திருப்புகழ்க் கதைகள் பகுதி – 270
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
இருவினை புனைந்து – சுவாமி மலை – சிவராத்ரி
இவ்வருடம் (2022ஆம் ஆண்டு) மகா சிவராத்ரி மார்ச்சு ஒன்றாம் நாள் செவ்வய் கிழமை வருகிறது. மஹா சிவராத்திரியை ஒட்டி கூறப்படும் கதைகளுள் திசைமுகனும் விஷ்ணுவும் அடி முடி தேடிய கதையும் ஒன்று. திசைக்கு ஒன்றாக தலைகள் நான்கு அமைந்துள்ளதால் ப்ரம்மாவிற்கு திசைமுகன் எனப் பெயர். இந்த அடிமுடி தேடிய கதையின் தாத்பரியம் என்னவென்று ஆராய்ந்தால் சில ஆச்சர்யமான விளக்கங்கள் புலப்படுகின்றன. அவை என்ன என்று அறிந்து கொள்ள முதலில் சிவராத்திரியின் மகத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஓராண்டிற்கு மொத்தம் நான்கு சிவராத்திரிகள் வருவதாக கந்த புராணம் கூறுகிறது. முதலாவதாகச் சொல்லப்படுவது நித்ய சிவராத்திரி. இது தினந்தோறும் பகலுக்குப்பின்னர் உயிர்களை உறங்கவைக்கும் இரவாக வருவது. ஒவ்வொரு இரவும் சிவனது ராத்திரிதான். ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழில்களைச் செய்யும் மூன்று கடவுள்களுள், சிவனது பொறுப்பில் வருவது இறப்பு போன்ற உறக்கம். அதே போல் உயிர்களை விழிக்கச் செய்யும் நேரம் பிரமனது தொழில் சுறுசுறுப்பாக நடைபெறும் நேரம். உயிர்கள் தத்தம் கடமைகளையும், செயல்களையும் செய்யும் நேரம், காக்கும் தெய்வமான விஷ்ணுவின் நேரம்.
இதன் அடிப்படையில்தான் நாளைப் பகுத்துள்ளனர் பெரியோர். விடிகாலை 4 மணி முதல் 8 மணி வரை உள்ள நேரம் நான்முகப் பிரமன் செயலாற்றும் நேரம். அந்நேரத்தில் செய்யும் நியமங்கள் சத்துவத்தை அதிகப்படுத்துவன. அந்நேரத்தில் உட்கொள்ளும் உணவு சுறுசுறுப்புக்கும், உடல், மன வளர்ச்சிக்கும் உதவுவதாக அமையும். காலை 8 மணி முதல் முன்மாலை 4 மணி வரை விஷ்ணுவின் நேரம். இந்த நேரத்தில் உடலும், உள்ளமும் நன்கு உழைத்து, செயலாற்ற ஒத்துழைக்கும். மாலை 4 முதல் இரவு 8 மணி வரை மீண்டும் பிரமனின் நேரம். பிரமன் தொழிலாக, மீண்டும் உடல் மற்றும் மனதின் புத்துணர்வுக்கு ஓய்வும், உணவும் உடலில் ஒட்டும் நேரம் இது. அதன் பிறகு, இரவு 8 மணி முதல், காலை 4 மணி வரை சிவனது நேரம். செயல்பாடுகள் நின்று, இறப்பு போன்ற தூக்கத்தில் அமிழும் நேரம் அது.
இவற்றுள், அழித்தல் கடவுளான சிவனது நேரம் இரவாக இருக்கவே ஒவ்வொரு இரவும் சிவராத்திரிதான். இரண்டாவது சிவராத்திரி மாத சிவராத்திரி எனப்படுவது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்தசியில் வருவது. இதுவும் ஒருவித அழித்தலைக் குறிப்பது. பௌர்ணமியில் ஒளிர்ந்த சந்திரன், தேய்ந்து முழுவதும் மறைவதற்குமுன் வரும் ராத்திரி மாத சிவராத்திரி ஆகும்.
மூன்றாவது சிவராத்திரி வருடம்தோறும் மாசி மாதம் தேய்பிறையில் முதல் 13 நாட்களும் அனுஷ்டிக்கப்படுவது. அது முடிந்த 14ஆம் நாள் வரும் மகா சிவராத்திரி, நாலாவது சிவராத்திரி ஆகும்.
இனி அடி-முடி தேடிய கதை என்னவெனக் காணலாம். “யார் பெரியவர்? நானா நீயா?” என்ற வாக்கு வாதம் ஒருமுறை ஆக்கும் கடவுளான பிரம்மனுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்குமே வந்ததாக ஸ்ரீ அருணாச்சல புராணம் கூறுகிறது. ஆருத்ரா தரிசனம் மற்றும் மஹா சிவராத்திரி நாட்களுக்கு இடையே நடந்த அந்த வாதமே அருணகிரி எனப்படும் திருவண்ணாமலை உருவானதற்குக் காரணமாக அப்புராணம் கூறுகிறது. தெய்வீகத்தன்மை நிறைந்த அந்நிகழ்ச்சி, வேறு பல விஷயங்களையும் உணர்த்துகின்றது.
தான் ஆக்குவதனாலேதான் காப்பதற்கு உயிர்கள் இருப்பதால் ‘தானே பெரியவன்’ என்று பிரம்மாவும், தான் காப்பதினால்தானே எவரும் உயிரோடிருப்பதால் ‘தானே பெரியவன்’ என்று விஷ்ணுவும் வாதித்துக் கொண்டிருந்தனர். இந்த வாதம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்ததால், அவர்களின் தொழிலை நம்பி இருந்த அனைவரும் பாதிக்கப்பட்டனர். வாதம் ஒரு முடிவுக்கும் வராது முற்றிக்கொண்டு இருந்ததால், முழு முதற் கடவுளாகிய பரமசிவன் அவர்கள் முன் ஆகாயத்திற்கும் பூமிக்கும் பரவியிருக்கும் ஒரு அக்னிப் பிழம்பாகத் தோன்றினார். அசரீரியாக ‘எவர் முதலாவதாக தனது அடியையோ முடியையோ காண்கிறாரோ, அவரே பெரியவர்’ என்று கூறுகிறார். அவர்களிருவரும் தங்கள் தங்கள் பெருமையிலேயே மூழ்கியிருந்ததால், தம் முன் வந்தவர் யார் என்று கூட அறிய இயலவில்லை. உடனே விஷ்ணு ஒரு வராஹ உருவம் எடுத்துக்கொண்டு பூமியைத் துளைத்துக்கொண்டு அடியைக் காணவும், பிரம்மன் ஓர் அன்னப் பறவை வடிவம் எடுத்துக்கொண்டு மேலே பறந்து சென்று முடியைக் காணவும் சென்றனர்.
பிரம்மன் இறைவனின் திருமுடியைக் கண்டாரா? பின் என்ன ஆனது? நாளை காணலாம்.