திருப்புகழ் கதைகள்: ‘நக்கீரர்’கள்!

ஆன்மிக கட்டுரைகள்

thiruppugazh stories
thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் 128
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

முலை முகம் – திருச்செந்தூர் – நக்கீரர்

நக்கீரர் அல்லது நக்கீரன் என்பவர் சங்ககாலப் புலவர் ஆவார். இவர் பண்டைய பாண்டிய நாட்டிலுள்ள மதுரையில் வாழ்ந்தவர். இவரின் மிகக் குறிப்பிடத்தக்க நூல்கள் திருமுருகாற்றுப்படை மற்றும் நெடுநல்வாடை ஆகும்.

பல்வேறு காலங்களில் வாழ்ந்த, (‘நக்கீரர்’ என்ற பெயரில் பல தலைமுறைகளாக, பிறந்து வாழ்ந்த) நக்கீரர் பாடல்களைத் தொகுத்து, ஒருவர், ‘நக்கீரர்’ எனக் கொண்டு, புனையப்பட்ட கதைகள் உண்டு. பெண்ணின் கூந்தலில் இயற்கையில் வாசனையுண்டா? என்ற கருத்து தொடர்பில், நக்கீரர் மதுரையில் சுந்தரேசுவரருடனேயே (சிவன்) அஞ்சாது வாதிட்டவர் என்பது தொன்நம்பிக்கை. இன்றளவும், இந்த நிகழ்வு மதுரை மீனாட்சியம்மன் கோவில் திருவிழாவில், நாடகமாக நடத்தப்படுவது குறிக்கத்தக்கது.

மதுரை சொக்க நாதர் (இறையனார்) பாடி , நக்கீரனார் பொருட் குற்றம் கண்ட அப்பாடலாவது:

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறிஎயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே

இப்பாடல் “குறுந்தொகை” நூலுள் காணப்படுகிறது. இயற்றிய புலவரின் பெயர் “இறையனார்” என்று காணப்படுகிறது. இப்பாடலின் பொருள் என்னவென்றால் – பூந்தாதுக்களை ஆராய்ந்து தேன் உண்ணும் வண்டே! என்னிடத்துள்ள அன்பின் காரணமாகச் சொல்லாமல், உன் கண்ணால் கண்டபடி சொல்வாயாக. நீ அருந்திய மலரில், இந்தப் பெண்ணின் கூந்தலைப் போல நல்ல மணமுடைய மலர்களும் உளவோ? சொல்வாயாக.

இப்பாடலைக் கொண்டு பாண்டிய ராஜன் சபையில் பாடல் படித்த தருமி என்ற புலவனை நக்கீரன் என்ற புலவர் சகட்டுமேனிக்குக் கேள்விகள் கேட்டார். பாடலில் சொற் குற்றமும் பொருட் குற்றமும் இருப்பதாகப் பழி சுமத்தினார். தருமி மீண்டும் கோவிலுக்குச் சென்று புலம்பவே மறுநாள், சிவபெருமானே நேரில் வந்து நக்கீரருடன் மோதினார். அப்போது சிவன் சொன்னதாவது:

அங்கங் குலைய அரிவாளி நெய் பூசிப்
பங்கம் படவிரண்டு கால்பரப்பிச் சங்கதனை
கீர் கீர் என அறுக்கும் கீரனோ என் கவியை
ஆராயும் உள்ளத்தவன்

அதாவது – எண்ணையைப் பூசிக்கொண்டு அங்கமே ஆடும்படி உடலை எல்லாம் குலுக்கி, கால்களைப் பரப்பி வைத்துக்கொண்டு சங்குகளை அறுத்து வளையல் செய்யும் நக்கீரனா என் பாட்டைக் குறை சொன்னான்? – என்பதாகும். இதைக் கேட்டவுடன் புலவர் நக்கீரனுக்குக் கோபம் வந்தது.

சங்கறுப்பதெங்கள் குலம் சங்கரனார்க்கேது குலம்
பங்கமறச் சொன்னாற் பழுதாமோ – சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனே நின்போல
இரந்துண்டு வாழ்வதில்லை

என்று நக்கீரர் அதற்குப் பதில் சொன்னார். அதாவது – ஏய்! சிவா! நாங்களாவது சங்குகளை அறுத்து வளையல் மோதிரம் செய்யும் குலத்தைச் சேர்ந்தவர்கள்; உனக்கோ குலம் கோத்திரம் ஏதுமில்லை. நாங்களாவது சங்குகளை அறுத்து அதை விற்று வாழ்க்கை நடத்துகிறோம்; உன்னைப் போல பிச்சை எடுத்து வாழவில்லையே. – என்பதாகும்.

nakkeerar
nakkeerar

இதற்குப் பின்னர் வாக்கு வாதம் முற்றவே சிவபெருமான் நெற்றிக் கண்ணைத் திறக்கவே நக்கீரன் அடி பணிந்தார் என்பது திருவிளையாடல் புராணக் கதை. ஆனால் இந்த நக்கீரனுக்கும் திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரருக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை.

சங்கப்பாடல்கள் சிலவற்றில், சங்ககாலப் புலவர் நக்கீரரின் பெயர் ‘நக்கீரன்’, நக்கீரனார்’, ‘மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்’ என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 37 பாடல்கள் இவர் பாடியிருக்கிறார். அவை வருமாறு – பத்துப்பாட்டு தொகுப்பில் உள்ள 10 பாட்டுகளில் திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை ஆகிய இரண்டு பாட்டுகளையும் பாடியவர் நக்கீரர். இவை தவிர அகநானூற்றில் 17 பாடல்கள், குறுந்தொகையில் 7 பாடல்கள், நற்றிணையில் 7 பாடல்கள், புறநானூற்றில் 3 பாடல்கள் இவர் பாடியுள்ளார்.

திருப்புகழ் கதைகள்: ‘நக்கீரர்’கள்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply