழியில் வாழ வேண்டும்.

– இது தான் சனாதன தர்மத்தின் அடிப்படைக் கருத்து.

தர்மம் என்றால் என்ன? அதை நாம் எவ்வாறு தெரிந்து கொள்வது?

தர்மம் என்பது மிகவும் சூக்ஷ்மமானது. அதை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. அதேநேரத்தில் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும், ஒவ்வொரு சூழலிலும் நாம் தர்மத்தைப் புரிந்து கொண்டு அதன்படி நடந்து கொள்வதற்கான வழிகாட்டுதல் நமது மதத்தில் உள்ளது.

இத்தகைய வழிகாட்டிகளே சாஸ்திரங்கள். இவை பிரமாணங்கள் எனப்படுகின்றன. அதாவது, தர்மம் என்கிற தத்துவத்தை நமக்குப் புரிய வைப்பதற்கான சாதனங்கள்.

எனவே, தர்மப்படி வாழ்வது என்பது, நம்மைப் பொறுத்த வரை, சாஸ்திரப்படி வாழ்வதே.

சாஸ்திரங்கள் என்னென்ன, அவற்றை நாம் எவ்வாறு படித்துத் தெரிந்து கொள்வது என்பது அடுத்த கேள்வி.

சாஸ்திரங்கள் பல தரப்பட்டவை. அதுமட்டுமல்ல, அவற்றை நாம் வெறுமனே புத்தகங்கள் மூலம் தெரிந்து கொள்ளக் கூடாது. குருவிடமிருந்து முறையாகக் கற்றுக் கொள்ள வேண்டும்.

தற்காலச் சூழ்நிலையில் இது ஏதோ ஒருசிலருக்கு மட்டுமே சாத்தியப்படுகிறது.

அப்படியானால், மற்றவர்கள் சாஸ்திரக் கருத்துகளை எவ்வாறு புரிந்து கொள்வது?

இதற்கான ஓர் எளிய தீர்வு தான் குருவின் உபதேசங்கள்.

குருவின் வழிகாட்டுதல்களை நாம் நம்மால் முடிந்த விதங்களில் – நேரில் சென்று கேட்பது மட்டுமல்ல, புத்தகங்கள் வழியாகவும் – படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

நம் அனைவருக்கும் சாத்தியமான வழி இதுவே.

தெய்வத்தின் குரல் என்பது ஜகத்குருவாகிய பெரியவாளுடைய உபதேசங்களின் தொகுப்பு.

எனவே, தெய்வத்தின் குரல் என்பது, தற்காலச் சூழலில், நாமக்குக் கிடைத்திருக்கும் சாஸ்திரப் பிரமாணம்.

தெய்வத்தின் குரல் மூலம் நமது மதக் கருத்துகளை நாம் அறிந்து கொள்கிறோம் என்று சொல்வது மேலோட்டமான கருத்து.

உண்மையில், தர்மம் என்ற தத்துவத்தைத் தற்காலச் சூழலில் நாம் அறிந்து கொள்வதற்கான முறையான சாஸ்திரப் பிரமாணம் தெய்வத்தின் குரல் என்று சொல்வதே முழுமையானது.

தெய்வத்தின் குரல் ஒரு சாஸ்திரப் பிரமாணம் என்பது தான் அதன் உண்மையான மகத்துவம்.

அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் பெரியவா என்று சொல்லும் போது, அந்தக் குரலை நமக்குப் புத்தக வடிவில் தந்தது தான் அண்ணாவின் உண்மையான மகத்துவம் என்பதையும் சேர்த்தே சொல்ல வேண்டியது அவசியம்.

