விஜயபதம் – வேத மொழியின் வெற்றி வழிகள்(9): சாம பேத தான தண்டம்..!

ஆன்மிக கட்டுரைகள்

விஜயபதம் – வேத மொழியின் வெற்றி வழிகள் -9. Discipline
(சமஸ்கிருத இலக்கியம் அளிக்கும் தலைமைப் பண்புகள், அரசு தர்மங்கள், வெற்றிக்கான வழிமுறைகள்)

தெலுங்கில் – பி எஸ் சர்மா
தமிழில் ராஜி ரகுநாதன்

Discipline

சாம பேத தான தண்டம்!

தற்போது பள்ளி ஆசிரியர்களின் கையில் பிரம்பு தென்படுவதில்லையே தவிர முன்பெல்லாம் ஆசிரியர்கள் பிரம்போடுதான் தென்படுவர். அது அலங்காரத்துக்காக அல்ல. அனேக சந்தர்ப்பங்களில் அதனைப் பயன்படுத்துவர். சிவ தனுசைப் போல் அவை உடைவதும் உண்டு. குறும்பு செய்யும் மாணவர்களின் முதுகு வீங்குவதும் உண்டு. மாணவர்களை நெறிப்படுத்துவதற்கு தண்டனை தேவைதான்.

அண்மையில் பாரத அரசாங்கம் சாலை போக்குவரத்து விதிகளை மீறுபவர்களிடம் பெரிய அளவு அபராதம் விதித்தது கூட இதற்காகத்தான். அபராத அச்சத்திலாவது வாகன் ஓட்டிகள் விதிகளைக் கடைபிடிப்பார்கள் என்பதால் செய்த தண்டனைப் பிரயோகமே அது.


அண்மையில் நிர்பயா வழக்கு தேசத்தையே உலுக்கியது. நிர்பயாவை கொடூரமாக பாலியல் வன்முறை செய்து கொன்ற குற்றவாளிகளுக்கு தண்டனை விதிப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் நீண்ட விவாதங்கள் நடந்தன. சம்பவம் நடந்ததிலிருந்து தண்டனை விதிக்கும் வரை ஊகிக்க முடியாத பல திருப்பங்கள் நிகழ்ந்த வழக்கு அது. சட்டத்திலிருக்கும் ஓட்டைகளை வெளிப்படையாக காட்டிய
வழக்கும் கூட அதுவே. அதில் ஒரு குற்றவாளி தான் சிறுவன்… மைனர் என்று கூறி தண்டனையில் இருந்து தப்பிக்கக் முயன்றான். குற்றவாளி மைனர் அல்ல என்று விசாரணையின் போதே உயர்நீதி மன்றம் குறிப்பிட்டது. அரசியல் அமைப்பில் இருக்கும் தளர்வுகளைப் பயன்படுத்தி மனித உரிமைகளைக் காரணம் காட்டி சில தீய சக்திகள் புதுப்புது யுக்திகளைக் கையாளத் தொடங்கியன.

குற்றவாளிகள குடியரசுத் தலைவரிடம் மன்னிப்பு மனு அளித்ததில் வழக்கில் மற்றுமொரு திருப்பம் நேர்ந்தது. கூர்ந்து ஆராய்ந்த குடியரசுத் தலைவர் அலுவலகம் அந்த வேண்டுகோளை ஏற்கவில்லை. தண்டனை நிறைவேற்றப்பட்டது. தண்டைக்கு உள்ள ஆற்றல் அது. செயற்கையாக ஏற்படுத்திய தடைகளை ஒதுக்கி எந்தவித தாக்கத்திற்கும் பணியாமல் சுப்ரீம் கோர்ட் தண்டனையை நிறைவேற்றிய விதம் குறித்து மக்கள் பாராட்டினர்.


இரண்டு பத்தாண்டுகளுக்கு முன் ஒரு வழக்கு நம் தேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது குண்டூரில் பயணிகளோடு இருந்த ஒரு பஸ் தீ விபத்து குறித்த வழக்கு. இரு குற்றவாளிகளின் மீது முழுமையாக விசாரணை செய்த சுப்ரீம்கோர்ட் தூக்கு தண்டனை விதித்தது. அதன் பின் அவர்கள் குடியரசுத் தலைவரிடம் மன்னிப்பு மனு விண்ணப்பித்தனர். குடியரசுத் தலைவர் அலுவலகம் முழுமையாக ஆராய்ந்து மன்னிப்புக்கு தகுதி இல்லாத வழக்காகக் கருதி அதனை நிராகரித்தது. கதை அதோடு முடியவில்லை. அதுவரை சம்பிரதாயமாக இருந்து வரும் வழிமுறைகளுக்கு எதிராக அடுத்ததாக வந்த ஜனாதிபதி மன்னிப்புக்கு சம்மதம் தெரிவித்தார். குற்றவாளிகளிடம் அனுகூலமான அம்சம் எது அவர் கண்ணில் பட்டதோ, தெரியவில்லை. “இந்தக் காரணங்களால் மன்னிப்புக்கு உத்தரவிடுகிறேன்” என்று எங்கும் குறிப்பிடவில்லை. பேருந்தை எரித்ததில் உயிரிழந்த அந்த நாற்பது பேரில் தப்பித்துக் கொள்ளும் சக்தியற்றவர்கள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், உடல் ஊனமுற்றோர் இருந்தனர். நாற்பது பேருக்கு உயிர் வாழும் உரிமையைப் பறித்த அந்த இரு குற்றவாளிகளுக்கு இந்திய நீதி அமைப்பு உயிர் வாழும் உரிமையை வழங்கியதால் நீதித்துறை ஆட்சேபனைக்கு உள்ளானது.


ராஜ தர்மங்களில் சாம, தான, பேத, தண்டம் என்ற உபாயங்கள் நான்கு உள்ளன. அதில் முதல் மூன்றும் பயன்படாத போது ‘தண்டோபாயமே’ சரணம். உசிதம் கூட.

சாம, தான, பேத, தண்டோபாயங்களில் எங்கு எதைப் பயன்படுத்த வேண்டுமோ ஹனுமான் வால்மீகி ராமாயணத்தில் விவரிக்கிறார்.
ந சாம ரக்ஷஸ்ஸு குணாய கலபதே
ந தான மர்தோபசிதேஷு யுஜ்யதே !
ந பேதசாத்யா பலதர்பிதா ஜனா:
பராக்கிரமஸ்த்வேவ மமேஹ ரோசதே !!
-சுந்தரகாண்டம் 41/3

“ராக்ஷசர்களின் விஷயத்தில் ‘சாம’ உபாயம் சரிவராது. செல்வந்தர்களிடம் ‘தான’ உபாயம் பணி புரியாது. பலத்தால் கர்வம் கொண்டுள்ளவர்களிடம் ‘பேத’ உபாயம் சரிவராது. அதனால் பராக்கிரமத்தைக் காட்டும் உபாயமான ‘தண்டோபாயமே’ சரியானது என்று தோன்றுகிறது”

“தண்டனை விதிககவிட்டால் சமுதாயத்தில் ‘மீன்’ நியாயம் பரவிவிடும். குற்றவாளிகள் சட்டம், விதி, ஒப்பந்தம் போன்றவற்றை மீறும்போது விதிக்கப்படும் தண்டனை போன்றவை இல்லாவிட்டால் சமுதாயத்தில் சின்ன மீன்களை பெரிய மீன்கள் விழுங்கிவிடுவது போல் ஆகிவிடும்” என்று அர்த்த சாஸ்திரத்தில் சாணக்கியர் எச்சரிக்கிறார்.

எளியோரை வலியோர் ஏமாற்றி அவர்களின் சொத்துக்களை சூறையாயடுவது போன்றவற்றை ‘மத்ஸ்ய’ நியாயத்துடன் ஒப்பிடுவர். கடலில் உள்ள பெரிய மீன்களுக்கு சின்ன மீன்களே உணவு அல்லவா? அவற்றை யார் தடுக்க முடியும்? எளியோரின் பாதுகாப்புக்காக தண்டனை விதிப்பது தேவையானது என்று கௌண்டில்யர் தீர்மானமாகக் கூறுகிறார்.

அப்ரணீதோ ஹி மாத்ஸ்யந்யாய முத்பாவயதி !
பலீயான் அபலம் ஹி க்ரஸதே தண்டதராபாவே !
(கௌண்டில்யரின் அர்த்த சாஸ்திரம் – பிரதம பிரகரணம் –சதுர்தாத்யாயம் )

அதனால்தான் அரசனில்லாத ராஜ்ஜியம் இருக்கக்கூடாது என்று அனைத்து நாடுகளும் வழக்கமாக கடைப்பிடித்து வருகின்றன. அரசன் மரணமடைந்தான் என்று அறிவித்தவுடனே புது அரசனை நியமிக்கும் வழக்கத்திற்கு இதுவே காரணம். “மத்ஸ்ய நியாயம் பரவிவிடும்” என்று வசிஷ்ட மகரிஷி தீர்மானித்ததாக வால்மீகி முனிவர் ராமாயணத்தில் தெரிவிக்கிறார்.

மகாபாரதம் சாந்தி பர்வத்தில் அர்ஜுனன் தண்டோபயம் குறித்து தர்ம புத்திரனிடம் நினைவுபடுத்தி இவ்வாறு கூறுகிறான்… “அரசரே! தர்மம், அர்த்தம், காமம் இவற்றைக் காப்பாற்றுவது தண்டோபாயமே! மக்களை கட்டுப்பாட்டில் வைப்பதற்கு தண்டனையைத் தவிர வேறு உபாயம் இல்லை. தண்டனை என்ற ஆயுதத்தை கை கொண்டவருக்கே பலம் என்று ராஜநீதியை அறிந்தவர்கள் கூறுவர். மக்களனைவரும் நலமாக இருக்க வேண்டுமானால் அரசன் நல்லவனாக, குணவானாக இருக்கவேண்டுமென்பது உண்மையே என்றாலும் தேவைப்படும் இடங்களில் தண்டனை எனும் நீதிச் சட்டத்தை பயன்படுத்தி மக்களை பாதுகாக்க வேண்டும். மக்கள் நலமாக இருக்கவேண்டுமென்றால் அரசர் இருக்கவேண்டும். சாமர்த்தியமுள்ள தலைவன் இல்லையென்றால் மக்களின் செல்வத்திற்கும் உயிருக்கும் பாதுகாப்பு இருக்காது”.

தண்டனை சட்டத்தைக் கடைபிடிக்கும் அரசனின் தேவையை மகாபாரதம் இவ்வாறு விளக்குகிறது…

ராஜானம் ப்ரதமம் விந்தேத் ததோ பார்யாம் ததோ தனம் !
ராஜன்யஸதி லோகஸ்ய குதோ பார்யா குதோ தனம் !!
மகாபாரதம் சாந்திபர்வம் – 57/41

“முதலில் அரசனைத தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பின்தான் திருமணமோ செல்வம் சேர்ப்பதோ செய்ய வேண்டும். மக்களுக்கு பாதுகாப்பளிக்காத அரசனால் நாட்டில் பெண்களுக்கோ செல்வத்திற்கோ பாதுகாப்பு இருக்காது”.

‘அராஜகம்’ என்றால் அரசனில்லாத தேசம். அது எப்படிப்பட்டதாக இருக்கும்? 1947ல் அகண்ட பாரத தேசத்தின் பிரிவினையின் போது நம் நாட்டு மக்கள் அதனை அனுபவித்தனர். ‘மத்ஸ்ய நியாயம்’ என்றால் என்ன என்று அப்போது புரிந்தது. லட்சக்கணக்கானோரின் உயிரும் மானமும் காற்றில் கலந்தன. வீடு வாசல் சொத்து நிலம் எல்லாவற்றையும் விட்டு விட்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு புதிதாகப் பிறந்த பாகிஸ்தானிலிருந்து பாரத தேசத்திற்கு ஓடி வந்தனர். எத்தனை காலமாலும் அணையாத நெருப்பு அது. ஆறாத காயங்கள் அவை. சாமர்த்தியமற்ற அரசர்கள் தம் கையிலிருந்த தண்டோபாயத்தை சரியாகப் பயன்படுத்தாத காரணத்தால் பிரிவினையின் போது ஹிந்துக்கள் இவ்விதம் அல்லற்பட்டனர்.

தண்டனைச் சட்டத்தில் நிகழும் தாமதம் பல சந்தேகங்களுக்கு வழிவகுக்கும். ஓரொரு முறை நம்பிக்கை கூட குறையத் தொடங்கும். அதே நேரம் அரசனின் பொறுப்பிலிருக்கும் தண்டனைச் சட்டத்தை மக்கள் தம் கையில் எடுக்கும் அபாயமும் இல்லாமலில்லை.


மனு தர்ம சாஸ்திரத்தில் தண்டனை பயத்தால் விளையும் நன்மை குறித்து விளக்குகிறார்…

சர்வோ தண்டஜிதோ லோக: துர்லபோ ஹி ஸுசிர்னர: !
தண்டஸ்ய ஹி பயாத்சர்வம் ஜகத் போகாய கலபதே !!
(மனுதர்ம சாஸ்திரம் 7-22)

“இந்த உலகம் முழுமையும் தண்டனை நீதியால் கட்டுபடுத்தப்படுகிறது. தண்டனை இல்லாமல் சன்மார்கத்தில் வாழ்வது அரிது. தண்டனை அச்சத்தால்தான் இந்த உலகம் முழுவதும் சுதந்திரமாக போகங்களையும் சுகத்தையும் அனுபவிக்கிறது”.

அரசர்களின் கடமை தண்டனை அளிப்பது. நீதி அமைப்பை நிலைநாட்டுவதற்கு தவறு செய்யும் துஷ்டர்களை தண்டிக்காவிட்டால் அந்த பாவம் தேசத்தை ஆளும் அரசனை வந்து சேரும். ‘ராஜா ராஷ்ட்ரக்ருதம் பாபம்’. அதனால் தண்டிக்க வேண்டியவர்களை கட்டாயம் உடனே தண்டிக்க வேண்டும்.

தண்டனையின் முக்கியத்துவம் குறித்துக் கூறிய மனு மற்றுமொரு முக்கிய எச்சரிக்கை செய்கிறார்.

அதண்ட்யான் தண்டயன் ராஜா தண்ட்யாம்ஸ்சை வாப்யதண்டயன் !
அயsoஸோ மஹதாப்நோதி நரகம் சைவ கச்சதி !!
(மனுஸ்ம்ருதி 8-128)

பொருள்:- “அரசாளுபவன் தண்டிக்க வேண்டியவரை தண்டிக்காவிட்டலும் தண்டிக்கக் கூடாதவரை தண்டித்தாலும் அப கீர்த்தியையும் நரகத்தையும் அடைவான்”

“மனிதனில் இயல்பாக இருக்கும் சுயநலத்தைக் கட்டுப்படுத்தும் முக்கிய உபாயம் தண்டனை. எவ்விதமாக பாரபட்சமும் இன்றி தண்டனை விதிக்கக் வேண்டும்” என்கிறார் ஆசாரியர் சாணக்கியர்.

கௌரவர்களோடு ஒப்பந்தம் செய்து கொள்ளும் உத்தேசத்தோடு கிளம்பிய ஸ்ரீகிருஷ்ணரிடம் திரௌபதி இவ்வாறு கூறுகிறாள்…

யதா வதே வத்யமானே பவேத் தோஷோ ஜனார்த்தன !
ந வைத்யஸ்யாவதே த்ருஷ்ட இதி தர்ம விதோ விது: !!
(மகாபாரதம் உத்தியோக பர்வம் 82-18)
பொருள்:-
கிருஷ்ணா! கொல்லக் கூடாதவர்களைக் கொல்வது மிகப் பெரும் தவறு. கொல்ல வேண்டியவனைக் காப்பற்றுவது கூட அதே போல் தவறு.

தண்டோ ஹி கேவலோ லோகம் பரம் சேமம் ச ரக்ஷதி !
ராஜ்ஞா புத்ரே ச ஸத்ரௌ ச யதா தோஷம் ஸமம் திருத” !!
பொருள்:-
எதிரியின் விஷயத்திலும் தன் புதல்வனின் விஷயத்திலும் எவ்விதமான பாரபட்ச மனதும் இன்றி, செய்த தவறைப் பொறுத்து தண்டனையளிக்கும் அரசனுக்கு பூவுலகில் புகழும் மேலுலகில் மோட்சமும் கிட்டும்.


தண்டனையை அமல்படுத்த வேண்டுமென்றால் தலைவனுக்கு பலரின் உதவி தேவைப்படும். எப்படிப்பட்டவரை அரசன் தன் உதவிக்கு நியமித்துக் கொள்ள வேண்டுமென்பது குறித்து மனு இவ்வாறு விவரிக்கிறார்…

“சுத்தமானவர் (பேராசையற்றவர்), பொய்யுரைக்காதவர், வேத சாஸ்திரங்களை அனுசரித்து வாழ்க்கை நடத்துபவர், ஞானம் பொருந்தியவர் (தர்மமும் தர்ம சூட்சுமமும் அறிந்தவர்) போன்றவர்களைத் தம் குழுவில் சேர்த்துக் கொண்டு தண்டனை நீதியை அமல்படுத்த வேண்டும்” (7/3௦0-32)

அதே போல் படை நாடுகள் செய்யும் அக்கிரமங்களுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கும்போதுதான் எதிரிப் படையில் கலக்கம் எற்படும்.
பகைவர்களின் பலவீனத்தைக் கண்டுபிடித்து சமயம் பார்த்து தாக்க வேண்டும். எப்போதும் அரசன் தன் பராக்கிரமத்தை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். “நித்ய முத்யத தண்ட:” – அரசன் எப்போதும் தண்டோபாயத்தை மேற்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். அறிவாளியான அரசாளுபவனின் சிந்தனை இவ்விதம் இருக்கும். தண்டநீதி அரசனில் கையில் இருக்க வேண்டிய ஆயுதம். அந்த ஆயுதத்தைப் பயன்படுத்தும் தகுதி அரசனுடையதே தவிர பிறருடையது அல்ல.


அரசன் எப்போதுமே மிருதுவானவனாக இருக்கக்கூடாது. அதற்கென்று தீவிரமாகவும் இருக்கக் கூடாது. வசந்த காலத்தில் சூரியனைப் போல் குளுமையாகவும் இன்றி, பொறுக்க முடியாத வெப்பமாகவும் இன்றி இருக்க வேண்டும்.

அலுவலகத்தில் பலரைக் கொண்டு பணி புரிய வைக்க வேண்டிய அதிகாரத்தில் உள்ள தலைவன், நேரம் பார்த்து கோபத்தைக் காட்ட வேண்டும். பணி புரியாதவர்களை விசாரிக்க வேண்டும். எப்போதும் மன்னித்து விட்டு விடுவதால் ஊழியர்களுக்கு அலட்சியம் ஏற்படும்.

வியாச முனிவர் அப்படிப்பட்ட தலைவனை ‘தர்ம விரோதி’ என்கிறார். அப்படிப்பட்ட தலைவன் தன் பொறுப்பை சரியாக செய்யாதவனாகிறான்.

ம்ருதுர்ஷி ராஜா சத்தம் சம்ங்யோ பவதி சர்வஸ: !
தீக்ஷ்ணா ச்சோத்விஜதே லோக: தஸ்மாதுபய மாஸ்ரய: !!
(மகாபாரதம் சாந்தி பர்வம் 56 -21)

பொருள்:- எப்போதும் மென்மையாக நடந்து கொள்ளும் அரசனின் பேச்சை சேவகர்கள் கூட மீறுவார்கள். அதற்காக கடுமையாக நடந்து கொண்டால் உலகம் அச்ச்சமுரும்.

அதனால் அரசன் இரு விதங்களாக நேரத்திற்குத் தகுந்தாற்போல் நடந்து கொள்ள வேண்டும். அரசன் விதிக்கும் தண்டனை நல்லதுதான். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்று தர்மபுத்திரனை எச்சரித்தார் நாரத முனிவர்.

கச்சித் த்வாம் நா வஜாநந்தி யாஜகா: பதிதம் யதா !
உக்ரப்ரதிக்ரஹீதாரம் காமயானமிவ ஸ்த்ரிய: !!
(மகாபாரதம் சபா பர்வம் 5-45)

“காமப் பிரியனாக இஷ்டம் வந்தாற்போல் திரியும் கணவனை மனைவி எவ்வாறு விட்டு விலகுவாளோ, தீய எஜமானரை சேவகன் எவ்வாறு விட்டுச் சென்று விடுவானோ, அதே போல் அளவுக்கதிகமான உக்கிரத்தோடு தண்டனையளிக்கும் அரசனை மக்கள் அவமதிப்பார்கள். அவ்வாறு உன்னை மக்கள் அவமதிக்கவில்லை அல்லவா?” என்று நாரத மகரிஷி தர்மபுத்திரனிடம் வினவுகிறார்.

