திருப்புகழ்க் கதைகள் 207
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
சிந்துர கூரமருப்பு – பழநி
காண்டவ வன தஹனம் 1
அக்னியே நீ ஏன் இந்தக் காட்டை எரிக்க இவ்வளவு முயற்சி செய்கிறாய்? என அர்ச்சுனன் கேட்க அதற்கு அக்னி “இந்திரனுக்கு ஒப்பானவனும், கொடையளிப்பதில் தனக்கு ஈடு இணையில்லாதவனும், சிறந்த புத்தியுள்ளவனுமாகிய சுவேதகி என்ற அரசன் ஒருவன் இருந்தான். அவன் நிறைய தக்ஷணைகள் கொடுத்து நிறைய வேள்விகள் செய்தான். அவனுக்கு யாகங்களும் தானங்களுமே பிரதானமாக இருந்தது. அதை விடுத்து ராஜாங்க காரியம் எதையும் அவன் நடத்தவில்லை. அவன் ஒருமுறை நூறு வருட காலத்திற்கு ஒரு யாகம் செய்ய முன்வந்தான். சர்வேஸ்வரனின் அருளால் அவன் அந்த யாகத்தைச் செய்தான்.
அந்த யாகத்தில் பன்னிரெண்டு வருஷகாலம் நெய்யுண்ட அக்னிக்கு திருப்தி உண்டாயிற்று. அதானால் மற்ற ஹோமங்களிலிருந்து திரவியங்களைக் கொண்டு செல்லவில்லை. அதனால் ஒளி குன்றிப்போனான். வாட்டமடைந்தான். இது பற்றி பிரம்மாவிடம் முறையிட்டபோது, அவர் காண்டவ வனத்தை எரித்துச் சாப்பிட்டால் இந்த நோயிலிருந்து விடுபடுவாய் எனக் கூறினார்.
அதனால் அக்னி அந்தக் காட்டைத் தின்ன வந்தான் ஆனால் அவன் முயற்சி ஏழுமுறை தடுக்கப்பட்டது. அக்னி மிகவும் ஆத்திரமடைந்தான். மீண்டும் பிரம்மதேவரிடம் சென்று முறையிட்டான். அவர் அவனை இன்னும் சிலகாலம் பொறுத்திருக்கும்படியும் அப்பொது நரநாராயணர்கள் அவன் உதவிக்கு வருவார்கள் என்றும் கூறினார். நரநாராயணர்களாக அர்ச்சுனனும் கிருஷ்ணனும் அவதரிப்பதை அறிந்து இப்போது இங்கு வந்தேன் என அக்னி கூறினான்.
தனக்கு உதவி செய்வதற்காக அர்ச்சுனனுக்கு காண்டீவம் என்னும் வில்லையும் அஸ்திரம் வற்றாத இரண்டு அம்பறாத் தூணிகளையும் அனுமன் கொடியோடு கூடிய ரதத்தையும் கொடுத்தான். பின்னர் கிருஷ்ணரைத் துதித்து அவருக்கு ஆக்னேயாஸ்திரத்தையும் சக்ராயுதத்தையும் அளித்தான். பின்னர் அக்னி உடனே பெரும் ரூபமெடுத்துக்கொண்டு, ஏழு பாகங்களாகப் பிரிந்து, காண்டவ வனத்தை சுற்றிக்கொண்டான் வனத்துக்குள் இருந்த விலங்குகளுக்கு அங்கிருந்து எப்படி தப்பிப்பது என்று பெரும் சவால் ஏற்பட்டது. காட்டின் இருபுறமும் அர்ஜுனனும் கிருஷ்ணனும் அரண் போல ரதங்களில் நின்று கொண்டார்கள். தீயிலிருந்து தப்பித்து வரும் விலங்குகளை வேட்டையாடினார்கள். வனத்தின் மரங்களிலிலிருந்த பக்ஷிகள் வெப்பம் தாளாமல் விண்ணுக்கு ஏறிய போது அர்ஜுனனின் காண்டீவத்தால் அங்கமெல்லாம் அம்பு தைக்கப்பட்டு எரியும் நெருப்பில் அக்னிக்கு உணவாக விழுந்தன. காட்டுப் பிராணிகளின் கதறும் ஒலி சமுத்திரத்தைக் கடைவது போலக் கேட்டது.
