e0af8d-e0ae8fe0aeb4e0af81-e0aea4.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ் கதைகள் பகுதி 88
– கே.வி. பாலசுப்பிரமணியன் –
குகர மேவு – திருச்செந்தூர்
யார் பெரிய துறவி?
இத்திருப்புகழில் இடம் பெறுகின்ற குகர மேவுமெய்த் துறவினின் மறவா கும்பிட்டு என்ற சொற்கலில் ஒரு அற்புதமான கதை புதைந்திருக்கின்றது. குகரம் என்றால் மலைக் குகை. மலைக் குகைகளில் முனிவர்கள் நாடு, நகரம், வீடு, வாசல், மனைவி, மக்கள், செல்வம், உற்றார், பெற்றார், சுகம் ஆகிய அனைத்தையும் துறந்து இறைவனையே நினைந்து அசைவற்று இருப்பார்கள். அதுபோல அருணகிரியாரும் விலைமகளிரை நினைந்து ஏனைய எனது உறவு மனைவி மக்கள் முதலிய எல்லாவற்றையும் துறந்து அவர்கள் பற்றில் உறுதியுடன் இருக்கின்றேன் என்று அடிகளார் துறவிகளை உவமை கூறினார்.
இதனை விளக்கும் ஒரு கதை உண்டு. ஒரு தீயகுணத்தான் பக்தி, ஞானம், ஒழுக்கம், சீலம், உறுதி, தவம் ஆகிய நற்குணங்களில் ஒன்றும் இல்லாதவன், தன் காமக் கிழத்தியுடன் ஆடியும் பாடியும் கூடியும் ஒரு சோலை வழியே சென்று கொண்டிருந்தான். அங்கே ஒரு மரத்தடியில் ஒரு சிறந்த மாதவ முனிவர் பெருமான் அமர்ந்திருந்தார். அவருக்கு அவன் மீது இரக்கம் உண்டாயிற்று.
“அந்தோ, அருமையாகக் கிடைத்த இந்த மானுடப் பிறவியை இவன் வறிதே கழிக்கின்றானே. காமதேனுவின் பாலைக் களர் நிலத்தில் கொட்டுவது போல விலைமதிக்க ஒண்ணாத ஆயுள் நாளை காமச் செருக்கில் கழிக்கின்றானே. ஔவையார் சொல்லியது போல
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வ ராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே.
என்பது இவனுக்கு தெரியாமல் போனதே. இப்பொது இவனிருக்கும் நிலையில் நாம் இவனுக்கு இதம் சொன்னால் ஏறாதே. ஓட்டைக் குடத்தில் தண்ணீரை நிரப்ப முடியாதே. இவனை எப்படித் திருத்தலாம்? இவனுக்கு உய்வு தேடவேணும். அதற்கு என்ன வழி?” என்று சிந்தித்தார்.
அந்தக் காமுகன் முன் சென்றார். அவனை வலம் வந்தார். அடியற்ற மரம் போல் அப் பாதகன் பாதத்தின் மீது விழுந்து வணங்கினார். பெரிய மகானுடைய சடைமுடி அவன் அடியில் தீண்டியது. வெள்ளை வெளேர் என்று வெள்ளிக் கம்பிபோல் நீண்ட தாடியும், சிவந்த சடையும், கருணைப் பொழியும் முகமும், அருள் வழியும் விழிகளும், அறிவின் சிகரம் போன்ற திருமேனியும் உடைய அத்துறவி, ஒழுக்கங்கெட்ட தன்னை வணங்கியதைக் கண்டு அவன் நாணினான்; நடுங்கினான்.
“முனிவரே, நான் ஈனத் தொழில் புரிபவன். பக்தி ஞானம் அணுவளவும் இல்லாதவன். பாவியாகிய நாயேனை தேவரீர் வணங்கலாமா? இது என்ன அநியாயம்? என்றான்”.
துறவி, “அன்பனே, வருந்தாதே. நீ தான் என்னைக் காட்டிலும் பெரிய துறவி. கடுகளவு இன்பம் சிற்றின்பம்; மலையளவு இன்பம் பேரின்பம். பேரின்பம் தெவிட்டாதது; பரிசுத்தமானது; ஒளிமயமானது; ஞானத்தில் விளைவது. சிற்றின்பம் நோய் செய்வது அசுத்தமானது; இருள் நிறைந்தது; அஞ்ஞானத்தால் விளைவது.
நான் மலைபோன்ற பேரின்பத்தை நாடி மனைவி மக்களையும் நாடு நகரங்களையும் வீடு வாசல்களையும் துறந்தேன். நீ அணுவளவான சிற்றின்பத்தை நாடி மலையளவான பேரின்பத்தையும் அதனை அளிக்கும் ஆண்டவனையும் அவனை அடையும் சாதனைகளாகிய பக்தி ஞான பல விரதங்களையும் துறந்திருக்கிறாய். பெரியதை விரும்பிச் சிறியதை துறந்தவன் நான், சிறியதை விரும்பிப் பெரியதை துறந்தவன் நீ.
சிற்றின்பம் வேப்பெண்ணெய் போன்றது. பேரின்பம் அமுதம் போன்றது. நான் அமுதத்தை நாடி வேப்பெண்ணெயைத் துறந்தேன். நீ வேப்பெண்ணையை விரும்பி அமுதத்தை துறந்தவன். ஆகவே, என் துறவைக் காட்டிலும் உன்னுடைய துறவே பெரியது. நீயே பெரிய துறவி. நான் இந்த மண்ணுலகத்தைத் துறந்தவன். நீ முக்தி உலகையே துறந்தவனாயிற்றே. ஆதலால் என்னிலும் நீ பெரிய துறவி என்பதில் அணுவளவும் ஐயமுண்டோ?” என்று கூறி, மீண்டும் ஒருமுறை அவன் கால்மீது வீழ்ந்தார்.
இந்தப் பொருள் பொதிந்த திருமொழிகளைக் காமுகன் கேட்டான். அவன் மனதில் பசுமரத்தின் ஆணிபோல் அவ்வறவுரை பதிந்தது. அருகில் நின்ற தன் காமக்கிழத்தியை மறந்தான். தனது அறியாமையை நினைந்து வருந்தினான். அக் கணமே அத் தீயவன் தூயவனானான். அம் மகானுடைய பாதமலர் மீது பணிந்தான்.
“ஐயனே! என்னை ஆட்கொள்ள வேண்டும். அந்தோ, எனக்கு மதியிருந்து என்ன? நான் மூடரில் மூடன். நான் உய்வதற்கான நெறியை உபதேசிக்க வேண்டும்” என்று வேண்டினான்.
துறவரசர் அவனுக்கு சட்சு தீட்சையும், மானச தீட்சையும், ஸ்பரிச தீட்சையும் வழங்கியருளினார். இத்திருப்புகழின் முதலடியைப் படிக்கின்றபோது, இந்த வரலாறு நினைவுக்கு வருகின்றது. “துறவிகள் பரத்தை மறவாதது போல், நானும் பரத்தையரை மறவாது அவரைக் கும்பிட்டு உந்தித் தடாகத்தில் முழுகினேன்” என்று கூறி அருணை முனிவர் நயமாக நம்மைத் திருத்துகின்றார்.
தீட்சைகள் ஏழு வகைப்படும். அவையாவன –
- பட்டாடை போட்டு மறைத்துச் சீடனின் வலக்காதில் திருவைந்தெழுத்தை உபதேசிப்பது வாசக தீட்சையாகும்.
- பறவை தனது முட்டையைச் சிறகினால் அணைத்து வெப்பமூட்டி, குஞ்சு வெளிப்பட செய்வது போல, குரு தனது சீடனைத் தன் திருக்கரத்தால் ஸ்பரிசிப்பது ஸ்பரிச தீட்சையாகும்.
- மீன் தனது முட்டைகளைப் பார்வையினால் பொரிக்கச் செய்து, அவற்றின் பசியையும் போக்குவது போல, குருநாதர் தம் சீடனை அருள் பார்வையால் ஞானமீந்து அருளல் சட்சு தீட்சை அல்லது நயன தீட்சை அல்லது சட்சு தீட்சை எனப்படுகிறது.
- ஆமை கரையிலிருந்தவாறே தனது முட்டையைத் தனது மனத்தில் நினைக்க, ஆமைக்குஞ்சு வெளிப்படுவது போல, குரு தம் சீடனை அருள் உருவாய் பாவிப்பது மானச தீட்சையாகும்.
- பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருளின் உண்மையினையும், இயல்பினையும், ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களும் நீங்கி முக்திப் பேறடைய சிவாகமங்கள் வழியில் நின்று தெளிய போதிப்பது சாத்திரத் தீட்சையாகும்.
- சிவயோகம் பயில உபதேசிப்பது யோக தீட்சையாகும்.
- குண்ட மண்டலமிட்டு அக்நி காரியம் செய்து, பாசத்தைப் போக்குவது அவுத்திரி தீட்சையாகும்.
திருப்புகழ் கதைகள்: ஏழு தீட்சைகள் எவை?! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.