e0af8d-e0aeb5e0aeb4e0aebfe0ae95.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ் கதைகள் பகுதி 23
– முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் –
பக்கரை விசித்ரமணி திருப்புகழ்
நினைத்தாலே முத்தி அளிக்கக் கூடிய திருவண்ணாமலையில் நம் அருணகிரிநாதப் பெருமான் முன்னிலையில் முருகப் பெருமான் தோன்றி “முத்தைத் தரு” என்று அடியெடுத்துத் தந்து மறைந்தார். அருணகிரியாரும் அந்தத் திருப்புகழ் ஒன்றினை மட்டும் பாடி, அங்கேயே சிவயோகத்தில் இருந்தார்.
அப்போது முருகவேள் அசரீரியாக “நம் வயலூருக்கு வா” என்றருள் புரிய, அருணகிரியார் வயலூர் போய் ஆண்டவனைப் பணிந்தார். அத்தலத்திலே அருணகிரியார் இங்கே நான் என்ன வகையிலே திருப்புகழ் பாடுவேன் என ஆண்டவனிடத்தில் முறையிட்டார்.
அப்போது கந்தவேள் என்னுடைய வேல், மயில் ஆகிய ஒவ்வொன்றையும் வைத்துப் பாடு என்று பணித்தார். உடனே அருணகிரியார் வயலூரில் எழுந்தருளியுள்ள பொய்யா கணபதி சந்நிதியில் நின்று, “கைத்தல நிறைகனி” என்ற திருப்புகழைப் பாடிய பின் தனக்கு முருகவேள் கூறிய அனுக்கிரகத்தை மறவேன் என்று இத்திருப்புகழைப் பாடினார்.
அந்தப் பாடல் இதோ –
பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பட்சியெனு முக்ரதுர …… கமுநீபப்
பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை …… வடிவேலும்
திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றியப …… னிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
செப்பெனஎ னக்கருள்கை …… மறவேனே
இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
எட்பொரிய வற்றுவரை …… இளநீர்வண்
டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
ரிப்பழமி டிப்பல்வகை …… தனிமூலம்
மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
விக்கிநச மர்த்தனெனும் …… அருளாழி
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தகம ருப்புடைய …… பெருமாளே.
இத் திருப்புகழின் பொருளாவது – கரும்பு, அவரை (விதைகள்), நல்ல பழ வகைகள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, (கொழுக்கட்டை) அப்ப வகைகள், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், இடித்துச் செய்யும்படியான பலவகைச் சிற்றுண்டிகள், இனிப்புச்சுவைமிகுந்த, நிகரற்ற கிழங்குகள், மிகுந்த அன்னம், கடலை, இவை முதலான (சத்துவகுண) ஆகாரங்களை உணவாகக் கொள்ளுகின்றவரும், ஒப்பற்றவரும், விக்கினங்களை ஆக்கவும், நீக்கவும் வல்லவருமான கருணையங்கடலே!
கயிலாய மலையில் வசிப்பவரும், வளைவான சடாமகுடத்தை உடையவரும், (ஒருவராலும் எடுக்க முடியாத மகாமேரு கிரியாகிய) வில்லையுடையவரும், பெரிய பொருளும், உலகங்களுக்கெல்லாம் தந்தையுமாகிய சிவபெருமானருளிய ஞானவடிவினரே!ஒற்றைக் கொம்பையுடைய பெருமையில் சிறந்தவரே!
அங்கவடியை யுடையதும், விசித்திரமானதும் ரத்தினங்களைப் பதிய வைத்துள்ளதுமான பொன்னாலாகிய சேணத்தையிட்டு அலங்கரிக்கப்பட்டதும், வேகமான நடையுடையதும், உக்கிரம் பொருந்தியதுமாகிய பட்சியென்று சொல்லும்படியான (குதிரையையும்) மயில் வாகனத்தையும், இலக்கத்தொன்பன் வீரர்களையும் மாயையால் மயக்கிய) கிரவுஞ்ச மலையை அடியோடு (அதன் மாயையும்) பிளந்தழியுமாறு விட்டருளிய (ஞான சக்தியாகிய) வடிவேலாயுதத்தையும், அட்டதிக்குகளும் மதிக்குமாறு கெம்பீரமாகப் பறந்து வருகின்ற குக்குட துவசத்தையும், எல்லா உலகங்களுக்கும் உயிர்களுக்கும் காவலாக இருந்து திருவருள்பாலிக்கும் சிறியத் திருவடியையும் வல்லபத்தில் முதிர்ந்த பன்னிரு புயாசலங்களையும் வயலூர் என்னும் புனித திருத்தலத்தையும், அமைத்து (அருள்நாத வொலியால்) உயர்ந்த திருப்புகழை (உலகம் உய்யுமாறு) சொல்லக் கடவாயென அடியேனுக்குத் திருவருள் புரிந்த அருள்நெறித் தொண்டை ஒரு காலத்தும் மறக்க மாட்டேன்.
இதில் உள்ள கதைகள் என்னென்ன என பார்ப்போம்…
திருப்புகழ் கதைகள்: வழிகாட்டிய வயலூர் முருகன்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.