.jpg" style="display: block; margin: 1em auto">
63. தானம் எவ்வாறு செய்ய வேண்டும்?
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
“ஸ்ரத்தயா தேயம்” – யஜுர்வேதம்
“எது கொடுத்தாலும் சிரத்தையோடு கொடுக்க வேண்டும்”
நாம் எவ்வாறு தானம் செய்ய வேண்டும் என்பது பற்றி வேத விஞ்ஞானம் சிறந்த புரிதலை அளித்துள்ளது.
பாத்திரம் அறிந்து தானம் செய்ய வேண்டும் என்று கூறும் போதே அதனை சிரத்தையோடு கொடுக்க வேண்டும் என்றும் கூறுகிறது. தானம் என்னும் செயலால் இருப்பவரும் இல்லாதவரும் வாழும் சமுதாயத்தில் சற்றாவது சமநிலை நிலவும்.
செல்வம் இருப்பது சுக போகத்திற்காக அல்ல. அதில் சிறு பகுதியையாவது பாத்திரமறிந்து பகிர வேண்டும் என்று எடுத்துரைக்கிறது வேத கலாசாரம். இதன்மூலம் செல்வந்தன் என்ற கர்வம் குறையும் வாய்ப்புள்ளது. தனம் என்னுடையது என்ற கர்வத்தோடும், நான் தானம் செய்கிறேன் என்ற பெருமையோடும் தானம் செய்யக்கூடாது என்று எச்சரிக்கிறது வேதம்.
“ஸ்ரத்தயா தேயம்” என்ற வாக்கியத்தோடு கூட “”பியா தேயம்“, ஹ்ரியா தேயம்“என்றும் உபதேசிக்கிறாள் வேதமாதா.
என்னால் வேண்டிய அளவு கொடுக்க இயலுகிறதோ இல்லையோ! என்ற அச்சமும், இத்தனை குறைவாகத்தான் கொடுக்கிறேன் என்ற நாணமும் தானம் செய்பவருக்கு இருக்க வேண்டும் என்பது இதன் பொருள்.
தானமளிப்பவர் தாழ்ந்தும், பெறுபவரை பரமேஸ்வரனாகக் கருதியும் அளிப்பது என்பது மிக உயரிய சிந்தனை. இது கொடுப்பவரிடம் வரக்கூடிய அகங்காரத்தை நீக்கக்கூடிய வழிமுறை. பெறுபவர் கூட கிருஷ்ணார்ப்பணம் என்றோ சிவார்ப்பணம் என்றோ கூறி ஏற்கிறார். அவருக்கும் கர்வமோ, பேராசையோ ஏற்படக்கூடாது என்ற கருத்தும் இதில் உள்ளது.
செல்வமிருந்தும் தானம் செய்யாதவர், ஏழ்மையில் இருந்தும் தவம் செய்யாதவர்… இருவரும் வீண் என்று வேதநூல் போதிக்கிறது.
தரித்திரம் நிரம்பியவர் பிறர் செல்வத்தின் மேல் ஆசைகொண்டு யாசகம் செய்து வாழக்கூடாது. தன் காலத்தை தவத்தில் அதாவது ஸ்வதர்மத்தை மேற்கொண்டு அனுஷ்டானத்தில் ஈடுபட வேண்டும் என்று எச்சரிக்கிறது.
அதுவரை பிரம்மச்சரிய ஆஸ்ரமத்தில் பயின்ற சீடனுக்கு (ஸ்நாதகம்) கல்வி முழுமையடைந்ததை அறிவித்து மேற்படி உபதேசங்களை அளித்து, இல்லறத்தை ஏற்பதற்கு அனுமதி அளிப்பார் குரு. அந்த சந்தர்ப்பத்தில் “ஸ்ரத்தயா தேயம்” என்ற உபதேசத்தை அளிப்பார்.
இல்லற வாழ்க்கை என்பது சமுதாயத்தில் ஒருவர் தேவையை மற்றவர் மூலம் தீர்த்துக் கொள்ளும் அமைப்பு. கொடுக்கல்-வாங்கல், பரிவர்த்தனை என்பது சமுதாய வாழ்வில் மறுக்க முடியாத முக்கியத் தேவை. இதில் சொந்த லாபத்திற்காக நிகழும் லேவாதேவிகள் ஒருபுறம் இருக்க, உலகியல் பயன்களுக்காக ஆசைப்படாமல் செய்யும் கொடையே தானம் எனப்படும்.
இதன் மூலம் மனிதனின் கண்ணோட்டம் உலகியலுக்கு அப்பாற்பட்டு ஆலோசிக்க முடியும். அந்தரங்கத் தூய்மைக்கு இது உதவுகிறது. ஆன்மீக நலன் என்ற திசையை நோக்கி தனிமனிதனை பயணிக்கச் செய்கிறது. சமூக நலனை எளிதாக சாதிப்பதற்குத் தகுந்த மானசீக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இந்த வழிமுறையை அறிமுகப்படுத்தினர் மகரிஷிகள்.
“மாத்ரு தேவோ பவ! பித்ரு தேவோ பவ! ஆசார்ய தேவோ பவ! அதிதி தேவோ பவ!” போன்ற வாக்கியங்களைக் கூறி குடும்பத்தாரோடு எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும் என்று போதித்தனர். அதோடு அத்யயனம் (பயில்வதும், பயிற்சி செய்வதும்) என்ற செயலிலிருந்து ஒருநாளும் விலகக் கூடாது என்றும் எல்லோரும் இடைவிடாது அத்யயனத்தில் ஈடுபடவேண்டும் என்றும் போதித்தனர். அதோடுகூட சமுதாயத்தோடு எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் போதித்தனர்.
தெய்வ, பித்ரு காரியங்களை மறக்கக்கூடாது என்று எச்சரித்தனர். சிரத்தையோடும் அச்சத்தோடும் கூச்சத்தோடும் தானம் செய்ய வேண்டும் என்று கூறியதோடு “அஸ்ரத்தயா அதேயம்” என்றார்கள். அதாவது “அசிரத்தையோடு எதையும் கொடுக்காதே!‘ என்று மீண்டும் பிரத்தியேகமாக எச்சரித்தனர்.
தேவ, பித்ரு காரியங்களுக்கு சமர்ப்பிக்கும் பொருட்களைக் கூட ஏதோ கடனே என்று அல்லாமல் சிரத்தையோடும் பக்தியோடும் சமர்ப்பிக்க வேண்டும் என்ற அறிவுரையும் இதில் உள்ளது.
அதிலும் தேவர்கள் சிரத்தையை கவனிக்கும் பார்வை கொண்டவர்கள். கொடுக்கும் பொருளை எந்த அளவு சிரத்தையோடும் அன்போடும் அளிக்கிறார்கள் என்பதை கவனிப்பார்கள். அதற்கு தகுந்த பலனையே அருளுவர்கள். இதை நினைவில் நிறுத்த வேண்டும்.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 63. தானம் எவ்வாறு செய்ய வேண்டும்? முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.