இதனை அறிந்த இந்திரன் காண்டவ வனத்தின் மேலே மிகுதியான மழையைப் பெய்ய வைத்தான். உலகமே இருட்டியது போலானது. சமுத்திரமே காட்டின் மேலே வந்து கொட்டியது போல காண்டவவனத்தின் மீது மழை பெய்தது. அர்ஜுனன் தனது அஸ்திரங்களால் காண்டவ வனத்தை மூடினான். அங்கிருந்து எந்த பிராணியும் தப்பிக்க முடியாதது போலாயிற்று. காண்டவ வனம் எரியும் போது தக்ஷகன் என்னும் நாகர்களின் அரசன் குருக்ஷேத்திரத்திற்குப் போயிருந்தான். அவன் மகன் அசுவஸேனன் அங்கிருந்தான். தீயிலிருந்து விடுபட்டு ஓடிவிட மிகவும் பிரயர்த்தனப்பட்டான். அசுவஸேசனனின் தாயாகிய நாககன்னிகை அவனை விடுவிக்கும் பொருட்டு அவனை விழுங்கினாள். பின்னர் மேலே கிளம்பினாள். அசுவஸேனனைக் காப்பாற்ற இந்திரன் அர்ச்சுனனுடன் துவந்த யுத்தம் செய்ய ஆரம்பித்தான். இருவரும் ஆக்ரோஷமாகச் சண்டையிட்டார்கள். இடி மின்னல்கள் உண்டாக்கும் அதிக மழை வர்ஷிக்கும் அஸ்திரத்தை இந்திரன் பிரயோகிக்க அர்ஜுனன் வாயுவாஸ்திரத்தைப் பிரயோகித்து அடக்கினான். சட்டென்று மழைத்தாரகைகள் மறைந்துபோயின. இருள் நீங்கியது. குளிர்ந்த காற்று வீசி அமைதியான சூழல் நிலவியது.
அக்னி இன்னமும் ஆவேசத்துடன் பிராணிகளின் கொழுப்பை விழுங்கி எரிய ஆரம்பித்தான். இப்போது பக்ஷிகள் கூட்டம் கிருஷ்ணார்ஜுனர்களை எதிர்த்தது. அவர்களோடு கூட நாகர்கள் விஷத்தைக் கக்கிக்கொண்டு அர்ஜுனன் அருகில் வந்தார்கள். பாணங்களினால் அவற்றை அறுத்தான் அர்ஜுனன். இந்திரனுக்கு கோபம் பொங்கியது. வஜ்ராயுதத்தை ஓங்கிக்கொண்டு ஐராவதத்தில் ஏறி அர்ஜுனனுடன் சண்டையிடுவதற்கு வந்தான்.
இந்திரனே வஜ்ராயுதத்தை தூக்கிய பிறகு இதர தேவர்களும் ஆயுதபாணிகளாக களம் புகுந்தார்கள். கிருஷ்ணார்ஜுனர்களை எதிர்த்து யுத்தம் செய்ய வந்தார்கள். அர்ஜுனன் அனைவரையும் பந்தாடினான். தேவக்கூட்டத்தையே பின்வாங்கச் செய்த கிருஷ்ண அர்ஜுன பராக்கிரமத்தைக் கண்டு ரிஷிகள் வியந்தார்கள். இந்திரன் சினத்தால் முகம் சிவந்தான்.
பிறகு என்ன ஆனது?
<
p class=”has-text-align-center”>சிந்துர கூரமருப்பு – பழநி
காண்டவ வன தஹனம் 2
அர்ஜுனனின் பராக்கிரமத்தை அறிய விரும்பிய இந்திரன் கல் மழை பொழியச் செய்தான். அர்ஜுனனின் காண்டீவத்திலிருந்து புறப்பட்ட அம்புகள் கற்களை மறைத்து விண்ணுலகம் அனுப்பியது. இந்திரன் அதிர்ந்தான். பின்னர் அதைவிட வேகமாக கல் மழை பொழியச்செய்தான். அர்ஜுனன் அசரவில்லை. மின்னலெனப் புறப்பட்ட அம்புகள் அவைகளைத் தடுத்தன.
இங்கே யுத்தம் நடந்துகொண்டிருக்கையில் அக்னி தனது வேலையில் மும்முரமாக இருந்தான். காண்டவ வனத்தின் முக்கால் பங்கை பக்ஷித்திருந்தான். இந்திரன் உடனே மந்த்ர மலையின் மரங்களர்ந்த ஒரு சிகரத்தைப் பெயர்த்து அர்ஜுனன் மீது எறிந்தான். ஜ்வலிக்கின்ற அம்புகளை அதன் மீது எய்தான் பார்த்தன். அந்த மலைச் சிகரம் ஆயிரமாயிரம் துண்டுகளாக உடைந்து காண்டவ வனத்தின் மீது விழுந்து எஞ்சியிருந்த பிராணிகளைக் கொன்றது.
கிருஷ்ணர் தனது சக்ராயுதத்தைப் பிரயோகித்தார். வனத்தினுள் புகுந்து சர்ப்பங்களையும் பேய் பைசாசங்களையும் அறுத்து விட்டு திரும்பத் திரும்ப அவர் கைகளில் சக்ராயுதம் தஞ்சமடைந்தது. கிருஷ்ணனின் சக்ரம் அல்லது அர்ஜுனன் காண்டீவம் என்று இருமுனைத் தாக்குதலில் அந்த இடம் பிரளயகாலம் போல காட்சியளித்தது. தேவர்கள் திரும்பிச் சென்றனர். அர்ஜுனனின் பராக்கிரமத்தைச் சிலாகித்துக் கொண்டிருந்தான் இந்திரன். அப்போது ஒரு அசரீரி ஒலி கேட்டது. “இந்திரனே! உன்னுடைய நண்பன் தக்ஷகன் காண்டவ வனத்தில் இல்லை. அவன் குருக்ஷேத்திரத்தில் இருக்கிறான். கிருஷ்ணார்ஜுனர்களை எவ்விதத்திலும் உன்னால் தோற்கடிக்க முடியாது. இந்தக் காண்டவ வனம் அழிவது விதியினால் நேர்ந்தது. நீ இதை விட்டுச் செல்லலாம்” என்று கம்பீரத் த்வனியுடன் சொன்னது.
இந்திரன் அந்த இடத்தை விட்டு அகன்றான். அக்னி வாயுவுன் துணையோடு காண்டவ வனத்தை வேகமாக எரிக்க ஆரம்பித்தான். அப்போது மயன் என்னும் அசுரன் தக்ஷகன் வீட்டிலிருந்து தப்பித்து ஓடினான். அதைப் பார்த்த கிருஷ்ணன் அவன் மேல் சக்ராயுதத்தை ஏவத் தயாரானான். அப்போது அவன் நேரே அர்ஜுனன் காலடியில் வந்து விழுந்து அபயம் கேட்டான். அர்ஜுனனும் அவனைக் காப்பாற்றுவதாக வாக்குதத்தம் செய்தான். மயன் தப்பிக்க நினைத்த தினம் அக்னி காண்டவ வனத்தை எரிக்க ஆரம்பித்து பதினைந்து தினங்கள் ஆகியிருந்தது. அந்த வனத்தில் அசுவஸேனன், மயன் மற்றும் சார்ங்கம் என்ற நான்கு பக்ஷிகள் மட்டும் அழிவில்லாமல் இருந்தது.
சாரங்க பறவைகள்
மந்தபாலர் என்னும் மஹரிஷி. வேதம் ஓதி தர்மத்தில் நின்றவர். அவர் தேகம் விட்ட பிறகு பிதிர்லோகத்தை அடைந்தார். அந்த லோகங்கள் மூடிக்கிடந்தன. தவத்தின் பலனை அடையவில்லை என்று வருத்தமுற்று யமனுக்குப் பக்கத்திலிருந்த தேவர்களிடம் “ஏன் எனக்கு இவ்வுலகங்கள் மூடிக்கிடக்கின்றன” என்று கேட்டார். “பிராம்மணரே! புத் என்ற நரகத்திலிருந்து காப்பதற்கு புத்திரன் இருக்க வேண்டும். உமக்கு சந்தானமில்லை. ஆகையால் இக்கதவுகள் மூடிக்கிடக்கின்றன”என்று கூறினர்.
உடனே எளிதில் புத்ர சந்தானம் ஏற்படும் வழி என்ன ஆராய்ந்தார். பக்ஷி ரூபமெடுத்தால் குஞ்சுகள் நிறைய ஒரே நேரத்தில் பிறக்கும் என்பதால் சார்ங்க பக்ஷி ரூபமெடுத்து ஜரிதை என்கிற சார்ங்கியை அடைந்து நான்கு புத்திரர்களைப் பெற்றார். அவைகள் சிறு குஞ்சாக இருக்கும்போதே விட்டுவிட்டு லபிதை என்னும் இன்னொரு சார்ங்கியிடம் சென்றுவிட்டார்.
லபிதையுடன் காண்டவ வனத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்த சார்ங்க ரூப மந்தபால மஹரிஷி அக்னியைக் கண்டார். அவன் தனது குஞ்சாக இருக்கும் புத்திரர்களை எரித்துவிடுவானே என்று பயந்து அவனைத் துதித்தார். அவனும் அவரது ஸ்தோத்திரத்தில் மகிழ்ந்து அந்தக் குஞ்சுகளை எரிக்கமாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்தான்.
ஜரிதையுடன் ஒரு உயர்ந்த மரத்தின் கூட்டில் வசித்துக்கொண்டிருந்த அந்த இறகு முளைக்காத குஞ்சுகள் அக்னி தங்களை எரித்துவிடும் என்று பீதியில் இருந்தன. ஜரிதையும் மிகவும் வருத்தமுற்றாள். அப்போது அந்த மரத்தின் கீழியிருக்கும் எலி வளையில் அந்தக் குஞ்சுகளை நுழைத்துக் காப்பாற்ற எண்ணினாள். ஆனால் அவைகள் அதற்கு மறுத்துவிட்டன. எலி கடித்து சாவதற்கு பதில் அக்னியில் எரிந்து உயிரை விட்டால் பிரம்ம லோகம் கிடைக்கும். ஆகையால் நாங்கள் வரமாட்டோம் – என்றன.
“அந்த எலியை ஒரு பருந்து தூக்கிக்கொண்டு போய்விட்டது. ஆகையால் அங்கே எலி இல்லை. நீங்கள் எல்லோரும் அதில் நுழைந்துகொள்ளுங்கள். நான் காப்பாற்றுகிறேன்” என்று கெஞ்சினாள் ஜரிதை. ஆனால் அவைகள் அவ்விடம் விட்டு வர மறுத்தன. உடனே ஜரிதை அக்னி பயமில்லாத வேறிடம் பறந்து சென்றுவிட்டாள்.
அக்னி அந்த மரத்தை நெருங்கினான். அப்போது அந்த சார்ங்க பக்ஷிகள் அழுதுகொண்டே அவனைத் துதித்தன. “எங்கள் தந்தை யாருடனோ சென்றுவிட்டார். தாயும் பறந்துவிட்டாள். எங்களை நீ ரக்ஷி” என்று சொல்லி அவனை ஸ்தோத்திரம் பாடின. அதில் அகமகிழ்ந்த அக்னி “உங்கள் தந்தையான மந்தபாலர் ஏற்கனவே என்னைத் துதித்து உங்களை எரிக்காமல் இருக்க வரம் கேட்டார். கொடுத்துவிட்டேன். உங்களைத் தகிக்க மாட்டேன்” என்று வரம் கொடுத்துச் சென்றுவிட்டான்.