ஸ்ருததேவா என்பவள் கண்ணபிரானுக்கு சகோதரி முறை. அவளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அக்குழந்தை மூன்று கண்கள் நான்கு கைகள் கொண்டு பிறந்து இருந்தான்.
மேலும் அவன் பிறக்கும் போது தீய சகுணங்கள் தோன்றின. அக்குழந்தையை ஆற்றில் எறிந்து விடலாம் என பெற்றோர் முடிவு எடுத்தனர். அப்போது வானில் ஓர் அசீரீரி கேட்டது,
கவலைபட வேண்டாம் இந்தக் குழந்தையை தெய்வாம்சம் உடைய ஒருவர் தூக்கியதும், குழந்தையின் அதிகப்படியான உடல் பாகங்கள் மறைந்து விடும், ஆனால் இக்குழந்தை அவரால் தான் மரணம் அடையும்” என்று தெரிவித்தது.
குழந்தைக்கு சிசுபாலன் எனப் பெயர் வைத்து வளர்த்தனர். ஊரில் உள்ள அனைவரும் மாற்றி மாற்றி குழந்தையை தூக்கிப் பார்த்தனர். குழந்தையின் அதிதப்படியான பாகங்கள் மறையவே இல்லை.
இந்நிலையில் கண்ணன் அவ்வூருக்கு விஜயம் செய்தார். அவரிடமும் குழந்தையை கொடுத்து தூக்கச் செய்தனர். என்ன ஆச்சரியம்! அடுத்த கணமே குழந்தையின் அதிகப்படியான பாகங்கள் மறைந்து அழகான குழந்தையாக சிசுபாலன் தோற்றம் அளித்தான்.
அசீரரியின் படி சிசுபாலன் கண்ணனால் தான் கொல்லப்படுவான் என்பதை உணர்ந்த தாய் ஸ்ருததேவா கை கூப்பி கண்ணனை தொழுது, “நீ என் மகனை கொல்ல மாட்டேன்” என உறுதிகூறு என வேண்டினாள். “அப்படி என்னால் உறுதிகூற முடியாது.
வேண்டுமானால் உனக்காக ஒரு வரம் அளிக்கிறேன், சிசுபாலன் எனக்கு எதிராக புரியும் நூறு குற்றங்களை மட்டுமே பொறுத்துக் கொள்வேன்” என கண்ணன் உறுதியளித்தான்.
தாயும் மகிழ்வுடன் சம்மதித்தாள். காலம் கடந்தது. யுதிஷ்டிரர் ராஜசூய யாகம் நடத்தினார். யாக முடிவில் கண்ணனுக்கு முக்கிய மரியாதை செய்தார் யுதிஷ்டிரர்.
ஏற்கெனவே தான் விரும்பிய ருக்மணியை கண்ணன் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதில் இருந்து கண்ணன் மீது வெறுப்பிலிருந்த சிசுபாலனுக்கு இச்செயல் மேலும் கடுப்பை கொடுத்தது.
ஓர் ஆட்டு இடையனுக்கா இவ்வாறு மரியாதை செய்வது?” என தாறுமாறாக திட்டத் தொடங்கினான். அவற்றை கேட்டுக் கொண்டிருந்த கண்ணன் சிரித்தபடி அமைதியாக இருந்தான்.
இவ்வளவு வசவுகளையும் கேட்டு கண்ணன் ஏன் மௌனியாக இருக்கிறார் என மக்கள் தங்கள் மனதிலேயே கேட்டுக் கொண்டு இருந்தனர். ஆனால் கண்ணன் அவன் வசுவுகளை ஒன்று இரண்டு என மனதினில் எண்ணிக் கொண்டு இருந்தான்.
சிசுபாலனின் தாய்க்கு கொடுத்திருந்த வாக்கின்படி வசை மொழி நூறைத் தாண்டும் வரை காத்திருந்த கண்ணன் 101வது வசை மொழியை கேட்டவுடன் தன் சக்ராயுதத்தால் அவனை வதம் செய்தார்.
நாம் செய்யும் ஒவ்வொரு தவறுகளும் கண்ணன் கணக்கில் உள்ளது என நினைவில் கொள்வோம் தவறுகளை தவிர்ப்போம் பரந்தாமன் பாதம் பற்றுவோம்
இது வரைதான் பொறுத்துக் கொள்வேன்: கண்ணன் தந்த வாக்கு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.