திருப்புகழ்க் கதைகள் 273 எந்தத் திகையினும் – சுவாமி மலை – முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
அருணகிரிநாதர் அருளிசெய்துள்ள இருநூற்றி ஆறாவது திருப்புகழான “எந்தத் திகையினும்” எனத் தொடங்கும் திருப்புகழ் சுவாமிமலை தலத்துப் பாடலாகும். இத்திருப்புகழில் அருணகிரியார் “சுவாமிநாதா, பிறவி அலையில் யான் புகுதாமல், உம்மை வழிபட்டு உய்ய, இச் சபையில் வந்து அருள்வாயாக” என வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.
எந்தத் திகையினு மலையினு முவரியி
னெந்தப் படியினு முகடினு முளபல
எந்தச் சடலமு முயிரியை பிறவியி …… னுழலாதே
இந்தச் சடமுட னுயிர்நிலை பெறநளி
னம்பொற் கழலிணை களில்மரு மலர்கொடு
என்சித் தமுமன முருகிநல் சுருதியின் ..முறையோடே
சந்தித் தரஹர சிவசிவ சரணென
கும்பிட் டிணையடி யவையென தலைமிசை
தங்கப் புளகித மெழஇரு விழிபுனல் …… குதிபாயச்
சம்பைக் கொடியிடை விபுதையி னழகுமு
னந்தத் திருநட மிடுசர ணழகுற
சந்தச் சபைதனி லெனதுள முருகவும் …… வருவாயே
தொந்தத் திகுகுட தகுகுட டிமிடிமி
தந்தத் தனதன டுடுடுடு டமடம
துங்கத் திசைமலை யுவரியு மறுகச …… லரிபேரி
துன்றச் சிலைமணி கலகல கலினென
சிந்தச் சுரர்மல ரயன்மறை புகழ்தர
துன்புற் றவுணர்கள் நமனுல குறவிடு …..மயில்வேலா
கந்தச் சடைமுடி கனல்வடி வடலணி
யெந்தைக் குயிரெனு மலைமகள் மரகத
கந்தப் பரிமள தனகிரி யுமையரு …… ளிளையோனே
கஞ்சப் பதமிவர் திருமகள் குலமகள்
அம்பொற் கொடியிடை புணரரி மருகநல்
கந்தப் பொழில்திகழ் குருமலை மருவிய …பெருமாளே.
இத்திருப்புகழின் பொருளாவது – சல்லரி பேரிகை முதலிய வாத்தியங்கள், தொந்தத் திகுகுடதகுகுடடிமிடிமி தந்தத் தனதன டுடுடுடு டமடம என்ற ஒலியுடன், தூய எட்டுக் குலாசலங்களும் கடல்களும் அப்பேரிரைச்சலினால் துன்பமுறுமாறு நெருங்கி ஒலிக்கவும், விற்களிற் கட்டிய மணிகள் கலகலகல என்று ஒலி செய்யவும். தேவர்கள் கற்பக மலர்மாரி பெய்யவும், பிரமதேவரும் வேதங்களும் வியந்து துதி செய்யவும், அசுரர்கள் துன்புற்று இயமனுடைய நரகவுலகம் சேரவும், விடுத்தருளிய கூரிய வேலாயுதக் கடவுளே;
பரிமள மிக்க சடை முடியை உடையவரும் செந்தீ வண்ணரும், பேராற்றலும் பேரழகுமுடையவரும் அடியேனுடைய பிதாவும் ஆகிய சிவபெருமானுக்கு உயிர் போன்றவரும், மலைமன்னன் திருமகளாரும் மரகத மேனியையுடையவரும், மிகுந்த வாசனை தங்கிய மலையனைய திருமுலைகளை உடையவருமாகிய உமையம்மையார் பெற்றருளிய திருப்புதல்வரே;
தாமரை வீட்டில் வீற்றிருக்கின்ற சீதேவியையும் பூதேவியையும் அழகிய பொற்கொடிபோல் துவளுகின்ற மெல்லிய இடையையுடைய நீளாதேவியையும் மருவுகின்ற நாராயண மூர்த்தியின் திருமருகரே; நல்ல பரிமள மிக்க மலர்ச் சோலைகள் சூழ்ந்துள்ள சுவாமிமலையின்மீது எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே;
எல்லாத் திசைகளிலும், வான முகட்டிலுள்ள அண்டங்களிலும் இருந்து வாழ்கின்ற நானா வகையான யோனி பேதங்கள் எல்லாவற்றிலும் அந்தந்த உடம்புகளை எடுத்துப் பிறந்து பிறந்து உழலாவண்ணம், எடுத்த இப்பிறப்புடன் முடிவடைந்து மீண்டும் இங்கு பிறவாமல் தேவரீருடன் அத்துவிதம் உற்று உயிர் நிலைபேறு அடையவும் தேவரீருடைய தாமரை மலர் போன்ற இரண்டு பொன்னடிகளிலும் வாசனை தங்கிய மலர்களைக் கொண்டு, அடியேனுடைய சித்தமும் மனமும் நீராயுருகவும், நல்ல வேதங்களிற் கூறிய முறைப்படி தேவரீரைச் சந்தித்து, ஹரஹர சிவசிவ உமக்கே சரணம் என்று கூறி வணங்கவும், தேவரீருடைய இரண்டு சரணாரவிந்தங்கள் அடியேனுடைய சென்னிமேல் தங்கவும், உடல் புளகிக்கவும், இரண்டு கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் மலையருவிபோல் குதித்தோடவும், சம்பைக் கொடிபோன்ற மெல்லிய இடையையுடைய உமையம்மையாரது அழகிய திருமுன்னர், அழகிய திருநடம் புரியும் திருவடி அழகு செய்யவும், (எளியேன் முன்வரும் உமது திருவருளின் பெருக்கை யெண்ணி) அடியேனுடைய உள்ளம் உருகவும் அழகிய இச்சபையில் வந்து அருள் புரிவீர் – என்பதாகும்.
பிரபுட தேவன் அல்லது பிரபுட தேவராயன் என்ற மன்னன் அவையில் முருகவேளை வரவழைக்கும் பொருட்டுப் பாடியருளியது இப்பாடல். யார் அந்த பிரபுடதேவராயன்? நாளை காணலாம்.