‘‘சாஸ்திரம், தர்மம் முதலியவற்றை நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடிவதில்லை. அதேநேரத்தில், பெரியவா எவ்வாறு நடந்து கொண்டார், என்ன சொல்லி இருக்கிறார் என்பதை மட்டும் தெரிந்து கொண்டால் போதுமானது. அது தான் தர்மத்துக்கான விளக்கம். ஏனெனில், பெரியவா தர்மத்துக்குப் புறம்பாக எந்தச் செயலும் செய்ததும் இல்லை, எந்தக் கருத்தையும் மொழிந்ததும் இல்லை.’’ என்று பெரியவா பற்றி அண்ணா சொல்வதுண்டு என்று கூறி இருந்தேன்.

பெரியவா மொழிந்த கருத்துகளை – அதாவது, தர்ம விளக்கங்களை – நமக்குத் தொகுப்பாக அளிப்பவை தெய்வத்தின் குரல் தொகுதிகளே.

பெரியவா சாஸ்திரங்களுக்கான அதாரிடி என்றால், பெரியவாளின் குரலுக்கு அதாரிடி அண்ணா.

சாஸ்திரப் பிரமாணத்தைத் திரட்டித் தருவது என்பது வெறும் தொகுப்பு நூல் தயாரிக்கும் உழைப்பு அல்ல, அது கத்தியின் மீது நடப்பதற்கு ஒப்பானது. அண்ணா ஏதாவது தவறு செய்து விட்டால், அது பெரியவாளின் தவறாகி விடும், சாஸ்திரக் கருத்துகள் திரிக்கப்பட்டு விடும்.

தெய்வத்தின் குரல் வாசகர்களில் சாமானியர்கள் மட்டுமல்ல, சாதகர்களும் உண்டு, முறையாக சாஸ்திரம் படித்தவர்களும் உண்டு. பல்வேறு சம்பிரதாயங்களைச் சேர்ந்த பெரியவர்களும் உண்டு.

தெய்வத்தின் குரலில் ஒரு கோளாறு என்றால், அது சாமானியர்களுக்குத் தவறான உதாரணமாக அமைந்து விடும் என்பதோடு, மேலோரின் கண்டனத்துக்கும் இலக்காகி விடும்.

இந்த அம்சத்தைப் புரிந்து கொண்டால், அண்ணாவின் பணி எவ்வளவு மகத்துவம் வாய்ந்தது என்பது புரியும்.

இதில் வேறு சில விஷயங்களும் உண்டு.

பெரியவா ஒரே ஒரு இடத்தில் நிகழ்த்திய சொற்பொழிவை ஒரு அத்தியாயமாகப் போடுவது என்றால் அது ஓரளவு எளிய வேலையாக இருக்கும். ஆனால், தெய்வத்தின் குரல் அவ்வாறு உருவாக்கப்பட்டது அல்ல. தெய்வத்தின் குரலின் ஓர் அத்தியாயம் என்பது பல்வேறு இடங்களில் பெரியவா மொழிந்த கருத்துகளின் தொகுப்பு. அவற்றை ஒருங்கிணைத்து ஒரே அத்தியாயமாக அமைத்திருக்கிறார், அண்ணா.

இதற்காக அண்ணா, பெரியவா அன்பர்கள் பலரையும் தொடர்பு கொண்டு அவர்கள் எழுதிய குறிப்புகளை வாங்கிப் பயன்படுத்தியது உண்டு. அதேபோல, தெய்வத்தின் குரலில் ஆங்காங்கே சில நுட்பமான விஷயங்களை விளக்கும் விதத்தில் அடைப்புக் குறிகளுக்குள் (within brackets) தரப்பட்டுள்ள விளக்கங்கள், அடிக்குறிப்புகள் (footnotes) முதலியவற்றை எழுதுவதற்குப் பலரது வழிகாட்டுதல்களை நாடியதும் உண்டு.

ஆனால், இதையெல்லாம் விட முக்கியமானது, பெரியவாளின் அருட்சக்தி அண்ணாவின் உள்ளிருந்து இயக்கியது என்பதே.

kanchi mahaperiyava1
kanchi mahaperiyava1

ஒவ்வொரு முறை அண்ணா குறிப்பெடுத்துக் கொண்டதை வீட்டில் வந்து முழுமையாக எழுதும் போதும் அவர் தனக்குள் பெரியவாளின் குரல் ஒலித்ததாகவும், அந்த வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே பெரியவா கருத்துகளை முழுமையான விதத்தில் எழுதிக் கொள்ள முடிந்தது என்றும் சொல்லி இருக்கிறார்.

