பக்தியே ஆதாரம்.. பகட்டு அடையும் சேதாரம்!

ஆன்மிக கட்டுரைகள்

panduranga
panduranga
panduranga

பண்டரிபுரத்துக்கு கொஞ்ச தூரத்திலே ஒரு கிராமம் அதில் போதாலா என்று ஒரு துணி வியாபாரி அடியாருக்கு அன்ன மிட்டே பரம ஏழையானவர் அவர் பாண்டுரங்க பக்தர். ஒவ்வொரு ஏகாதசியும் உபவாசம் .

பண்டரிபுரம் சென்று அங்கு பஜனையிலும் விட்டலன் சங்கீர்த்தனத்தில் சேர்ந்து கொண்டு அனுபவித்தும் மறுநாள் துவாதசி பாரணைக்கு யாராவது ரெண்டு பாகவதர்களை அழைத்து அன்னமிட்டு தாம்பூலம் கொடுத்து உபசரித்துவிட்டு பிறகு தான் புசிப்பது வழக்கம். பல வருஷங்களாக இது நடந்து வந்தது. மாதத்திற்கு ரெண்டு தடவை இது விடாமல் நடந்தது. ஒரு தடவை என்ன ஆயிற்றென்றால் யாரோ ஊரிலே ஒரு பெரிய மனுஷனுக்கு திடீரென்று ஏகாதசி உபவாசம் கழித்து மறுநாள் பாரணைக்கு ஆயிரம் பேருக்கு அன்னதானமும் கை நிறைய தக்ஷிணையும் கொடுப்பதாக பரவலாக அறிவித்து அந்த துவாதசியன்று எல்லோரும் அங்கு சென்றுவிட்டார்கள்.

ஏகாதசி பூரா உபவாசமிருந்து துவாதசி காலை சந்திரபாகாநதியில் குளித்து
விட்டு விட்டலனை தரிசித்து விட்டு கணவனும் மனைவியுமாக வெகுநேரம் யாராவது அதிதிகள், பாகவதர்கள் (அவரால் முடிந்தது யாராவது ரெண்டு பேருக்கு மட்டும் தான்) கிடைத்தால் அவர்களை உபசரித்து அன்னமிட்டு தக்ஷிணை கொடுத்து அவர்கள் ஆசிர்வாதத்திற்கு பிறகுபோஜனத்துக்கு காத்திருந்தார்கள்.

நேரம் ஓடிக்கொண்டிருந்ததே தவிர யாருமே கிடைக்கவில்லை.
ரெண்டுபேரும் கொலை பட்டினி. பணக்காரன் அளித்த பாரணை விருந்துக்கு அனைவரும் சென்று விட்டார்களே, தவிர கை நிறைய காசு வேறே!!. யார் போதாலாவின் சாப்பாட்டிற்கு காத்திருப்பார்கள்?. உச்சிவெயில் தாண்டிய வேளையில் ஒரு கிழவர் மெதுவாக அந்த பக்கமாக நடந்து வந்தார்.

“பாண்டுரங்க விட்டலா!! பண்டரிநாதா விட்டலா”என்று ராகமாக பஜனை செய்து கொண்டுவந்தவரை பார்த்ததும் போதாலா ஓடிச்சென்றார். அவரை உபசரித்து வீட்டுக்கு பாரணைக்கு அழைத்தார். ரொம்ப சந்தோஷம் அவருக்கு ஒருவராவது கிடைத்தாரே என்று.

“இந்த ஊரில் இன்று ஒரு பெரிய மனிதர் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்கிறார். எல்லோரும் அங்கே சென்று விட்டார்கள் போலிருக்கிறது.”
எனக்கு அங்கே செல்ல இஷ்டமில்லை. ஆகவே நீங்கள் அழைத்ததும் உங்கள் வீட்டுக்கு வந்தேன்”. இதற்குள் ஒரு கிழவி அந்த பக்கமாக வந்து யாரையோ தேடிக்கொண்டிருந்தாள். அவளையும் வீட்டுக்கு அழைத்த
போதாலா அவள் அந்த கிழவரை தான் தேடி வந்தவள் என்றும் அவள் அவர் மனைவி என்றும் அறிந்து கொண்டார்.

அவர் மகிழ்ச்சி இப்போது இரட்டிப்பு. ரெண்டு பேர் வழக்கம்போல் கிடைத்துவிட்டார்களே. இருவருக்கும் போஜனம் நடந்தது. அவர்கள் காலில் விழுந்து வணங்கி ஆசிர்வாத அட்சதை பெற்றுக் கொண்டு வெற்றிலை தாம்பூலத்தில் ஒரு நாணயத்தை வைத்து புக்த தக்ஷிணைக்கு பிறகு போதாலாவும் அவர் மனைவியும் மீதியை உண்டனர்.
எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. இந்த ஊரில் இன்று தடபுடலாக ஒரு பெரிய மனிதர் கொடுக்கும் விருந்துக்கு நீங்கள் சென்றிருந்தால் நல்ல உணவாக கிடைத்திருக்குமே, இந்த ஏழையின் வீட்டில் வெறும் கிச்சடி பூரி சப்ஜி தான் கொடுக்க முடிந்தது”

“எனக்கு அந்த விருந்து பற்றி தெரியும். ஆனால் போக விரும்ப வில்லை. அங்கு ஆணவத்தோடு வறட்டு கவுரவத்துக்காக அன்ன தானம் நடக்கிறது. இங்கு உள்ளன்போடு எளியோர் அளிக்கும் ஆசார உணவு எனக்கு பிடிக்கிறது.

அப்படி ஒரு வேளை நான் அங்கு சென்று உணவு கேட்டாலும் கொடுக்க மாட்டார்கள் “

“ஏன் உங்களுக்கு உணவு இல்லை என்பார்கள்?”

“ஆயிரம் பேருக்கு மட்டும் தான் சாப்பாடு அங்கு. முன்பாகவே டோக்கன் வாங்கினால் தான் சாப்பாடு. நான் வாங்கவில்லையே!”
ஆயிரக்கணக்கான பேருக்கு உணவு பண்ணியிருக்கும்போது பத்து இருபது பேர் கூட வந்தால் இல்லையென்று சொல்ல மாட்டார்களே”
” நீ சொல்வது தப்பு போதாலா. டோக்கன் இல்லாதவர்களுக்கு சாப்பாடு கிடையாது என்று எல்லாம் ரூல் போட்டிருக்கிறார்கள்!!

எனக்கென்னமோ அப்படி கொடுரமாக நடக்காது என தோனுகிறது.”
“வா என்னோடு இப்பவே” என்று கிழவர் போதாலாவை இழுக்காத குறையாக அழைத்து போனார்.

அந்த மண்டபத்தில் ஏக கூட்டம் ஒரு பக்கம் தரையில் இலை போட்டு நிறைய பேர் அமர்ந்திருக்க ஒருபக்கம் சாப்பிட்டு முடித்தவர் வரிசையாக நின்று கொண்டிருக்க ஒருவர் அதட்டி மிரட்டி உருட்டி அவர்களை மேய்த்து கொண்டிருந்தார் ஒரு பக்கம் கூச்சல். எங்கு பார்த்தாலும் அதிகாரம்.
கிழவர் உள்ளே சென்று உணவு சாப்பிடும் பந்திக்கு போக முயன்றபோது ஒரு ஆள் தடுத்தான்.

“எங்கே போகிறீர்கள்?”.
“சாப்பிட.”
“டோக்கன் இருக்கா எடும்”
“டோக்கன் இல்லையே”
“அப்படின்னா சாப்பாடு இல்லை. போங்கோ”

அவனுக்கு ஒருவாறு டிமிக்கி கொடுத்துவிட்டு சென்றபோது மற்ற இரண்டுபேர் அதே கேள்வி ” சாப்பாடு கிடையாது”..

அவர்களிடமிருந்து மெதுவாக நழுவி கிழவர் உள்ளே பந்திக்கு சென்று விட்டு அங்கு ஒரு இலைமுன் அமர முயற்சிக்கும்போது ஒருவன் பார்த்து விட்டு தரதரவென்று அவரை இழுத்தான்.

மற்றவன் அவர் முதுகில் ஒரு கைத்தடியால் “பொடேர்” என்று அடித்தான்.

கிழவர் கீழே விழுவதுற்குள் அங்கிருந்த அத்தனைபேரும் “ஹா ஹய்யோ”
வலிக்கிறதே” என்று ஏக காலத்தில் கத்தினர்.

அங்கிருந்த ஆயிரக்கணக்கானோர் முதிகிலும் கைத்தடியின் வலி…

நிமிஷத்தில் புரிந்துகொண்டார் வியாபாரியான பணக்காரர்.

கீழே விழுந்த கிழவரை தேடினார் போதாலா. அவரையும் காணோம் அவர் அருகே நின்று இருந்த கிழவியாக வந்த ருக்மணியும் காணோம்.

வந்தது கிழவர் அல்ல விட்டலனே என்று போதாலாவும் அவர் மனைவியும் மகிழ்ந்து பாண்டுரங்கனை போற்றி தங்கள் வீட்டில் துவாதசி பாரணைக்கு வந்த தெய்வத்தை வாழ்நாள் பூரா நன்றியோடு பாடினர்.

பக்தியே ஆதாரம்.. பகட்டு அடையும் சேதாரம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply