682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
கங்கைகொண்ட சோழபுரத்தில் கோவில்கொண்டு அருள்பாலிக்கும், அருள்மிகு, பிரஹந் நாயகி அம்பாள் உடனுறை அருள்மிகு பிரஹதீஸ்வர ஸ்வாமிக்கும், மேலும் சில சிறு கிராம சிவன்கோவில்களுக்கும், காஞ்சி மஹா பெரியவர்களின் அனுக்கிரஹம் மற்றும் வழிகாட்டுதலின்படி அன்னாபிஷேகத் தொண்டு நடைபெற்று வருகிறது.
1985ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்புனித அன்னாபிஷேகக் கைங்கர்யம் உலகம் முழுவதும் உள்ள காஞ்சி காமகோடி மடத்தின் பக்தர்களாலும், எங்கும் நிறைந்துள்ள சிவனடியார்களாலும், உள்ளூர் மற்றும் அருகிலுள்ள கிராம மக்களாலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது . இளைய தலைமுறை உறுப்பினர்களையும் சேர்த்து, குழு ஒன்று அமைக்கப்பட்டு, கடந்த 38 வருடங்களாக இந்த அன்னாபிஷேகக் கைங்கர்யம், பக்தி சிரத்தையுடன் நடத்தப்பட்டு வருகிறது.
அன்பர்களிடம் இருந்து தேவையான உதவிகளைப் பெற்று, 62 அடி சுற்றளவும் பதிமூன்றரை அடி உயரமும் கொண்டு, ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்தப் புனித மஹா சிவலிங்கத்திற்கு முழுவதுமாக அன்னாபிஷேகம் செய்யப் படுகிறது. மேலும் ஆண்டு முழுவதும் நடக்க வேண்டிய ஸ்வாமி நைவேத்தியம், மற்றும் சிவ கைங்கர்யங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கங்கை கொண்ட சோழபுரத்தில் பெரியவர்களின் கட்டளைப்படி நடைபெறும் வேதாகம பாடசாலை பராமரிப்பு அன்னாபிஷேகத்தை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு உணவிடுதல் ஆகியவையும் இந்த அன்னாபிஷேகக் கமிட்டியின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
சோபக்ருது வருஷம், ஐப்பசி மாதம் 11ம் நாள், சனிக்கிழமை, அக்.28ம் தேதி, அஸ்வினி நட்சத்திரம் கூடிய பௌர்ணமியில், 39ம் வருஷ அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. அக்.28,29 ஆம் தேதிகளில், அதாவது வரும் சனி, ஞாயிறு இரவு சந்திர கிரஹணம் 1 மணி 5 நிமிடத்திற்கு ஆரம்பிப்பதால் , ஆகம விதிகளின்படி மஹா தீபாராதனை மாலை 5 மணிக்கு இந்த வருடம் மாற்றப்பட்டுள்ளது. இந்த சோபக்ருது வருட பூஜை ஏற்பாடுகளின்படி, அக்.26ம் தேதி, வியாழக்கிழமை காலை 8 மணிக்கு ஸ்ரீ கணக்கு விநாயக ஸ்வாமிக்கு ஹோமம் , அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.
அக்.27, வெள்ளி, காலை 9 மணிக்கு பிரஹந்நாயகி அம்பாளுக்கும் ப்ரஹதீஸ்வர ஸ்வாமிக்கும், துர்கை மங்களசண்டி தேவிக்கும், மஹா அபிஷேகம் நடைபெற்றது. மதியம் 1 மணி அளவில், நைவேத்திய பிரசாத விநியோகம் நடைபெற்றது. மாலை, குபேர லட்சுமி திருவிளக்கு பூஜை, நவாவரண பூஜை நடைபெற்றது.
அக்.28 இன்று காலை 9 மணிக்கு முன் தொடங்கி, ப்ரஹதீஸ்வர ஸ்வாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இன்று மாலை 5 மணிக்கு மஹா தீபாராதனையும் இரவு ஸ்வாமி அன்னத்தைக் கலைத்து பக்தர்களுக்கு அன்னப் பிரசாதமும் வழங்கப்பட்டது.
அக்.29 ஞாயிறு நாளை, உத்ராபிஷேகம் காலை 9 மணி அளவில், ஸ்வாமிக்கு நடைபெறும். பின் சண்டிகேஸ்வர பூஜையுடன் பிரசாத விநியோகம் நடைபெறும்.