e0af8d-e0aeaae0aebee0aeb0e0aebf.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ்க் கதைகள் 192
~முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ~
குழல் அடவி – பழநி 4
பாரிடைக் குதித்த பேருடைக்கிரி
2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் நாள் திருச்செந்தூர் அருகே கல்லாமொழி என்ற இடத்தில் 95 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கின. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மற்றும் ஜப்பான் நாட்டுக் கடற்கரைகளில் அவ்வப்பொழுது நூற்றுக் கணக்கில் திமிங்கிலங்கள் மற்றும் டால்பின்கள் அரை மயக்க நிலையில் கரை ஒதுங்குகின்றன. இவ்வாறு திமிங்கிலங்கள் மற்றும் டால்பின்கள் நூற்றுக் கணக்கில் கரை ஒதுங்குவது ஏன்? என்பது குறித்து இன்றளவும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
தற்பொழுது கப்பல்களில் இருக்கும் சோனார் கருவிகளில் இருந்து அனுப்பப்படும் ஒலி அலைகளால் பாதிப்பு ஏற்பட்டு திமிங்கிலங்களும் டால்பின்களும் கரை ஒதுங்கலாம் என்று ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் சோனார் கருவிகள் கண்டு பிடிப்பதற்கு முன்பே இது போன்று திமிங்கிலங்கள் பல எண்ணிக்கையில் கரை ஒதுங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
1912ஆம் ஆண்டு டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் மூழ்கிய ஒரு மாதத்திற்குப் பின்னரே லெவிஸ் ரிச்சர்ட்சன் (Lewis Fry Richardson, 11 October 1881 – 30 September 1953) என்ற ஆங்கிலேயேக் காலநிலை இயல் வல்லுநர், ஒலி அலைகளைப் பயன் படுத்தும் கருவியைக் கண்டு பிடித்து உரிமப் பதிவு செய்தார். இந்த ரிச்சர்ட்சன் வானிலையியலில் பெரும் பங்காற்றியவர். இவருடைய பங்களிப்பினால்தான் தற்போது உள்ள கணினி வழி வானிலை முன்னறிவிப்புகள் வழங்குதல் உருவானது. ஆனால் சோனார் கருவிகளின் பயன் பாட்டுக்கு வருவதற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்பே, 1902ஆம் ஆண்டு வட அமெரிக்காவில் கேப் முனை அருகில், ஏராளமான திமிங்கிலங்கள் கரை ஒதுங்கி இருப்பது ஆவணப் படுத்தப் பட்டுள்ளது. தற்போது இவ்வாறு திமிங்கிலங்கள் கரை ஒதுங்க முக்கியமான காரணமாக உலக வெப்பமயமாதல் எனக் கருதப்படுகிறது. உலக வெப்பமயமாதலால் கடலும் வெப்பமடைகிறது. இது பவளப் பாறைகளைப் பாதிக்கிறது. பவளப் பாறைகள் அழிவினால் திமிங்கிலங்களுக்கு உணவு கிடைப்பதில்லை அதனால் அவை குழம்பிப் போய் கரைக்கு வந்துவிடுகின்றன.
சேதுபந்தனம் பற்றிய படலத்தில் (படலத்தின் பெயர் யுத்த காண்டத்தில், வருணனை வழிவிட வேண்டிய படலம்) திமிங்கிலங்கள் கரை ஒதுங்கி தற்கொலை செய்துகொள்ளும் செய்தி பற்றி கம்பனும் பேசுகிறான். இலங்கைக்குச் செல்ல வருணன் வழிவிடாததால் இராமன் கோபத்தில் கடல் மீது அம்பு விடுகிறான். இராமன் விட்ட அம்பு, மலை போன்ற உடல் உடைய பெரிய மீன்களைக் கரையில் வந்து விழச் செய்ததாக ஒரு பாடலில் கம்பன் கூறுகிறான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அவன் கம்ப ராமாயணத்தை இயற்றினான். ஆனால் உவமை கூறும் விஷயங்களும், இது போன்ற நிகழ்வுகளும் உண்மையில் நடந்தால்தான் எழுத முடியும்; அவ்வாறு எழுதுவதை பாமர மக்களும் ரசிக்க முடியும்.
பேருடைக் கிரி எனப் பெருத்த மீன்களும்
ஓரிடத்து உயிர்தரித்து ஒதுங்ககிற்றில
நீரிடைப் புகும் அதின் நெருப்பு நன்று எனாப்
பாரிடைக் குதித்தன பதைக்கும் மெய்யன்
அதாவது பெரிய மலை போலப் பெருத்த மீன்களும் (திமிங்கிலங்களும்), ஓரிடத்தில் உயிரைத் தாங்கி நிற்க முடியாமல் தீயில் வேகும் இந்தக் கடல் நீரைவிட நல்லதாகும் என்று தரையில் குதித்துத் துடிக்கும் உடலை உடையவை ஆகின.
இரமனின் அம்புகளால் விளைந்த பாதிப்புகளைக் கண்ட வருணன் இராமனின் முன் தோன்றி சேது எனப்படும் பாலம் கட்டச் சொல்கிறான். கடலை வற்றச் செய்து இலங்கை அடையலாம் என எண்ண வேண்டாம், அவ்வாறு செய்தால் எவ்வளவு உயினங்கள் அழிந்து போகும் என்றும் நினைவு படுத்துகின்றான். ஆக, கடல் வாழ் உயிரினங்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற அருமையான சுற்றுச்சூழல் உணர்வும் அக்காலத்தில் இருந்தது.
கல்லென வலித்து நிற்பின் கணக்கிலா உயிர்கள் எல்லாம்
ஒல்லையின் உலந்து வீயும் இட்டது ஒன்று ஒழுகாவண்ணம்
எல்லை இல் காலம் எல்லாம் ஏந்துவென் இனிந்தின் எந்தாய்
செல்லுதி சேது ஏன்று ஒன்று இயற்றி என் சிரத்தின் மேலாய்
அதாவது என் தந்தை போன்றவனே, வற்றாமல் நீர் இறுகிக் கல்லைப் போல கடல் ஆகிவிட்டால் உயிரினங்கள் மாண்டுவிடும் ஆகையால் என் முதுகின் மீது சேது என்னும் அணையைக் கட்டி அதன் மீது செல்வாயாக. இதனால் நீண்ட காலம் நான் நிலைத்து நிற்பேன் என்று வருணன் இராமனிடம் வேண்டுகிறான்.
யுத்த காண்டத்தில், வருணனை வழி வேண்டு படலத்தில் பாடல் எண் 6603 முதல் பாடல் எண் 6637 முடிய இராமனின் அம்புகளால் கடல் அடைந்த பாதிப்பினை விளக்குகிறது. கடலில் வெப்பம் அதிகரித்தால், கடலில் ஒலி அலைகள் அல்லது மின் காந்த அலைகள் அதிகரித்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதனை அறிந்து கம்பர் பாடியிருப்பாரோ எனத் தோன்றுகிறது.
திருப்புகழ் கதைகள்: பாரிடைக் குதித்த பேருடைக்கிரி! முதலில் தினசரி தளத்தில் வெளியான செய்தி.