e0aebfe0aeafe0af87-e0aeb5e0af80e0ae9fe0aebee0ae95e0ae95e0af8d-e0ae95e0af8ae0aea3.jpg" style="display: block; margin: 1em auto">
-கே.ஜி. ராமலிங்கம்
இன்று வரலட்சுமி விரதம், பிரதோஷம் மற்றும் சுப முகூர்த்த தினம். வெள்ளிக்கிழமை அம்மனுக்கு அதாவது துர்கா லட்சுமி சரஸ்வதி தேவியர்க்கு உரிய நாள். திருச்சி மாவட்டத்தில் இரண்டு பெண் தெய்வங்கள் அருள் பாலிக்கிறார்கள் அந்த பெண் தெய்வங்களை வேண்டி தத்தமது மனக்குறையை, மனக்குமுறலை அந்தத் தாயிடம் முறையிடுவோம்.
திருவாச்சூர் மதுரகாளியம்மன்
தன் கணவனை ஆராயாமல் கொன்ற பாண்டியனிடம் நீதிகேட்டு, கோபத்துடன் மதுரையை எரித்தாள் கண்ணகி. பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றபோது வழியில் இருந்த செல்லியம்மன் கோயிலில் அன்றிரவு தங்கத் தீர்மானித்தாள். அங்கு தங்கியிருந்தபோது, அன்றிரவு செல்லியம்மன் தன் கருவறையிலிருந்து வெளிப்பட்டு, கண்ணகியிடம் வந்து, “பெண்ணே நீ இங்கு தங்கக் கூடாது” என்றார். காரணம் கேட்ட கண்ணகியிடம், தான் ஒரு மந்திரவாதியின் பிடியில் சிக்கி இருப்பதாகவும், தனது பக்தியால் தன்னிடம் பல வரங்களைப் பெற்ற அவன், ஒரு கட்டத்தில் மந்திரங்கள் மூலம் தன்னையே அவனுக்கு அடிமையாக்கி விட்டதாக கூறினார். மேலும் தனது அழிவுச் செயல்களுக்கு அவன் தன்னைப் பயன்படுத்தத் துடிப்பதாகவும். இந்த நிலையில் நீ இங்கு இருப்பதை பார்த்தால் அது உனக்கு ஆபத்து என்றார்.
செல்லியம்மனின் நிலையைக் கண்டு கண்ணகி மனம் வருந்தினாள். சற்று நேரத்தில் கோயிலுக்கு வந்த மந்திரவாதி, செல்லியம்மனை வெளியே வருமாறு அழைத்தான். திடீரென அவன் எதிரில் வாளோடு வந்த கண்ணகி, அவன் கழுத்தைத் துண்டித்தாள். வந்தது கண்ணகியல்ல, அவள் உருவத்தில் குடியேறிய காளியம்மன்தான் என்பதை உணர்ந்த மந்திரவாதி அவளிடம் இறுதியாக ஒரு வரம் வேண்டினான். அதன்படி இந்த ஆலயத்தில் தனக்கு ஒரு சமாதி அமைக்கப்பட வேண்டும் என்றும். பக்தர்கள் எல்லாம் அதன்மீது கால் வைத்துவிட்டு அம்மனை தரிசிக்க வர வேண்டும் என்றும். அதுவே தான் செய்த பாவங்களுக்கு பரிகாரம் என்றான்.
கண்ணகி உருவில் இருந்த காளியம்மனும் இதற்கு ஒத்துக்கொண்டாள். மனம் நெகிழ்ந்த செல்லியம்மன், கண்ணகியின் உதவியைப் போற்றும் வண்ணம், “இனி இந்த சிறுவாச்சூர் உனக்கானது. மதுரகாளியம்மனாக நீயே இங்கு எழுந்தருள்வாயாக. பில்லி சூனியம், காற்று, கருப்பு போன்ற தீயசக்திகள் எதற்கும் இங்கு இனி இடம் கிடையாது. சூனியங்கள் இங்கு நடைபெறாது. நான் காட்டுக்கு நடுவே அமைந்துள்ள பெரியசாமிக் குன்றுக்குச் செல்கிறேன். நீ எப்போது வேண்டுமானாலும் என்னை வந்து சந்திக்கலாம்’’ என்று கூறி மறைந்தாள்.
கண்ணகியும் இதற்கு ஒத்துக் கொண்டாள் எனினும் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே தான் சிறுவாச்சூரில் இருப்பதாக வாக்களித்தாள். அதனால் தான் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் இங்கு பூசை நடக்கிறது. மேலும் பூசையின் போது மதுரகாளியம்மனுக்குத் தீபாராதனை காட்டுவதற்கு முன்பாக பூசாரி அதை செல்லியம்மன் குடியிருக்கும் பெரியசாமிக் குன்றின் திசையை நோக்கிக் காட்டிவிட்டு பிறகே மதுரகாளியம்மனின் திருவுருவத்துக்குக் காட்டுகிறார்
உறையூர் வெக்காளியம்மன்
ஊர்களை அமைக்கும்போது ஊர்க்காவல் தெய்வங்களை ஊர்களின் எல்லையில் எழுந்தருளச் செய்வதும், வீரமும், வெற்றியளிக்கும் தெய்வங்களையும் வடக்கு நோக்கி அமைப்பார்கள். அதன்படி ஊர் எல்லையிலும், வடக்கு நோக்கியும் அமைந்துள்ளது உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில்.இக்கோயில் அமைந்துள்ளதற்கு மற்றொரு காரணம் கூறப்படுகிறது.
உறையூரில் வன்பராந்தகன் என்னும் அரசன், தனது மனைவி புவனமாதேவியுடன் ஆட்சி செய்த காலத்தில், சாரமாமுனிவர் என்பவர் நந்தவனம் அமைத்து பல்வகை மலர்ச்செடிகளையும் பயிரிட்டு, மலர் கொய்து தொடுத்துத் தாயுமானசுவாமிக்கு அணிவித்து அழகு பார்த்துக் கொண்டிருந்தார்.
இந்தநிலையில், பிராந்தகன் என்னும் பூ வணிகன் அரசரிடம் ஆதரவு பெற எண்ணி, நந்தவனத்து மலர்களைப் பறித்து அரசர்க்கு அளிக்கத் தொடங்கினான், அரசரும் உயர்வான மலர்களைக் கண்டு உளம் களித்து, தாயுமானவருக்கு மட்டுமே அணிவிப்பதற்கென சாரமாமுனிவர் அமைத்த நந்தவனத்து மலர்கள் என்று அறிந்தும்கூட, தவறான ஆசையால் வணிகனிடம் நாளும் மலர்களைப் பறித்துவர ஆணையிட்டான்.
நந்தவனத்தில் நாளும் மலர்கள் குறைவதைக் கண்ட சாரமாமுனிவர், ஒருநாள் வணிகன் மலர் கொய்யும் போது பிடித்துவிட்டார். தாயுமானவருக்குரிய மலர்கள் அரசனுக்கு செல்வதைக் கண்டு சினந்து மன்னரிடம் முறையிட்டார். மன்னனோ முனிவரை அலட்சியம் செய்து மலர் வணிகனது செயலை ஊக்குவிக்க, மனம் நொந்து முனிவர் தாயுமானவரிடமே முறையிட்டார்.
தனக்குச் செய்யும் குறைகளைக் கூட தாங்கிக் கொள்ளும் இறைவன், அடியார்க்குச் செய்கின்ற இடர்களைத் தாங்குவதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், மேற்கு முகமாக திரும்பி உறையூரை நோக்கியதால், மண்மாரி பொழியத் தொடங்கியது. இதனால் ஊரை மண் மூடியது.
மக்கள் தங்களைக் காக்க எல்லைத் தெய்வமாக விளங்கிய வெக்காளி அம்மனை விட்டால் வேறுவழியில்லை என்று ஓலமிட்டுச் சரண் அடைந்தனர். அன்னை இறைவனை வேண்டினாள். மண் மாரி நின்றது. ஆனாலும், மக்கள் வீடிழந்தனர். வெட்ட வெளியே தங்குமிடமானது. மக்கள் துயர்கண்டு அன்னை வெக்காளியம்மன், உங்கள் அனைவருக்கும் வீடு கிடைக்கும் வரை நானும் உங்களைப் போல வெட்ட வெளியிலேயே இருக்கிறேன் என்று அருளியதாக வரலாறு கூறுகிறது.
இன்றைக்கும் பலர் வெட்ட வெளியே வீடாகக் கொண்டிருக்கின்றனர். அன்னையின் உறுதிமொழி நிறைவேறாததால் இன்றைக்கும் அருள்மிகு வெக்காளியம்மன் வானமே கூரையாகக் கொண்டு அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.
வெட்ட வெளியே வீடாகக் கொண்ட வெக்காளியம்மா! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.