தெய்வத்தின் குரல் ஏழாம் பகுதி வேலைகள் வழக்கமான வேகத்தில் நடைபெறவில்லை. அடுத்த பாகம் மிகவும் தாமதமாகிறதே என்று நிறைய அன்பர்களுக்கு வருத்தம். அப்போது, என்னிடம் அண்ணா, ‘‘பாவம், நிறையப் பேர் வருத்தப்படறா. ஏன் டிலே ஆகறது-ன்னு!! காரணம் என்ன-ன்னு எனக்குத் தானே தெரியும்! நானா எழுதறேன்? அதுவா வர்றது. அந்த ஃப்ளோ இருந்தா தானே எழுத முடியும்?’’ என்று தெரிவித்தார்.

ஏழாம் பாகத்தில் இடம் பெற்றுள்ள அரசும் மதமும் அத்தியாயத்தின் முன்னோட்டப் பகுதியில், இத்தகைய அனுக்கிரக விஷயம் பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார்.

என்னால் இதை ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது. காரணம், அண்ணா டேப் ரெகார்டர் முதலான எலக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்தி, ரெகார்ட் பண்ணி, எதுவும் எழுதவில்லை. அதிகபட்சமாக, சில சொற்பொழிவுகளை அதுபோல கேசட் வடிவில் அவர் கேட்டிருக்கலாம். ஆனால், தெய்வத்தின் குரலுக்கு அவர் இதுபோன்ற சாதனங்களைப் பயன்படுத்தியே இல்லை என்பதை நான் அறிவேன்.


பெரியவா, அண்ணா, தெய்விகம் முதலிய எல்லா விஷயங்களையும் மறந்து விட்டு, தெய்வத்தின் குரலை ஒரு சராசரி நூலாக மட்டும் பார்த்தால் கூட, அது ரொம்ப விசேஷமானதே.

கடந்த முப்பது வருடங்களாக நான் பதிப்பகப் பணியில் இருந்து வருகிறேன். இத்தனை வருடங்களில் நான் விதவிதமான அச்சுப் பிழைகளைப் பார்த்திருக்கிறேன். என்னைப் பொறுத்த வரை, பிழைகள் இல்லாத புஸ்தகம் என்பது மிகமிக அபூர்வமான விஷயம்.

தெய்வத்தின் குரலும் இதற்கு விதிவிலக்கு இல்லை. தெய்வத்தின் குரல் வாசிக்கும் போது அதில் உள்ள ஒருசில பிழைகள் என் கண்ணில் பட்டிருப்பதும் உண்மையே! எனினும், தெய்வத்தின் குரலில் பிழைகள் மிகவும் குறைவு தான் – பிழைகளே இல்லை என்று கருத முடிகிற அளவு குறைவானவையே.

anna alias ra ganapathy8 1 - 3

குறைந்தது இரண்டு பேராவது ப்ரூஃப் படித்தால் தான் இதுபோன்ற பிழைகளே இல்லாத (அல்லது, மிகமிகக் குறைவான எழுத்துப் பிழைகள் மட்டுமே உடைய) புத்தகத்தை உருவாக்க முடியும்.

அதுமட்டுமல்ல, ஒரு புத்தகத்தை எழுதியவர் அந்தப் புத்தகத்தின் ப்ரூஃப் படிக்கும் போது அவர் கண்களில் எழுத்துப் பிழைகள் படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

தெய்வத்தின் குரல் ஏழாம் பகுதி தவிர மீதி ஆறு பாகங்களையும் அண்ணா மட்டுமே ப்ரூஃப் படித்தார். ஏறக்குறைய அச்சுப் பிழைகளே இல்லை என்று சொல்ல முடிகிற அளவு மிகக் குறைவான பிழைகளுடன் வெளிவந்துள்ள நூல் தொகுதி அது.

என் பார்வையில் இது மிகப் பெரிய விஷயம்.


இதில் இன்னொரு விஷயமும் உண்டு.

தற்போது நம்மிடையே பெரியவா ஸ்தூலமாக இல்லை. பெரியவா ஜீவிதத்தில் நடந்த விஷயங்கள், அவரது உபதேசங்கள் முதலானவற்றை நாம் புத்தகங்கள் வாயிலாகவே அறிய முடியும். நம்மிடையே இருக்கும் ஒருசில அன்பர்கள் வாயிலாக அறிந்து கொள்வதும் சாத்தியமே. எனினும், அதற்கான வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைத்து விடுவதில்லை.

பெரியவா-காந்திஜி சந்திப்பு பற்றி ஓர் எழுத்தாளர் சொல்லி இருக்கும் பொய்களைப் பற்றி எழுதி இருந்தேன். அவருக்குப் பெரியவா மீதும் நமது பாரம்பரியத்தின் மீதும் மரியாதை இல்லை. எனவே, அவரது செயல் இப்படித் தான் இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால், பெரியவா மீது பக்தி இருக்கிறது என்று சொல்லிக் கொள்ளும் எத்தனையோ பேர், தற்காலத்தில், அவரைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாகப் பல்வேறு தளங்களில் எழுதி வருவதைப் பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது.

அதேநேரத்தில், பெரியவா வாழ்க்கைச் சம்பவங்கள் குறித்து அண்ணா எழுதியுள்ள பல்வேறு நூல்களும் , தெய்வத்தின் குரல் தொகுப்பும் பெரியவாளின் வாழ்க்கை, வாக்கு ஆகிய இரண்டையும் அப்படியே நமக்குத் தருகின்றன. அதிலும் குறிப்பாக, தெய்வத்தின் குரல் தான் பெரியவா என்னுமளவு அந்த நூல் உள்ளது.

எவ்வாறு இனிமேல் பெரியவாளை நாம் விக்கிரகம், படங்கள் முதலிய வடிவங்களில் மட்டுமே தரிசிக்க முடியுமோ, பெரியவாளின் குரலை எலக்ட்ரானிக் சாதனங்கள் வழியாகவே செவிமடுக்க முடியமோ, அதுபோலவே, அவரது உபதேசங்களை தெய்வத்தின் குரல் வழியாக மட்டுமே முழுமையாக அறிய முடியும்.

anna alias ra ganapathy14 - 4

அண்ணாவின் பணிகள் நிறைவு பெறவில்லை என்பது குறித்து மேட்டூர் ஸ்வாமிகள் வருத்தம் தெரிவித்ததைக் குறிப்பிட்டிருந்தேன். இதேபோல எத்தனையோ பக்தர்களுக்கும் அண்ணா மீது வருத்தம் இருக்கலாம்.

இத்தகைய வருத்தம் போற்றுதலுக்குரியது, மதிக்கத் தக்கது.

அதேநேரத்தில், அண்ணா எந்த அளவு தெய்வத்தின் குரலைத் தொகுத்திருக்கிறாரோ, அது தான் – அது மட்டுமே தான் – பெரியவா என்பதே தற்காலத்திய நிலை.

இந்த யதார்த்த உண்மையைப் புரிந்து கொண்டால் அண்ணா உழைத்த உழைப்பின் மகத்துவம் புரியும்.

பாமரர்கள் மட்டுமல்ல, ஆன்ம சாதகர்களும் உயர்ந்த ஆன்மிக அனுபவங்கள் கிடைக்கப் பெற்ற மேலோரும் கூட இதற்காக அண்ணாவுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள்.

அண்ணா என் உடைமைப் பொருள் (44): தெய்வத்தின் குரல்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply