e0af8d-e0ae9ae0af87e0aea4e0af81.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ்க் கதைகள் 189
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
குழல் அடவி – பழநி 3
சேதுபந்தனம்
இராமர் சேதுபந்தனம் புரியும் பொருட்டு தென்கடற்கரையில் திருப்புல்லணையில் படுத்து வருணனை ஏழு நாள் வழி வேண்டினார். வருணன் ஏழு கடல்களுக்கு அப்பால் இரு பெரிய திமிலங்களின் போரை நிறுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபடியால் ஸ்ரீராமருடைய வேண்டுதலை அறியாதவனாகி நின்றான். ஸ்ரீராமர் வெகுண்டு அக்கினிக் கணையை எடுத்துத் தொடுத்து விடுத்தார். அக்கணையின் வெம்மையால் கடல் வரண்டுவிட்டது. இதனை பரவு பரவைகொல் பரவை வண அரி பரவும் இமையவர் என்ற இந்த அடியில் அருணகிரியார் கூறியுள்ளார்.
அதாவது பரந்துள்ள சமுத்திரத்தை அக்கினி யந்திரத்தால் அடக்கிய, கடல் வண்ணம் பொருந்தியவரும், பாவத்தை அழிப்பவரும் ஆகிய நாராயணர், துதிசெய்கின்ற, தேவர்கள் போற்றும் பெருமையில் மிகுந்தவரே – என்பது இவ்வரிகளின் பொருளாகும்.
ஆஞ்சநேயர் கடலைக் கடந்து இலங்கைக்குச் சென்று, சீதாதேவியைக் கண்டு மீண்டு வந்து, இராமபிரானிடம், “கண்டேன் கற்பினுக்கு அணியை” என்று கூறிய பின்னர், இனி சீதையை மீட்பதற்கு என்ன செய்வது என்று அனைவரும் ஆலோசனை செய்தனர். அப்பொழுது சமுத்திரத்தைக் கடப்பதற்கு முதலில் சமுத்திர ராஜனிடம் அனுமதி பெறவேண்டும் என்று இராமர் முடிவெடுத்தார். எனவே தர்ப்பைப் புல்லைக் கடற்கரை மணலில் பரப்பி அதன் மீது படுத்திருந்து மூன்று நாட்கள் உணவு உண்ணாமலும், நீர் அருந்தாமலும் சமுத்திர ராஜனை வேண்டி தவமிருந்தார் ஸ்ரீராமபிரான். இவ்வாறு ஶ்ரீராமர் தவமிருந்த இடம் திருப்புல்லாணி என்று வழங்கப்படுகிறது. *திருப்புல் என்று மகிமையோடு கூறப்படும் தர்ப்பைப் புல்லையே தலைக்கு அணையாக வைத்து இராமபிரான் சயனித்திருந்த தலம் இதுவாகும்.
பறவைகளின் ஒலியும் இராமனும்
வான்மீகி இராமாயணத்திலோ அல்லது வேறு எந்த இராமாயணத்திலோ காணப்படாத தகவல் ஒன்று அகநானூற்றில் காணப்படுகிறது. அந்தச் செய்தி என்ன என்பதைக் காணலாம்.
காதலில் ஈடுபட்டிருக்கும் தலைவி ஒருத்தியைப் பற்றி ஊரார் பழி தூற்றிக் கொண்டிருந்தனர். இதற்கு அலர் தூற்றுதல் என்று பெயர். ஒருநாள் அத்தலைவன் வந்து அத்தலைவியையே மணம் செய்துகொண்டான். அன்றே ஊரார் பழி தூற்றுவதை நிறுத்திக்கொண்டனர். இதனால் அத்தலைவியைப் பற்றி ஊர் முழுதும் ஒலித்துக் கொண்டிருந்த பழிப்பேச்சின் ஓசை உடனடியாக நின்றுவிட்டது. இதற்குப் புலவர் ஓர் உவமையை அழகாகக் கூறியுள்ளார். இலங்கைப் படையெடுப்பின்போது இராமன் ‘தொன்முதுகோடி’ எனப்படும் தனுஷ்கோடியில் வந்து தங்கி இருந்தான். அவ்வாறு தங்கி இருந்த இடம் பறவைகள் ஓயாது ஆரவாரம் செய்து கொண்டிருந்த ஆலமரத்தின் நிழல். இராமன் இலங்கைப் படையெடுப்பு தொடர்பாகத் தன் தோழர்களோடு கலந்து உரையாடிக் கொண்டிருந்தான். பறவைகளின் ஓசை தடங்கலாக இருந்தது. தன் கையை உயர்த்திக் காட்டினான். உடனே அத்தனை பறவைகளும் அமைதி கொண்டு அடங்கிவிட்டன. இதைப்போல, தலைவன் தலைவியை மணமுடித்துக் கைப்பிடித்த உடனேயே, அதுவரை ஊரெல்லாம் முழங்கிக் கொண்டிருந்த பழிப்பேச்சுகள் அடங்கின என்று தோழி கூறுவதாக அந்தப் பாடலில் புலவர் இராமாயண நிகழ்ச்சியை உவமையாகக் கையாண்டுள்ளார்.
அப்பாடல் வரிகள் இதோ:
வெல்வேல் கவுரியர் தொன்முது கோடி
முழங்குஇரும் பௌவம் இரங்கு முன்துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலிஅவிந் தன்றுஇவ் அழுங்கல் ஊரே.
இவ்வாறு மூன்று நாட்கள் கடுந்தவம் இராமர் செய்த பிறகும் சமுத்திரராஜன் அவருக்குக் காட்சிக் கொடுக்கவில்லை. இதனால் சினம் கொண்ட இராமபிரான் ‘எனது இராமபாணத்தை விடுத்து, இந்த சமுத்திரத்தையே வற்றச் செய்து நடந்தே இலங்கைக்குச் செல்வோம்’ என்றார்.
தம்பி இலட்சுமணா! கோதண்டத்தை கொண்டு வா! என்று இராமபிரான் கடும் கோபத்தோடு சமுத்திரத்தில் பாணத்தைத் தொடுத்தார். அண்ணனின் சினத்தைக் கண்டு கடும் கோபக்காரரும், ஆதிசேஷனின் அவதாரமுமான இலட்சுமணர் பயம் கொண்டு நின்றார். சாந்த சொரூபியான நமது அண்ணனே இப்படி உருத்ரமூர்த்தி ஆகிவிட்டாரே? இதனால் என்ன ஆகுமோ? என்று கலங்கி நின்றார் இலட்சுமணர்.
இராமபிரான் *இராமபாணத்தை சமுத்திரத்தின் மீது ஏவியதும் சமுத்திரம் கலங்கியது. அதன் வெம்மை தாங்காது சமுத்திர நீர் சூடாக ஆனதால் அதிலிருந்த மீன்களும், சுறாக்கள், திமிங்கலங்கள் அனைத்தும் வெம்மை தாளாது சமுத்திரத்தை விட்டு வெளியே துள்ளி விழுந்தன. சுறாக்கள் திமிங்கலங்கள் என அனைத்தும் விண்ணில் தாவியதைப் போல் உயர எழுப்பி ச் சமுத்திரத்திலிருந்து துள்ளி குதித்தன. இராமபாணத்தின் வெம்மையைத் தாங்காது மலைகளும் ஆட்டம் கண்டன. பின்னர் நடந்தது என்ன? நாளை காணலாம்.
திருப்புகழ் கதைகள்: சேது பந்தனம்! முதலில் தினசரி தளத்தில் வெளியான செய்தி.