e0af8de0aea3e0aebe-e0ae8ee0aea9e0af8d-e0ae89e0ae9fe0af88e0aeaee0af88e0aeaae0af8d-e0aeaae0af8ae0aeb0e0af81e0aeb3e0af8d-41.jpg" style="display: block; margin: 1em auto">
அண்ணா என் உடைமைப் பொருள் – 41
– வேதா டி.ஸ்ரீதரன் –
பெரியவா பார்வையில் ஆசாரம், ஜாதி, தீண்டாமை, தீண்டத் தகாதவர்கள் – 3
ஜாதி சம்பந்தப்பட்ட ஆசாரங்கள் மட்டுமல்ல, மத ஆசாரங்களிலும் பெரியவாளின் நிலைப்பாடு அதேபோலத் தான் இருந்தது.
பெரியவா பற்றிய அகோபில மடத்து ஜீயர் பேட்டி பற்றி முந்தைய பதிவு (30. திவ்ய சங்கல்பம்) ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன். அதில் அவர், ‘‘வடகலை சம்பிரதாயம் பற்றி நான் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறேனா என்பதைப் பெரியவா மிகுந்த அக்கறையுடன் கவனிப்பார்’’ என்று சொல்லி இருக்கிறார். ஒவ்வொருவரும் தங்களுடைய சம்பிரதாயத்தைக் குறைவில்லாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே பெரியவா வலியுறுத்திய விஷயம்.
ஒருமுறை ஏதோ சாஸ்திர பாடம் படிக்க வேண்டும் என்று பெரியவா ஆசைப்பட்டாராம். அந்த சாஸ்திர நூலைப் படித்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று விசாரித்தாராம். அவர் விசாரித்த வரை யாருக்குமே தெரியவில்லை. ஏதோ ஒரு ஜீயருக்கு அந்த சாஸ்திரம் தெரிந்திருந்ததாம். (மன்னிக்கவும். சாஸ்திரப் பெயர், ஜீயர் பெயர் பற்றிய முழு விவரங்கள் நினைவில் இல்லை.) அதை அவர் பெரியவாளுக்குச் சொல்லித் தரத் தயார். ஆனால், பெரியவா மொட்டை போட்ட சன்னியாசி. அவரைப் பார்ப்பது தனது சம்பிரதாயத்துக்கு விரோதமான செயல் என்று அந்த ஜீயர் கருதினாராம்.
எனவே, பெரியவாளுக்கும் அந்த ஜீயருக்கும் நடுவே ஒரு திரை போடப்பட்டு சாஸ்திர பாடம் நடைபெற்றதாம்.
பெரியவா எந்த சாஸ்திரத்தையும் படித்துத் தான் தெரிந்து கொள்ள வேண்டுமா என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும், பெரியவாளைப் பார்ப்பது கூடத் தனது சம்பிரதாயத்துக்கு விரோதம் (தீட்டு) என்று நினைப்பவரிடம் பெரியவா பாடம் படிக்க வேண்டுமா என்ற கேள்வி ரொம்ப முக்கியமானது அல்லவா?
இங்கே ஓர் அதி முக்கிய விஷயமும் உண்டு.
மடத்தின் கௌரவத்துக்கு பங்கம் ஏற்படுவதைப் பெரியவா அணுவளவும் அனுமதிக்க மாட்டார். காஞ்சி மடத்தின் பீடாதிபதியை இதுபோல (தீண்டத் தகாதவர் போல) ஒருவர் நடத்துவது மடத்தின் கௌரவத்துக்குக் குந்தகம் என்று பெரியவா நினைத்திருந்தால் இதற்கு ஒத்துக் கொண்டிருப்பாரா?
அப்படியானால், இந்தச் சம்பவத்துக்கு என்ன பொருள்?
இவ்வாறு நடத்தப்படுவது பெரியவாளுக்கோ, மடத்துக்கோ கௌரவக் குறைச்சலை ஏற்படுத்தும் விஷயம் என்று பெரியவா நினைக்கவில்லை என்பதாலேயே அவர் இதற்கு ஒத்துக் கொண்டார். மாறாக, பிற சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் மரபுகளைக் குறைவின்றிக் கடைப்பிடிப்பதைப் பெரியவா மதித்தார், அவர்களை அவ்வாறு நடந்து கொள்ள ஊக்குவித்தார் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
(பெரியவா வாழ்க்கையில் நடந்த இதுபோன்ற சம்பவங்களைக் குறிப்பிடும் போது, அண்ணா, ‘‘மஹதோன் மஹீயான், அணோர் அணீயான்’’ என்ற உபநிஷத் கருத்தைக் குறிப்பிடுவார். பெரிதினும் பெரிதான அது அணுவை விடச் சிறியதாகவும் இருக்கிறது என்பது இதன் விளக்கம்.)
இன்னொரு விஷயத்தையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டியது அவசியம். பெரிவாளைப் பார்ப்பது கூடத் தனது ஆசாரத்துக்கு உகந்தது அல்ல என்று கருதிய அந்த ஜீயர், பெரியவாளுக்கு சாஸ்திர பாடம் சொல்லித் தர மாட்டேன் என்று சொல்லவில்லை.
இது தான் இந்தியாவின் கல்விப் பாரம்பரியம்.
தகுதியுள்ள ஒருவர், சாஸ்திர விஷயங்களில் சந்தேகம் கேட்கும் போது, அந்த சாஸ்திரம் தெரிந்தவர்கள், அதை அவருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். இது அவர்களது அடிப்படைக் கடமை. இதை மீறுவது அவர்கள் படித்த சாஸ்திர பாடங்களுக்கும் அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்த குருமார்களுக்கும் அவர்கள் செய்யும் மிகப் பெரிய துரோகம்.
(தெய்வத்தின் குரல் ஏழாம் பகுதியில் உள்ள அறிவுக்கும் இல்லை அடைக்கும் தாழ் என்ற அத்தியாயத்தில் பெரியவா, விஷ்ணு புராணக் கதை ஒன்றை விளக்கி இருப்பதும் இங்கே நினைவு கூரத் தக்கது.)
ஹிந்து மதத்தின் பல்வேறு சம்பிரதாயங்கள் மட்டுமல்ல, கிறிஸ்தவ, முஸ்லிம்கள் விஷயத்திலும் பெரியவா இத்தகைய அணுகுமுறையையே மேற்கொண்டிருந்தார். அவர்களுக்கு மடத்துப் பிரசாதங்களை அவர் ஒருபோதும் தந்ததில்லை. ஏனெனில், அது அவர்கள் மரபுக்கு விரோதமானது. மேலும், அவர்கள் தங்கள் மதத்து சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கிறார்களா என்பதையும் பெரியவா விசாரிப்பது உண்டு. அவர்கள் மதத்தில் இருக்கும் – அவர்கள் அறிந்திராத – கடமைகளை அவர்களுக்கு எடுத்துக் காட்டிய நிகழ்வுகளும் உண்டு.
கிறிஸ்தவ, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள் ஹிந்து மதத்தில் இருந்து அங்கே போனவர்களே. இருந்தாலும், அவர்கள் மீண்டும் ஹிந்து மதத்துக்குத் திரும்புவதைப் பெரியவா ஆதரிக்கவில்லை. அவர்கள் தங்கள் மதத்துக்கான ஆசரணைகளைக் குறைவில்லாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையே அவர் பெரிதும் வலியுறுத்தினார்.
(இதற்கு மிகப் பெரிய விதிவிலக்கு ஒன்றும் உண்டு. அதைப் பின்னர் விளக்குகிறேன்.)
அண்ணா என் உடைமைப் பொருள் (41): பெரியவா பார்வையில் ஆசாரம், ஜாதி, தீண்டாமை (3) முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.