e0af8d-e0aea8e0af87e0aea4e0af8d.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ்க் கதைகள் 120
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
திருச்செந்தூர் திருப்புகழ்
நேத்ர அர்ப்பணேஸ்வரர்
சிவபெருமானை பூஜித்து திருமால் சக்ராயுதம் பெற்ற வரலாறு, ‘திருவீழிமிழலை’ தலத்தில் நிகழ்ந்ததாக, அந்தத் தலத்தின் தலபுராணம் கூறுகிறது. கும்பகோணம் – பூந்தோட்டம் வழியில் அமைந்துள்ளது திருவீழிமிழலை. இந்தத் தலத்தின் தலவிருட்சம் வீழிச் செடி ஆதலால், இந்தப் பெயர் வந்தது. திருமால் வழிபட்ட தலம் ஆதலால், ‘விஷ்ணுபுரம்’ என்றும் பெயர். விஷ்ணுபுரம், தற்போது திருவீழிமிழலைக்கு அருகில் தனி ஊராக உள்ளது.
வீழிவனத்தில் வானுலகில் இருந்து கொண்டு வந்த விமானத்தில் ஜோதிர்லிங்க மூர்த்தியை எழுந்தருளச் செய்து வழிபட்டார் திருமால். இங்கு, ‘மானச தடாகம்’ எனும் தீர்த்தத்தை உண்டாக்கி அதில் தாமரையை வளர்த்தார். தினந்தோறும் ஆயிரம் தாமரை மலர்களால் வீழிஅழகரை அர்ச்சித்து வந்தார். ஒரு நாள், ஒரு மலர் குறைந்திருப்பது கண்டு தமது கண்ணையே பெயர்த் தெடுத்து சிவபெருமானை பூஜித்தார் திருமால்.
முன்பு ஜலந்தராசுரன் என்னும் அசுரனை வதைத்த சக்ராயுதத்தை தமக்கு அளிக்குமாறு சிவனாரிடம் வேண்டினார். (சிவபெருமான், சக்ராயுதத்தால் ஜலந்தரனை அழித்த வரலாறு திருவிற்குடி வீரட்டத்தல வரலாற்றில் காணப்படுகிறது. அந்தச் சக்கரமே சுதர்சனம் எனப்படும். திருமால் வேண்டியபடியே ஜலந்தரனைக் கொன்ற சக்கரத்தை அருளினார் சிவபெருமான்’ என்று திருவீழிமலை திருத்தல மான்மியம் குறிப்பிடுகிறது.
தவிர, சைவத் திருமுறைகளில் பல இடங்களில் இந்த வரலாறு பேசப்படுகிறது. ‘மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்’ என்று திருப்பல்லாண்டில் பாடுகிறார் சேந்தனார். ‘தருப்பமிகு சலந்தரன் தன் உடல் தடிந்த சக்கரத்தை வேண்டியிங்கு விருப்பமொடு மால் வழிபாடு செய்ய இழிவிமானம் சேர் மிழலை’ என்பது திருஞான சம்பந்தரது பாடல்.
திருமால் கண்ணைத் தந்து பூஜித்ததால், இங்குள்ள ஸ்வாமிக்கு நேத்ரார்ப்பணேச்வரர் என்று பெயர். இங்குள்ள உற்சவர் சக்ரதான மூர்த்தி என்ற பெயரில் திகழ்கிறார். திருக்கரங்களில் மான்- மழு ஏந்தி, அருகில் பார்வதிதேவியுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார் இவர். திருமாலுக்கு சக்கரம் அளிக்கும் அமைப்பில் உள்ள இந்த மூர்த்தியை, ‘சக்கரத் தியாகர்’ என்றும் அழைப்பர்.
இந்தத் தலத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் 2ஆம் நாள், திருமால், சிவபெருமானை பூஜித்து சக்ராயுதம் பெற்ற ஐதீக விழா கொண்டாடப்படுகிறது. முதல் நாள் மாலை வேளையில், ஊருக்கு மேற்குப் புறம் உள்ள மானச திருக்குளக்கரையில் மலர்களை சேகரிக்கும் மகா விஷ்ணு இரவு கோயிலுக்கு வந்து சேர்வார். மறு நாள் மாலை வேளையில் ஆயிரத்தெட்டு பூக்களால் அர்ச்சனை செய்யும் வைபவம். அன்று முன்னிரவில், திருமாலுக்குக் காட்சி தந்து சக்ராயுதம் அருள்கிறார் வீமிழலை பிரான். இதைத் தொடர்ந்து, சிவ பெருமானின் சக்கர நடனத்தை திருமால் கண்டுகளிக்கிறார்!
தொண்டை நாட்டிலுள்ள ஒரு தலத்திலும் திருமால் சக்கரம் பெற்ற வரலாறு வழங்கப்பெறுகிறது. காஞ்சிபுரம்-அரக்கோணம் வழியில் உள்ள இத்தலம் திருமாற்பேறு (தற்போது திருமால்பூர்) எனப்படுகிறது. திருமால் வழிபட்டு பேறு பெற்ற தலம் ஆதலால், இந்தப் பெயர் பெற்றதாகக் கூறுவர். அரிச்சந்திரபுரம் என்றும் ஒரு பெயர் உண்டு. ‘மாலினார் வழிபாடு செய் மாற்பேறு’ என்று திருஞானசம்பந்தரும், ‘மணிவண்ணற்கு அருள் செய்தவர் மாற்பேறு’ என்று அப்பர் பெருமானும் இந்தத் தலத்தைப் போற்றுகின்றனர்.
இங்கு, சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார் ஸ்வாமி. மால்வணங்கீசர் மற்றும் மணிகண்டேச்வரர் ஆகிய திருநாமங்களுடன் திகழ்கிறார். அம்பிகையின் திருநாமம் அஞ்சனாட்சி. இங்கு, நந்தி பலிபீடத்துக்கு முன்பாக கருவறையை நோக்கி கூப்பிய கரங்களுடன் காட்சியளிக்கிறார் திருமால். இவரின் பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரம். இதுபோன்ற தரிசனத்தை வேறு தலங்களில் காண்பது அரிது. வலக் கரத்தில் தாமரை மலரும், இடக் கரத்தில் கண்ணையும் ஏந்தி சிவனாரை பூஜிக்கும் நிலையில்- நின்ற கோலத்திலான திருமாலின் உற்சவ விக்கிரகமும் இங்குண்டு.
திருப்புகழ் கதைகள்: நேத்ர அர்ப்பணேஸ்வரர்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.