கச்சின்னோக்ரேண தண்டேன ப்ருசமுத்விஜசே ப்ரஜா: !
ராஷ்ட்ராம் தவானுசாசந்தி மந்த்ரிணோ பரதர்ஷப !!
(மகாபாரதம் சபா பர்வம் 5-45)

“பாரத ஸ்ரேஷ்டனான தர்மராஜா! கடினமான தண்டனைகளால் நீ மக்களைத் துன்புறுத்தவில்லை அல்லவா?” என்று நாரதர் தர்மபுத்திரனை வினவுகிறார்.

இந்த சூத்திரங்கள் தற்கால சமுதாயத்தின் தலைவர்களுக்கும் கூடப் பொருந்தும்.

அரசரில்லாத அரசாங்கம்:-

கிருத யுகத்தில் ராஜ்ஜியம், ராஜா, ராஜ்யாதிகாரம், தண்ட நீதி போன்றவை இல்லாமலிருந்தன. குற்றம் செய்பவனே இல்லாத போது தண்டிப்பதற்கு தேவை என்ன? அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்ததாக வர்ணிக்கப்படுகிறது. ஆனால் அத்தகைய அரசாங்கம் எதனை ஆதாரமாகக் கொண்டு நடந்தது? தர்மத்தை ஆதாரமாகக் கொண்டு நடந்தது. தர்மத்தின் உதவியோடு எந்தவித வெளிப்படையான கட்டுப்பாடுமின்றி, எந்தவித சந்தேகமுமின்றி அன்போடு ஒற்றுமையாக வாழ்ந்தனர். அனைத்துலகையும் ஒரே இல்லமாக எண்ணி மனிதர்கள் அனைவரும் அமைதியோடும் சுகமாகவும் வாழ முடியும். இந்த கற்பனை நம் தேசத்தில் மிகப் பண்டைய காலத்தில் இருந்து வந்தது. நம் புராதன நூல்களும் நம் பூர்வீகர்களும் இதற்கு உதாரணங்கள்.

உண்மையில் ராஜா என்ற சொல் எப்படிப் பிறந்தது? என்று தர்மராஜன் கேட்ட கேள்விக்கு பீஷ்மர் கிருத யுகத்தில் நிலைமை எவ்வாறு இருந்தது என்பதைக் கூறி விளக்குகிறார்.

ந வை ராஜ்ஜியம் ந ராஜா ஸீத் ந ச தண்டோ ந தண்டிக” !
தர்மேணைவ ப்ரஜா ஸ்ஸர்வா: ரக்ஷந்தி ஸ்ம பரஸ்பரம் !!
(மகாபாரதம் சாந்திபர்வம் 59-14)

பொருள்:-
ஆரம்பத்தில் அரசாங்கமும் இல்லை. அரசனும் இல்லை. குற்றமும் இல்லை தண்டிப்பவரும் இல்லை. மக்களனைவரும் தர்மத்தை ஆதாரமாகக் கொண்டு ஒருவரை ஒருவர் காத்துக் கொண்டனர்.

யுகங்கள் மாறின. மானுடனுக்குள் காமம், மோகம், விருப்பு, வெறுப்பு எல்லாம் புகுந்தன. செய்யக் கூடாதவை எது? செய்ய வேண்டியது எது? என்ற விவேகத்தை இழந்தான். இதைப் பேசலாம்.. இதைப் பேசக்கூடாது… இதை உண்ணலாம்… இதை உண்ணக் கூடாது… இது தீமை, இது நன்மை என்ற வேறுபாடின்றி அனைத்தையும் செய்யத் தொடங்கியதால் சமுதாயம் தாறுமாறானது.

நஷ்டே ப்ராஹ்மணி தர்மே ச தேவாம்ஸ்த்ராஸ: சமாவிசத் !
தே தஸ்த்ரா நரசார்தூல ப்ராஹ்மணம் சரணம் யயு: !!
(மகாபாரதம் சந்திபர்வம் 59- 22)

வேதமும் தர்மமும் மதிக்கப்படாததால் தேவர்களுக்கு அச்சம் ஏற்பட்டது. பிரம்ம தேவரை சரணடைந்தனர். பிரம்மா தன் புத்தியிலிருந்து நீதி சாஸ்திரத்தை ஒரு லட்சம் அத்தியாயங்களோடு உருவாக்கி அளித்தார் அதுவே முதல் அரசாட்சி நூல்.

அதில் இந்த விஷயங்கள் முழுமையாக கூறப்பட்டன…
அமைச்சர்களின் பாதுகாப்பு
அரச தூதனின் குணங்கள்
அரச குமரனின் இயல்பு
ஒற்றர்களை நியமிப்பது
சாம, தான, பேத, தண்டம் எனும் நான்கு வித உபாயங்கள்.
புறக்கணித்தல் என்பது ஐந்தாவது உபாயம்.

நீதி சாஸ்திரத்தில் பரிபாலனைக்குத் தேவையான நான்கு வித வித்யைகள்/கலைகள் விஸ்தாரமாக வர்ணிக்கப்பட்டுள்ளன.

த்ரயா சான்வீக்ஷகீ சைவ வார்தா ச பரதர்ஷப !
தண்டநீதிஸ்ச விபுலா வித்யாஸ்தத்ர நிதர்சிதா !!

த்ரயீ – வேத அத்யயனம்
அன்வீக்ஷிதி – லௌகீக விஷய ஞானம், யோகம், சாங்க்ய யோகம்
வார்தா – விவசாயம் கால்நடை வளர்ப்பு வர்த்தகம்
தண்ட நீதி – மிக மென்மையானதும், மிகத் தீவிரமானதும் அற்ற தண்டனை.

பிரம்ம தேவர் நீதி சாஸ்திரத்தை அளித்த பின் அதனை அனுசரித்து அரசாசளுவதற்கு மகாவிஷ்ணு வேனன் என்ற அரசனை நியமித்தார். வேனனின் புதல்வனே ப்ருது சக்ரவர்த்தி. இவ்வாறு பரம்பரையாக அரச பலிபாலனை தொடர்ந்து வரும் விஷயத்தை பீஷ்மர் விவரித்தார்.


விரைவான நீதி:-

நீதி மன்றங்களில் இருக்கும் வழக்குகள் ஆண்டுக் கணக்கில் தீர்க்காமல் ஊறப் போடுவது மக்களுக்குச் செய்யும் அநியாயமே. காலம் கடந்த தீர்ப்பு நியாயமான உரிமைகளைப் பறிப்பதே அல்லவா? justice delayed is justice denied. நீதி மன்றங்கள் மீது பொது மக்களுக்கு நம்பிக்கை வளர வேண்டுமானால் வழக்குகளுக்கு துரிதமாக தீர்ப்பு வழங்க வேண்டும்.

இது குறித்து ஆச்சார்ய புல்லெல ஸ்ரீராமசந்த்ருடு தன் கௌண்டிய ஸ்மிருதியில் இவ்வாறு பரிந்துரைக்கிறார்.

க்லேசோ மகான் விலம்பே ஸ்யாத் ப்ரஜாநாம் ந்யாயநிர்ணயே !
கரிஷ்டம் காலமானம் ஸ்வாத் த்விமானம் ந ததோ திகம் !!
(கௌண்டின்ய ஸ்ம்ருதி – 475)

பொருள்:-
சரியான நேரத்தில் நீதி கிடைக்காமல் போனால் பொது மக்கள் மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் வெறும் இரண்டே மாதங்களில் தீர்ப்பு வரும்படி நீதித்துறையை வழியமைக்க வேண்டும்.

யே வா மாசத்வயா தர்வாக் அசக்தா ந்யாய நிர்ணயே !
அதிகாரீ ஸஹாயஸ்ச தஸ்தானே ந்யான் நியோஜயேத் !!
(கௌண்டின்ய ஸ்மிருதி -477)

நீதிபதிகளும் அவருடைய உதவியாளர்களும் இரண்டு மாதங்களில் வழக்கை தீர்க்காவிட்டால் அவர்களை நீக்கி விட்டு வேறு திறமையான நீதிபதிகளிடம் வழக்கை ஒப்படைக்க வேண்டும்.

பக்ஷபாததியோ த்கோ சைர்த்வேஷே நாலஸ்யதோ பி வா !
விலம்ப ஹேதவோ ந்யாயே தண்ட்யா ஏவாதி காரிண: !!
(கௌண்டின்ய ஸ்ம்ருதி -479)

பாரபட்சத்தோடு லஞ்சம் பெற்று, பகையோடு அல்லது சோம்பேறித்தனத்தோடு தீர்ப்பு கூறும் அதிகாரிகளை கட்டாயம் தண்டிக்க வேண்டும்.

ந தண்டயதி யே துஷ்டான் பாலகாஸ்தே பரோக்ஷத: !
தண்டயதி ஜனான் ஸாதூன் தத் க்ளேசானாம் விவர்தநாத் !!
(கௌண்டின்ய ஸ்ம்ருதி -480)

அரசாட்சி செய்பவர்கள் சுயநலத்தாலோ பாரபட்சமாகவோ துஷ்டர்களை தண்டிக்காமல் சாதுக்களையும் தர்மவான்களையும் சட்டத்திற்கு மதிப்பளித்து நடப்பவர்களையும் இக்கட்டில் மாட்டி விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தண்டனைக்குரியவர்கள்,


சத்ரபதி சிவாஜி அளித்த தண்டனை:-
பொருளாதார விவகாரங்களை நிர்வாகம் செய்வதில் உயர் அதிகாரிகள் தவறு செய்தால் சத்ரபதி சிவாஜி அவர்களுக்கு கடினமான தண்டனை விதித்தான். ஒரு முறை தன் தேஷ்முக், தேச குல்கர்னி, மஹாஜன் (அப்போதிருந்த நிதி பொறுப்பாளர்கள்) மற்றும் அதிகாரிகள் அனைவரையும் பன்வேல் அருகிலுள்ள பிரசல்கட் கோட்டைக்கு வரவழைத்து அரசாங்க பட்ஜெட் தயார் செய்தான். அப்போது சேவுல் (மூர்தஜபாத்) தேச குல்கர்னியான அப்பாஜி தன் அதிகாரத்திலிருந்த கிராமங்களில் இருந்து வசூல் செய்த வரிகளை சமர்ப்பிக்க வில்லை என்று தெரிந்தது. அது மட்டுமின்றி அப்பாஜி சரியாக வரி வசூல் செய்ய வில்லை என்பதும் தெரியவந்தது.

அத்தனை பெரிய உயரதிகாரியின் அலட்சியப் போக்கை சிவாஜியால் பொறுக்க முடியவில்லை. அப்பாஜியை கடுமையாக விமரித்தான். “இத்தனை சிறந்த தேச குலகர்னி பதவியில் இருந்தும் கூட நீங்கள் கணக்கை சரியாக காட்டவில்லை. உங்களுக்களித்த பொறுப்பை சரிவர நிர்வாகம் செய்யவில்லை” என்றான். சிவாஜி அப்பாஜியின் தவறைக் கண்டு கொள்ளாமல் விடவில்லை. அதனை அரச துரோகமாக நினைத்தான். அதனால் கடினமான தண்டனை கூட விதித்தான். அப்பாஜிக்கு பெரிய அளவில் அபராதம் விதித்து அவரை பதவியிலிருந்து நீக்கினான். அவருடைய இடத்தில் ஆபாஜி மகாதேவை நியமித்தான்.


“இன்றைக்கு நம் கல்வி முறை சற்றும் பாரதிய வழிமுறை இன்றி இருப்பதால் வாழ்க்கை என்னும் மாளிகைக்கு அடித்தளமான சிறு வயதில் பாரதியம் இல்லாமல் போய்விட்டது. பாரத தேசம் முழுவதும் பாரதியம் என்பது இல்லாமல் தயாராகி வருகிறது. சிறு வயதிலேயே சம்பிரதாயம், பண்பாடு, தர்மம் போன்றவற்றைப் புரியும்படி செய்தால் பின்னர் எப்படிப்பட்ட கல்வி பயின்றாலும், வேலையில் ஈடுபட்டாலும் அந்தந்த வேலையில் நல்ல முறையில் பயிற்சி பெற்று உத்தமனாக விளங்குவான். பண்டைய காலத்தில் இருந்த குருகுல வாசம் என்ற முறையை இன்று கூட நவீன முறைகளோடு வடிவமைப்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும்” – சத்குரு கந்துகூரி சிவானந்த மூர்த்தி.

சுபம்!

விஜயபதம் – வேத மொழியின் வெற்றி வழிகள்(9): சாம பேத தான தண்டம்..! News First Appeared in Dhinasari

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply