திருவரங்க நாதரை தரிசிக்க… இப்படிச் செய்தால்… திருப்தி.. பரம திருப்திதான்!

ஆன்மிக கட்டுரைகள்

srirangam-paramapatha-vasal
srirangam-paramapatha-vasal
srirangam-paramapatha-vasal

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்று பெரிய பெருமாள் சந்நிதியில் ஓரிரு நொடிகள் மட்டுமே ஸ்வாமியை தரிசனம் செய்ய முடிகிறது, பெரிய பெருமாளை, நம்பெருமாளை கண்நிறைவாக தரிசனம் காண முடியவில்லை என்று அனைவருக்கும் ஒரு குறை இருக்கும். எத்தனை முறை சென்றாலும் இந்தக் குறையை தவிர்க்க இயலாது.

அடுத்த முறை பெரியபெருமாள் சன்னதிக்கு போகும்போது இப்படி சேவிக்க முயற்சி செய்து பாருங்கள்.

sriranganathar
sriranganathar

1 . கட்டண தரிசன வரிசையை தவிர்க்கவும். கட்டண தரிசன வரிசை அப்பிரதட்சிணமாக செல்லும். எனவே அதை தவிர்க்கவும்.

2. சந்தனு மண்டபத்திலிருந்து காயத்ரிமண்டப நுழைவாயில் படிக்கட்டுகளில் ஏறும்போதே, நம்பெருமாளை சற்று எக்கி பார்க்கவும்; பார்வையை அகற்றவேண்டாம். கர்பகிரகத்தினிடையே பக்தர்கள் நடமாட்டம் இருக்கும்போதே, நம்பெருமாள் முகமண்டலம் தெரியும். தவறவிட வேண்டாம்.

3. காயத்ரி மண்டபத்தினுள் நுழைந்தவுடன், இடப்பக்கமாக வரிசை வளைந்து, அந்தமூலையில் ஸ்ரீவராகப்பெருமாள் இருப்பார், வரிசை வலப்பக்கமாக வளையும் வரை சுவாமி தரிசனம் கிட்டும். இவரை வரிசையில் இருந்தவாறே, சில நிமிடங்கள் நன்றாக தரிசனம் செய்து கொள்ளவும்.

srirangam namperumal
srirangam namperumal

4. ஸ்ரீவராகஸ்வாமியை அடுத்து வரிசை வலப்பக்கமாக, மீண்டும் வலப்பக்கமாக வளைந்தவுடன் தரையில் மரப்பலகை சரிவு போட்டிருக்கும், அதில் சில தப்படிகள் வைத்தவுடன், மூலஸ்தானத்துக்கு எதிரே உள்ள மணத்தூண்களுக்கு அருகே சென்று நின்றுகொண்டு மெதுவாக நம்பெருமாளை பார்த்தவாறே மூலஸ்தானத்தை நோக்கி நகரவும்.

5. மூலஸ்தான படிகளுக்கு அருகே வந்தவுடனேயே ஸ்ரீதேவி, பூமாதேவி சமேதராய் நம்பெருமாள் சேவைசாதிப்பதை பார்த்துக்கொண்டே அடிமுதல், முடிவரை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டே, முன்னகர்ந்து, சற்றே இடதுபுறம் நகர்ந்து, வலமிருந்து இடம், இடமிருந்து வலம், பெரியபெருமாள் சேவையாவார், அப்படியே, ஆதிசேஷனிலிருந்து பார்த்துக்கொண்டே, பெருமாளின் திருமுகமண்டலம், மார்பில் இருக்கும் தாயார், அப்படியே, திருவடிவரை பார்த்துக்கொண்டே, பின்னே நகரவும்.

sriranganayagi-thayar-oonjal-utsav
sriranganayagi-thayar-oonjal-utsav

6. மூலஸ்தானத்தைவிட்டு வெளியே வந்தவுடன், இடதுபுறம் திரும்பி, மூன்று, நான்கு தப்படிகள் வைத்தவுடன், திரும்பவும் இடதுபுறம் சாளரம் வழியாக பெரியபெருமாளின் திருவடிகளின் தங்ககாப்பிட்ட பிரதிமைகளையும், மேலே பிராணவாகார விமானத்தின் அடிப்பகுதியையும் சேவிக்கவும்.

7. பின்னர், வலதுபுறம் திரும்பி, மீண்டும் வலதுபுறம் திரும்பும் இடத்தில் ஸ்ரீவிஷ்ணுமூர்த்தி சுவாமி திருவுருவத்தை சேவித்துவிட்டு, இரு தப்படிகள் எடுத்துவைத்து, மீண்டும் மூலஸ்தானத்தை நோக்கினால், சுவாமி ஆதிசேஷனிலிருந்து, திருமுகமண்டலம் வரை சேவைசாதிப்பார். அப்படியே, பின்னகர்ந்தால், நம்பெருமாள் சேவையாவார்.

இதை ஒருமுறை முயற்சித்து பாருங்க, அப்புறம், எப்படி, எவ்வளவு திருப்தியாக பெரியபெருமாள் சன்னதியிலிருந்து வருவீங்க என்று பாருங்க.

  • மு.ராம்குமார்

திருவரங்க நாதரை தரிசிக்க… இப்படிச் செய்தால்… திருப்தி.. பரம திருப்திதான்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply