இதயத்தில் வைத்தால் இடைவெளி ஏன்..?

ஆன்மிக கட்டுரைகள்

Thirupathi 4
Thirupathi 4
Thirupathi 4

திருக்குடந்தை தேசிகன் என்னும் மகான் கும்பகோணத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்தார்.

அவர் ஒப்பிலியப்பன் கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு சேவை செய்து வந்தார் .

வடநாட்டு யாத்திரை செல்ல விரும்பிய திருக் குடந்தை தேசிகன், தனது மூன்று சீடர்களை அழைத்துக் கொண்டு வடதிசை நோக்கிப் புறப்பட்டார்.

முதலில் திருமலையை அடைந்த திருக்குடந்தை தேசிகன், அங்கே திருவேங்கடமுடையானைத் தரிசித்துவிட்டு ஆழ்வார் தீர்த்தம் என்று அழைக்கப்படும் அருவிக்கு அருகே தம் சீடர்களுடன் அமர்ந்து இளைப்பாறிக் கொண்டி ருந்தார்.

வயது முதிர்வால் எனது உடல் தளர்ந்து விட்டது. இந்நிலையில் நான் எப்படி மேற்கொண்டு அயோத்தியா, மதுரா, பிருந்தாவனம், பத்ரிநாத் உள்ளிட்ட தலங்களுக்கெல்லாம் செல்வேன்?” என்று வருத்தத்துடன் தம் சீடர்களிடம் சொன்னார் திருக்குடந்தை தேசிகன்.

அப்போது அங்கே வந்த யாத்திரிகர் ஒருவர், திருக்குடந்தை தேசிகனை வணங்கினார்.

சுவாமி! அடியேன் நம்மாழ்வாருடைய அவதார ஸ்தலமான ஆழ்வார் திருநகரியில் இருந்து வருகிறேன். இங்கே நம்மாழ்வார் பெயரில் ஒரு அருவி இருப்பதாகக் கேள்விப்பட்டேன்.
அது எங்கே இருக்கிறது?” என்று கேட்டார்.

அருகிலிருந்த ஆழ்வார் தீர்த்தத்தைக் காட்டிய திருக்குடந்தை தேசிகன், “இது தான் நம்மாழ்வாரின் திருநாமத்தால் வழங்கப்படும் ஆழ்வார் தீர்த்தம்!” என்று கூறினார்.

மேலும், “நம்மாழ்வார் திருமலையைப் பற்றித் தம் திருவாய்மொழியில் பாடுகையில்,

ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழிகுரல் அருவி திருவேங்கடத்து
எழில்கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே” என்று பாடினார்.

திருமலையிலுள்ள அருவிகளில் நீர் பாயும் போது எழும்புகின்ற ஒலியானது, திருமலையப்பனுக்குத் தொண்டு செய்ய வாருங்கள்! வாருங்கள்! என்று அடியார்களை அழைப்பது போல உள்ளது.

அத்தகைய திருத்தலமாகிய திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கும் திருமலையப்பனுக்கு நாம் எல்லா நேரங்களிலும் அனைத்து விதமான கைங்கரியங்களும் செய்ய வேண்டும் என்பது இப்பாசுரத்தின் கருத்து.

இப்பாசுரத்தில் திருமலையிலுள்ள அருவியின் ஒலி, மலையப்பனுக்குத் தொண்டு செய்ய வருமாறு தம்மை அழைப்பது போல் ஆழ்வார் உணர்ந்தமையால், அந்த அருவியில் அவருக்குள்ள ஈடுபாட்டைக் கருத்தில் கொண்டு, ஆழ்வார் தீர்த்தம் என்று அவரது திருநாமத்தை இந்த அருவிக்குப் பெரியோர்கள் சூட்டினார்கள்!” என்றார் திருக்குடந்தை தேசிகன்.

திருக்குடந்தை தேசிகன், “நம் இதயத்தில் உறையும் பரந்தாமனை எப்போதும் அனுபவிக்கும் ஒருவன், மேற் கொண்டு இறைவனைத் தேடிக் கங்கைக்கோ குருக்ஷேத்ரத்துக்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை.

ஐயா…. தேசிகரே…. “உங்கள் கேள்விக்கான பதிலை நீங்களே சொல்லிவிட்டீர்களே!” என்று சொல்லிச் சிரித்த யாத்திரிகர், திடீரென மறைந்து விட்டார்.

யாத்திரிகர் வடிவில் வந்தவன் பரந்தாமன் மலையப்பன் ஆம்! “உடல் தளர்ந்த நிலையில் எப்படி வடநாட்டுக்கு யாத்திரை செல்வது?” என்று திருக்குடந்தை தேசிகன் கேள்வி கேட்டு வருந்தினாரல்லவா? அவர் வாயாலேயே அதற்கான விடை வந்துவிட்டது.

இதயத்திலிருக்கும் இறைவனை அனுபவிப்பவர்கள் தனியாக இறைவனைத் தேடி யாத்திரை செல்ல வேண்டியதில்லை!” என்று திருக்குடந்தை தேசிகன் தம் வாயாலேயே கூறிவிட்டார்.

எனவே வருத்தம் நீங்கிக் கும்பகோணத்துக்குத் திரும்பிய அவர், அங்கே எழுந்தருளியிருக்கும் பரந்தாமனான ஆராவமுதப் பெருமாளுக்குத் தொண்டு செய்தபடித் தம் இதயத்தில் வைத்து வாழ்நாளைக் கழித்தார்.

இதயத்தில் வைத்தால் இடைவெளி ஏன்..? முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply