e0af8d-e0ae95e0af8ae0ae9ee0af8d.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ் கதைகள் பகுதி 99
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
தண்டை அணி – திருச்செந்தூர் (திருச்செந்தூர் -62)
அருணகிரிநாதர் அருளிய அறுபத்தியிரண்டாம் திருப்புகழ் இது. தண்டை அணி எனத் தொடங்கும் இப்பாடல் திருச்செந்தூர் தலத்திற்கு உரியதாகும். இப்பாடலில் அருணகிரியார், முருகா! தேவரீரைக்கண் குளிரக் கண்டு வணங்க அருள்வாயாக – என வேண்டுகிறார். இனிப் பாடலைக் காண்போம்.
தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
தண்கழல்சி லம்புடன் …… கொஞ்சவேநின்
தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
சந்தொடம ணைந்துநின் …… றன்புபோலக்
கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்
கஞ்சமலர் செங்கையுஞ் …… சிந்துவேலும்
கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்
கண்குளிர என்றன்முன் …… சந்தியாவோ
புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்
பொங்கியெழ வெங்களங் …… கொண்டபோது
பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்
புண்டரிகர் தந்தையுஞ் …… சிந்தைகூரக்
கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்
கொஞ்சிநட னங்கொளுங் …… கந்தவேளே
கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்
கும்பமுனி கும்பிடுந் …… தம்பிரானே.
இத்திருப்புகழில் அருணகிரியார் – தாமரை மலர்மீது வாழும் பிரமதேவரது அண்டமும் அதனைச் சூழ்ந்துள்ள வெளியண்டமும் கொதிப்புற்று விலக வெம்மையான போர்க்களத்தை அடைந்தபோது, பொன் மேருகிரிபோல் மிகவும் அழகாக எல்லா அண்டங்களுந் திருமேனியில் அடங்குமாறு விசுவரூபங்கொண்டு, பிரமதேவருடைய தந்தையாகியத் திருமால், தாம் முன் மூவுலகங்களை ஈரடியால் அளக்கும் பொருட்டு எடுத்த திருவிக்ரம வடிவம் இதற்கு இணையாகாது என்று எண்ணி மகிழ்ச்சியடைய, முன்னாளில் தேவரீர் நடித்தருளிய திருவடிகளினால், திருச்செந்தூரிலும் அடியேன் முன் கொஞ்சிப் பேசி திருநடனஞ் செய்தருளிய கந்தக் கடவுளே!
ஞானமாகிய தனங்களையுடைய வள்ளியம்மையாருடைய திருமேனியி லணிந்துள்ள சந்தன மணத்தை முகர்பவரே! அகத்திய முனிவர் வணங்கும் தனிப் பெருந்தலைவரே! தண்டையும், அழகிய வெண்டையமும், கிண்கிணியும், சதங்கையும், இனிய ஒலியுடைய வீரக்கழலும், சிலம்பும் இனிது ஒலிக்க, தேவரீரது பிதாவாகிய சிவபெருமானது திருமுன் அன்பாக இனிய நடனம் புரிந்து மிக்க மகிழ்சியடைந்து நின்ற அன்புபோலே, அடியேனும் அத் திருநடனத்தைக் கண்டு மகிழ்ச்சி அடையுமாறு, கடப்பமலர் மாலையும், அழகிய மணி மகுடங்களும், தாமரை மலர்ப் போன்ற சிவந்த திருக்கரங்களும், ஒளி வீசும் வேலாயுதமும், கருணை பொழிகின்ற திருக்கண்களும், ஆறு திருமுகங்களும், சந்திர கிரணம் போன்ற குளிர்ந்த ஒளியும் அடியேனுடைய கண்கள் குளிரத் தோன்றி அருள்புரியாவோ? – என வேண்டுகிறார்.
இப்பாடலில் தண்டை, வெண்டை, கிண்கிணி, சதங்கை, தண்கழல், சிலம்பு ஆகிய அணிகலன்கள் பற்றி அருணகிரியார் குறிப்பிடுகிறார். தண்டை என்பது வீரர்கள் அணியும் ஓர் ஆபரணம். முருகப் பெருமானுடையத் திருவடியில் சிறந்த இரத்தினத் தண்டை விளங்கும். அது மிக்க அழகாகத் திகழும். அத் தண்டை இனிய ஒலியை உண்டாக்கும். அத் தண்டையார்க்குந் திருவடியைத் தாரகன் அளப்பருந் தவம் புரிந்தோனாதலின் கண்டான். இதனைக் கந்தபுராணம்
முழுமதி அன்ன ஆறு முகங்களும், முந்நான்கு ஆகும்
விழிகளின் அருளும், வேலும், வேறுஉள படையின் சீரும்,
அழகிய கரம்ஈராறும், அணிமணித் தண்டை ஆர்க்கும்
செழுமலர் அடியும் கண்டான், அவன்தவம் செப்பற்பாற்றோ.
எனக் குறிப்பிடும். கந்தரலங்காரத்தில் அருணகிரியார்,
சிந்திக்கிலேன் நின்று சேவிக்கிலேன் தண்டைச்
சிற்றடியை வந்திக்கிலேன்
என்று பாடுவார்.
வெண்டையம் என்பது, திருவடியில் அணியும் ஓர் ஆபரணம். அது இனிது ஒலிக்கும். பெருமான் திருநடனஞ் செய்யும்போது அத் திருவாபரணம் நன்கு முழங்கும். கிண்கிணி என்பது இடையில் கட்டும் திருவாபரணம். அது முருகப்பெருமானுடையத் திருவரையில் திகழ்ந்து மிகவும் இனிய நாதத்தை உண்டாக்கும்; அவ்வோசை பதினாலு உலகமும் கேட்கும்.
“மண்கமழ் உந்தித் திருமால் வலம்புரி ஓசை அந்த
விண்கமழ் சோலையும் வாவியும் கேட்டது, வேல்எடுத்துத்
திண்கிரி சிந்த விளையாடும் பிள்ளைத் திருஅரையில்
கிண்கிணி ஓசை பதினாலு உலகமும் கேட்டதுவே.
என்று கந்தரலங்காரத்திலும்
குன்றிடிய அம்பொனின் திருவரைக்
கிண்கிணி கிணின்கிணின் கிணினெனக்
குண்டல மசைந்திளங் குழைகளிற் ப்ரபைவீச
என ‘அந்தகன்’ எனத் தொடங்கும் திருப்புகழிலும் அருணகிரியார் குறிப்பிடுவார்.
திருப்புகழ் கதைகள்: கொஞ்சிப் பேசி திருநடம் புரிந்த கந்தக் கடவுள்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.