e0af8de0aea3e0aebe-e0ae8ee0aea9e0af8d-e0ae89e0ae9fe0af88e0aeaee0af88e0aeaae0af8d-e0aeaae0af8ae0aeb0e0af81e0aeb3e0af8d50.jpg" style="display: block; margin: 1em auto">
அண்ணா என் உடைமைப் பொருள் – 50
புரிந்து கொள்ளும் ஆர்வம் மறைந்தது
– வேதா டி. ஸ்ரீதரன் –
அண்ணா எலக்ட்ரானிக் சாதனங்களை அதிகம் பயன்படுத்தியதே இல்லை.
அவரிடம் ஒரு ட்ரான்சிஸ்டர் இருந்ததைப் பார்த்திருக்கிறேன். திருவான்மியூர் அறையில் அவர் தங்கி இருந்த போது ஒரு மினி ஃப்ரிட்ஜ் வைத்திருந்தார். அந்த அறையில் கட்டில் கிடையாது. வெறும் பாய், விரிப்பு, தலையணை மட்டுமே பயன்படுத்துவார்.
உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு தி. நகர் வீட்டுக்கு வந்த பின்னர் தான் ஓரளவு வசதியான கட்டிலையும் படுக்கையையும் பயன்படுத்தினார். இறுதிக் காலத்தில் படுக்கைப் புண் வந்து விடக் கூடாது என்பதற்காக டாக்டர்கள் அறிவுரையின் பேரில் விசேஷமான படுக்கையைப் பயன்படுத்த வேண்டி வந்தது. டாக்டர்கள் வற்புறுத்தியதால் அறையில் ஏசி மாட்டுவதற்குச் சம்மதித்தார். ஆனாலும், ஏசி ஓடிக் கொண்டிருக்கும் போது, அண்ணா, அறைக் கதவைத் திறந்தே வைத்திருப்பார்.
(இதில் ஒரு விந்தையான விஷயத்தையும் நான் கவனித்திருக்கிறேன். அண்ணா மிகுந்த வெம்மையான தினங்களிலும் கழுத்து வரை போர்த்திக் கொண்டு தான் உறங்குவார். மிகவும் சூடான நீரையே அருந்துவார். அவருக்குக் குளித்து விடும் போது பாத்ரூம் அனலாக இருக்கும். அவ்வளவு சூடாகத் தண்ணீர் விட வேண்டும். எனக்கு வியர்த்துக் கொட்டும். ஆனால், அண்ணாவுக்கு வியர்க்காது.)
அவருக்குத் தொலைபேசி இணைப்பு இல்லை. தங்கி இருந்த வீடுகளில் இருக்கும் தொலைபேசியே அவருக்குப் போதுமாக இருந்தது. கடைசி காலத்தில் ஒரு மொபைல் வைத்திருந்தார். அதை அவர் அதிகம் பயன்படுத்தவும் இல்லை.
பெரும்பாலும், அவர் பயணங்களைத் தவிர்த்து விடுவார். தவிர்க்க இயலாத சூழலில் அன்பர்கள் யாராவது அவரைக் காரில் கூட்டிச் செல்வார்கள். அல்லது டாக்சியில் போவதும் உண்டு. மற்றபடி, அவருக்குச் சொந்த வாகனம் எதுவும் கிடையாது.
அண்ணாவிடம் டிவி இல்லை. தங்கி இருக்கும் வீடுகளில் டிவி இருந்தால் மாலை நேரம் செய்திகள் மட்டும் பார்ப்பார். கடைசி காலம் சுமார் எட்டு ஆண்டுகளாக அதுவும் இல்லை.
எனக்குத் தெரிந்த வகையில் இவை தான், அதிகபட்சமாக, அவர் பயன்படுத்திய விலை உயர்ந்த பொருட்கள்.
அண்ணாவின் எளிமை அவருக்கு எளிதான விஷயமாக இருந்தது என்பதும் உண்மை, எங்களில் சிலரால் அதை ஜீரணிக்க முடியவில்லை என்பதும் உண்மை.
அதையும் விட, அண்ணா பணம் சம்பாதித்த ‘‘லட்சணத்தை’’ நினைத்தால் வேதனை மட்டுமல்ல, ஆத்திரமும் வரும். அவரது உழைப்புக்கும் வருமானத்துக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.
சில பதிப்பகங்களில் தருவதாக வாக்களித்த பணத்தைத் தர மாட்டார்கள். அண்ணா அவர்களிடம் கடுமை காட்ட மாட்டார். அதிலும், ஒரு பெரிய பதிப்பாளர் நடந்து கொண்ட விதம் என்னை மிகவும் ஆத்திரத்துக்கு உள்ளாக்கியது. அவரும் அண்ணாவுக்குப் பணம் தர மாட்டார். அண்ணாவும் அவரிடம் வற்புறுத்திப் பணம் கேட்க மாட்டார். ‘‘நீ அவனுடைய பாவச்சுமையை அதிகரிக்கிறாய்’’ என்று ஸ்வாமி அண்ணாவின் கனவில் வந்து திட்டினாராம். அதன்பின்னர் அண்ணா, அந்தப் பதிப்பாளரிடம் பண விஷயத்தைக் கொஞ்சம் கண்டிப்புடன் பேசினார்.
அப்போது அந்தப் பதிப்பாளர் தருவதாக வாக்களித்த தொகை – ஒரு பெரியவர் தலையீட்டின் பேரில் – வேறு ஒருவருக்குக் கொடுக்கப்பட்டு விட்டது.
திவ்ய வித்யா ட்ரஸ்ட் இருந்த ஒரே காரணத்தால் அண்ணாவுக்குப் பணப்பிரச்சினை எழவில்லை.
அண்ணா, சில வேத பாடசாலைகளுக்கும் கோசாலைகளுக்கும் தொடர்ந்து நன்கொடை அனுப்புவார். அவ்வப்போது செய்திப் பத்திரிகைகளில் உதவி கோரி வெளியாகும் விளம்பரங்களின் அடிப்படையிலும் சிலருக்குப் பணம் அனுப்புவார்.
அண்ணா முறைப்படி சந்நியாசம் வாங்கவில்லை. காவி உடை அணிவதும் இல்லை. அவர் ஒரு பிரம்மசாரி மட்டுமே. இருந்தாலும், அவர் குடும்ப நிகழ்ச்சிகளுக்குப் போவதில்லை. ஒருமுறை ஒரு திருமணத்துக்குப் போக வேண்டும் என்ற கட்டாயம். ஆனால், ஸ்வாமி அதற்குத் தடை போட்டு விட்டார். அப்போது ஸ்வாமி அவரை ‘‘நைஷ்டிகீ’’ என்று குறிப்பிட்டாராம்.
நிகழ்ச்சிகளுக்குப் போவதில்லை என்றாலும், ஆசீர்வாதமாகப் பணம் கொடுக்கத் தவற மாட்டார்.
பணவரவு விஷயத்தில் அவர் காட்டும் அக்கறையின்மை எனக்கு எரிச்சலாகவே இருக்கும். அதேபோல, மற்றவர்களுக்காக அவர் செலவு செய்யும் விதம் வேடிக்கையாக இருக்கும். வரவு, செலவு – இரண்டையுமே அவர் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.
அதேநேரத்தில், பணத்தை அவர் அலட்சியமாக நினைத்ததும் இல்லை. தனக்காகச் செலவு செய்யும் போது மிகவும் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பார். பிறருக்குப் பணம் தரும் போது மிகுந்த கடமை உணர்வுடன் கொடுப்பார்.
அவரது பர்ஸ் அலமாரியில் தான் இருக்கும். அண்ணா ஒருபோதும் பணத்தைப் பூட்டி வைத்தது இல்லை. ஒருமுறை அவருக்குப் பணிவிடை புரிவதற்காக ஓர் இளைஞரை யாரோ அனுப்பி இருந்தார்கள். அவர் அண்ணாவின் பர்சில் இருந்து அவ்வப்போது பணம் திருட ஆரம்பித்தார்.
இதை அண்ணா என்னிடம், ‘‘அவன் எனக்குத் தெரியாதுன்னு நினைச்சுண்டு அப்பப்ப ஐநூறு ரூபா நோட்டை எடுத்துப் பாக்கெட்ல வச்சிப்பான்’’ என்று சிரித்துக் கொண்டே தெரிவித்த போது, நான் மிகவும் கஷ்டப்பட்டு ஆத்திரத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.
அண்ணாவின் அனுக்கிரகத்தில் அந்த இளைஞருக்கு உயர்ந்த உத்தியோகம் கிடைத்தது. விரைவிலேயே நல்ல மண வாழ்க்கையும் அமைந்தது.
அண்ணா மீது எழும் எரிச்சல், கோபம், வேடிக்கை என்றெல்லாம் நான் சொன்னாலும், அவர் செயல்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதே உண்மை.
புரிந்து கொள்ளும் ஆர்வமும் காலப்போக்கில் மறைந்து விட்டது.
அண்ணா என் உடைமைப் பொருள்(50): புரிந்து கொள்ளும் ஆர்வம் மறைந்தது! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.