e0af8d-e0ae87e0aeb0e0aebee0aeaa.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ்க் கதைகள் 111
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
நிறுக்கும் சூது அன – திருச்செந்தூர்
அருணகிரிநாதர் அருளியுள்ள எழுபத்திநான்காவது திருப்புகழான ‘நிறுக்கும் சூது அன’ எனத் தொடங்கும் இத்திருப்புகழ் திருச்செந்தூர் தலத்துத் திருப்புகழாகும். இப்பாடலில் அருணகிரியார் – மாதர் மயல் தீர்ந்து, ஆறெழுத்தோதி, முருகனை அகக்கண் கொண்டு காண அருள் பெற அருள் புரிவாயக – என வேண்டுகிறார். இனி, பாடலைக் காண்போம்.
நிறுக்குஞ் சூதன மெய்த்தன முண்டைகள்
கருப்பஞ் சாறொட ரைத்துள வுண்டைகள்
நிழற்கண் காணவு ணக்கிம ணம்பல …… தடவாமேல்
நெருக்கும் பாயலில் வெற்றிலை யின்புறம்
ஒளித்தன் பாகஅ ளித்தபி னிங்கெனை
நினைக்கின் றீரிலை மெச்சலி தஞ்சொலி ….யெனவோதி
உறக்கண் டாசைவ லைக்குள ழுந்திட
விடுக்கும் பாவிகள் பொட்டிகள் சிந்தனை
யுருக்குந் தூவைகள் செட்டைகு ணந்தனி ….லுழலாமே
உலப்பின் றாறெனு மக்கர முங்கமழ்
கடப்பந் தாருமு கப்ரபை யுந்தினம்
உளத்தின் பார்வையி டத்தினி னைந்திட ….அருள்வாயே
கறுக்குந் தூயமி டற்றன ருஞ்சிலை
யெடுக்குந் தோளனி றத்தம ரெண்கரி
கடக்குந் தானவ னைக்கொல ரும்புயன் ……மருகோனே
கனத்தஞ் சாபுரி சிக்கல்வ லஞ்சுழி
திருச்செங் கோடுஇ டைக்கழி தண்டலை
களர்ச்செங் காடுகு றுக்கைபு றம்பயம் ……அமர்வோனே
சிறுக்கண் கூர்மத அத்திச யிந்தவ
நடக்குந் தேரனி கப்படை கொண்டமர்
செலுத்தும் பாதகன் அக்ரமன் வஞ்சனை……யுருவானோன்
செருக்குஞ் சூரக லத்தையி டந்துயிர்
குடிக்குங் கூரிய சத்திய மர்ந்தருள்
திருச்செந் தூர்நக ரிக்குள்வி ளங்கிய …… பெருமாளே.
இப்பாடலின் பொருளாவது – நீலகண்டத்தையுடைய தூய சிவபெருமானுடைய அரிய திருக்கயிலாய மலையை எடுத்து வலிமையுடைய தோள்களை யுடையவனும், மார்பில் கொம்புகளால் குத்திய எட்டுத் திசைகளின் யானைகளை வென்றவனும் ஆகிய இராவணனைக் கொன்ற அரிய நீலமேகவண்ணராகிய திருமாலின் திருமருகரே!
பெருமைப் பொருந்திய தஞ்சாவூர், சிக்கல், திருவலஞ்சுழி, திருச்செங்காடு, திருவிடைக்கழி, திருத்தண்டலை, நீணெறி, திருக்களர், திருச்செங்கோடு, திருக்குறுக்கை, திருப்புறம்பயம் என்ற திருத்தலங்களில் உறைபவரே!
சிறிய கண்களும் மிகுந்த மதமும் உடைய யானைகள், குதிரைகள், செலுத்துகின்ற தேர்கள், காலாட்கள் என்ற நாற்படைகளைக் கொண்டு போர் புரிகின்ற பாதகனும், அநீதி யுடையவனும், வஞ்சனையின் வடிவமானவனும் அலங்காரம் உடையவனுமாகிய சூரபன்மனுடைய மார்பைப் பிளந்து உயிரைப் பருகிய கூரிய வேலாயுதம் தங்கி அருள்கின்ற திருச்செந்தூர் என்ற திருநகரில் எழுந்தருளிய பெருமிதம் உடையவரே!
மகிளிரின் மையலில் சிக்கி அடியேன் உழலாமல், அழிவில்லாத ஆறெழுத்தாகிய ஷடாக்ஷர மந்திரத்தையும், மணங்கமழ்கின்ற கடப்பமலர் மாலையையும் திருமுக ஒளியையும், நாள்தோறும் அகக்கண்ணால் கண்டு தியானிக்கத் திருவருள் புரிவீர். – என்பதாகும். இப்பாடலில் அட்ட திக்கஜங்களுடன் இராவணன் போர் புரிந்த கதை ஒளிந்திருக்கிறது.
இந்த அசுர வேந்தன் இராவணன் அல்லது இராவனன் அல்லது இராபணன் என்று அழைக்கப்படுகிறான். இராபணன் என்பது கேள்விப்படாத பெயராக இருக்கிறதல்லவா? இது பற்றி காளிதாசனோடு தொடர்புடைய ஒரு கதை இருக்கிறது. அது என்ன? நாளைக் காணலாம்.
திருப்புகழ் கதைகள்: இராபணன் கதை தெரியுமா..! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.