திருப்புகழ் கதைகள்: கோபத்தால் ஏற்படும் கேடுகள்!

ஆன்மிக கட்டுரைகள்

திருப்புகழ்க் கதைகள் 217
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

சீறல் அசடன் – பழநி
கோபத்தால் ஏற்படும் கேடுகள்

மருத்துவ ரீதியில் பார்த்தல், இதயம், மூளை, தசைகள் உட்பட உடலின் பல பாகங்களை கோபம் தாக்கும். 2011ஆம் ஆண்டு ஆய்வின் படி கோபம் டெஸ்டோடீரோன் (testoterone) சுரப்பு அதிகரிக்க, கார்டிசோல் (cortisol) அமிலம் குறைய காரணமாய் அமையும். கோபத்தினால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும், இதய துடிப்பு அதிகரிக்கும், அரிப்பு உண்டாகும் (tingling sensation), தசை பதைப்பு (muscle tension) அதிகமாகும். இவையெல்லாம் ஒருவரை அழிக்கும் நோய்கள்.

கோபத்தை முடிந்த அளவு கட்டுப்படுத்தினால் பின்னாட்களில் பல நன்மைகள் விளையும். காலம் ஒன்று போல் எப்பொழுதும் இருக்காது. இன்று உங்களுக்கு அதிகாரம் இருக்கிறது (அல்லது பிறருக்கு இல்லை அல்லது பிறர் பலகீனமாக இருக்கிறார்) என்பதற்காக பிறரை தாக்காதே. அவரிடம் கோபப்படாதே. ஏனெனில் பிறர் பலசாலி ஆகும் பொழுது அவன் உன் மீது பாயக்கூடும்.

கோபம் நிம்மதியைக் கெடுக்கும். நிம்மதி இல்லையென்றால் உறக்கம் இல்லை. பிறருக்கு இரக்கப்பட்டு நீ கோபம் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதல்ல. முதலில் நீ உனக்கு இரக்கப்பட்டு கோபம் கொள்ளாமல் இருக்கவேண்டும். ஏனெனில் இக்கோபம் பிறரை தண்டிப்பதை விட உன்னை எதோ ஒரு நேரத்தில் தண்டித்துவிடும். ஔவையார் “ஆறுவது சினம்” கூறுகிறார். கோபம் வந்தால் ஆறப்பொடு. அதாவது கோபம் வந்த உடனே வினையாற்றாமல் ஒருவாரம் தள்ளிப்போடு. ஒரு வாரத்தில் மனம் சமநிலையை பெற்றுவிடும். நன்கு யோசித்து முடிவெடுப்பாய்.

துறவறத்தை ஒருவர் மேற்கொள்கிறார். அவர் வேண்டுவது வீடுபேறு. அவர் வேண்டுவது ஒரு சக்தி. அதை அவர் தவம் ஆற்றிப் பெறுகிறார். ஆனால் அப்படிப்பட்ட ஒரு துறவிக்கு கோபம் வந்தால் சாபம் கொடுக்கிறார். விச்வாமித்ரர் பல தடவை தவம் செய்கிறார். பல தடவை கோபம் வந்து சாபம் கொடுகிறார். ஆதலால் அவர் தன் பலத்தை இழக்கிறார். ஆதலால் அவர் மறுபடியும் தவமும் செய்து அவர் ஆற்றலை நிறுவுகிறார்.

துறவறத்தில் சக்தி அடைய தன்னை வருத்தி விரதங்கள் பல இருந்து தவம் செய்ய வேண்டும். துறவியின் கோபத்தினால் இரண்டு தீமைகள் 1) சாபம் பலிக்கும் 2) ஆற்றல் குறையும். இதனால் துறவிக்கு பலனில்லை. மேலும் தீவினை செய்ததனால் அதற்கான வினைபயன் உன்னை வந்து சூழும். துறவு நிலையில் இருந்து மீண்டும் மனித நிலைக்கு வந்துவிடுவாய். ஆதலால் மனிதர்களுக்கு வரும் உலகியல் துன்பம் வரும். ஆதலால் கோபத்தை விட்டுவிடவேண்டும். “கோபம் பாபத்துக்கு அஞ்சாது”என்ற பழமொழியையும் இங்கே நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.

அறப்பளீசுர சதகத்தில் அம்பலவாணக் கவிராயர் கோபம் பற்றிக் கூறுகிறார். இச்சதக நூல் 96 வகை சிற்றிலக்கியங்களில் ஒன்றான சதகம் வகையைச் சார்ந்தது. பொதுவாகச் சதகம் என்பது 100 பாடல்களைக் கொண்டதாகும்.

அம்பலவாணக் கவிராயர் சீர்காழி அருணாசலக் கவிராயரின் மகனாவார். இது தவிர இந்நூலாசிரியர் குறித்த செய்திகள் ஏதும் அறிய இயலவில்லை. அறப்பளீச்சுர சதகம், கொல்லி மலையில் அமைந்துள்ள அறப்பள்ளி ஈசுவரன் மேல் பாடப்பெற்றதாகும். இந்நூல் எழுந்த காலம் 18ஆம் நூற்றாண்டு ஆகும். ஒரு நல்ல ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும். சிறந்த மாணவன் எப்படித் திகழவேண்டும். ஒரு நல்ல நகரம் எவ்வாறு அமைதல் வேண்டும்.

நல்ல அரசும், அதற்கு ஆலோசனை வழங்குபவர்களும் எவ்வாறு இருக்கவேண்டும். உடன் பிறப்பு என்பவர் எப்படி தியாக உள்ளத்தோடு திகழ வேண்டும். பொருள் சேர்க்கும் வழிமுறையானது எப்படி நல்வழியில் அமைய வேண்டும். நல்லோர்களின் இயல்பினையும், வாழ்க்கை நிலையாமையையும், வறுமையின் கொடுமை, நல்வினை, தீவினை செய்தோர் குறித்தும், ஒரு சிறந்த மருத்துவன் எவ்வாறு இருக்கவேண்டும் என்பது குறித்தும் சிறந்த பல கருத்துக்கள் பாடல்களாக இந்நூலில் காணப்படுகின்றன.

கோபத்தின் கொடுமை எவையெவை என்று அறப்பளீசுவர சதகம் என்ன கூறுகிறது என்றால் –

கோபமே பாவங்களுக்கு எல்லாம் தாய் தந்தை!
கோபமே குடி கெடுக்கும்!
கோபமே ஒன்றையும் கூடிவர ஒட்டாது!
கோபமே துயர் கொடுக்கும்!
கோபமே பொல்லாது! கோபமே சீர்கேடு!
கோபமே உறவு அறுக்கும்!
கோபமே பழி செயும்! கோபமே பகையாளி!
கோபமே கருணை போக்கும்!
கோபமே ஈனமாம் கோபமே எவரையும்
கூடாமல் ஒருவனாக்கும்!
கோபமே மறலி முன் கொண்டுபோய்த் தீய நரகக்
குழியினில் தள்ளும் ஆல்!
ஆபத்து எலாம் தவிர்த்து என்னை ஆட்கொண்டு அருளும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!

என்பதாகும்.

திருப்புகழ் கதைகள்: கோபத்தால் ஏற்படும் கேடுகள்! News First Appeared in Dhinasari

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply