திருப்புகழ் கதைகள்: கங்கை பூமிக்கு வந்த வரலாறு!

ஆன்மிக கட்டுரைகள்

e0af8d-e0ae95e0ae99e0af8de0ae95.jpg" style="display: block; margin: 1em auto">

thiruppugazh stories
thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ் கதைகள் – பகுதி 73
இருகுழை எறிந்த – திருச்செந்தூர்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

அருணகிரிநாதர் அருளிய முப்பத்தியிரண்டாவது திருப்புகழ் இது. திருச்செந்தூர் தலத்து முருகப்பெருமானைப் பாடும் அருணகிரியார் மாதர் மயக்கத்தில் தம்மை விழாமல் ஆட்கொள்ள வேண்டுகிறார். இனி பாடலைக் காணலாம்.

இருகுழை யெறிந்த கெண்டைகள் ஒருகுமி ழடர்ந்து வந்திட
இணைசிலை நெரிந்தெ ழுந்திட …… அணைமீதே
இருளள கபந்தி வஞ்சியி லிருகலை யுடன்கு லைந்திட
இதழமு தருந்த சிங்கியின் …… மனமாய
முருகொடு கலந்த சந்தனஅளருப டுகுங்கு மங்கமழ்
முலைமுக டுகொண்டெ ழுந்தொறு …… முருகார
முழுமதி புரிந்த சிந்துர அரிவைய ருடன்க லந்திடு
முகடியு நலம்பி றந்திட …… அருள்வாயே
எரிவிட நிமிர்ந்த குஞ்சியி னிலவொடு மெழுந்த கங்கையு
மிதழியொ டணிந்த சங்கரர் …… களிகூரும்
இமவரை தருங்க ருங்குயில் மரகத நிறந்த ருங்கிளி
யெனதுயி ரெனுந்த்ரி யம்பகி …… பெருவாழ்வே
அரைவட மலம்பு கிண்கிணி பரிபுர நெருங்கு தண்டைக
ளணிமணி சதங்கை கொஞ்சிட …… மயில்மேலே
அகமகிழ் வுகொண்டு சந்ததம் வருகும ரமுன்றி லின்புறம்
அலைபொரு தசெந்தில் தங்கிய …… பெருமாளே.

இத்திருப்புகழில் சிவபெருமானின் மேனி எழில் விவரிக்கப்படுகிறது. நெருப்பைப்போல் ஒளிவிட்டு நிமிர்ந்துள்ள சடையில் சந்திரனுடன், திரண்டு எழுந்த கங்கா நதியையும், கொன்றை மலரையும் தரித்த சிவபெருமான் என அருணகிரியார் பாடுகிறார்.

கங்கை பூமிக்கு வந்த வரலாறு

புனித கங்கை நதி தேவலோகத்தில் இருந்து இந்த பூமிக்கு வந்த வரலாறு மிகவும் நீண்டது; கடினமானது. அத்தகைய சாதனையை புரிந்தவர்கள் நம் நற்குண நாயகன் மற்றும் ரகுகுல நாயகனுமான ஸ்ரீ ராமனின் முன்னோர்களே.

gangai bhageerath - 1

முன்னொரு காலத்தில் பாஹூகன் என்ற அரசன் அயோத்யா நாட்டில் ஆட்சி செய்துகொண்டிருந்தான்.ஒரு சமயம் அண்டை நாட்டு பகைவர்களால் தோற்கடிக்கப்பட்டு காட்டிற்கு வந்தான். காட்டில் அவன் மனைவியுடன் இருந்த சில நாட்கள் கழித்து இறந்து விட்டான்.

அப்போது அவன் மனைவி கர்ப்பமாக இருந்தாள். அவள் ஒளர்வரிஷி ஆசிரமத்தில் ஒரு மகனை பெற்றாள். ஒளர்வரிஷி அவனுக்கு சகரன் என்று பெயர் வைத்து போர் கலைகள் அனைத்தையும் கற்று கொடுத்தார். சகரன் தந்தை ஆட்சி செய்த நாட்டிற்குச் சென்று பகைவர்களை வென்று அரசனானார். பாரதத்தை தாக்க வந்த தாலஜங்கர் சக, யவனர் பர்பர முதலிய அந்நிய தேசத்து பகைவர்களை வென்று சகரன் சக்கரவர்த்தி ஆகிவிட்டார்.

ஒருமுறை சகரன் ஒரு அச்வமேத யாகத்தை தொடங்கினார். அவனுக்கு சுமதி, கேசினி என்று இரு மனைவியர் இருந்தனர். கேசினியின் ஒரே மகன் ‘அசமஞ்சன்’. அவன் அரச பதவிக்கு பொருத்தமில்லாத கெட்ட செயல்கள் செய்ததால் அவனை நாட்டைவிட்டுத் துரத்திவிட்டார்கள். ஆனால் அதற்கு முன் அவனுக்கு ஒரு மகன் பிறந்தான்.

சுமதிக்கு பெரிய வீரர்களாக அறுபதாயிரம் பிள்ளைகள் பிறந்தனர். அச்வமேத யாகங்களை ஒன்றைத் தொடர்ந்து அடுத்ததாக பல யாகங்களை சகரன் செய்தான். இது நெடுநாள் நீடித்தது. சகரன் நூறு யாகம் செய்து விட்டால் இந்திர பதவி அடைந்து விடுவான் என்ற பயத்தில் அச்வமேத யாக குதிரையை இந்திரன் திருடிச்சென்று விட்டான்.

சகர ராஜாவின் மூத்த மனைவியான சுமதி தனது அறுபதாயிரம் புத்திரர்களை அனுப்பி யாகக்குதிரையை கண்டுபிடித்து கொண்டுவர சொன்னார். சகரரின் அறுபதாயிரம் புதல்வர்களும் பூமியெங்கும் சென்று தேடினார்கள். இறுதியில் பூமியை தோண்ட ஆரம்பித்தார்கள். அதள பாதாளம் வரை தோண்டி விட்டார்கள்.

இறுதியில் கபில முனிவரின் ஆசிரமத்தை கண்டனர். கபில முனிவர் தவம் செய்து கொண்டு இருந்தார். அவர் பக்கத்தில் குதிரை மேய்ந்து கொண்டிருந்தது. சகர புத்திரர்கள் குதிரையை திருடிவிட்டு ஏதும் அறியாதவர் போல கண் மூடி பாசாங்கு செய்து கொண்டிருக்கிறார் என நினைத்தனர்.

குதிரையைக் கவர்ந்தவர்கள் ஒன்று பொர் புரியவேண்டும் அல்லது சரணடைந்து கப்பம் கட்டவேண்டும். எனவே சகர புத்திரர்கள் கபில முனிவரை போருக்கு அழைத்தனர். தவம் கலைந்த கபில முனிவர் ஒன்றும் அறியாது கண்களை திறந்தார். அக்கணமே அறுபதாயிரம் பேரும் எரிந்து சாம்பலானார்கள்.

குதிரையை தேடிப்போன புதல்வர்கள் திரும்பவில்லை என்று அறிந்த சகரன் தனது இளய மனைவியின் மகனான அசமஞ்சனின் மகன் அம்ஸுமானை குதிரையைத் தேட அனுப்பினான். அவன் காடு மலை எல்லாம் தேடினான். அவன் தந்தைமார்கள் பூமியை அதள பாதாளமாக தோண்டியதை அறிந்தான். அதில் மழை பெய்து அவ்விடம் கடலாக மாறிவிட்டதைக் கண்டான்.

அந்தக் கடல்தான் வங்கக் கடல் அரபிக்கடல் உள்ளடக்கிய இந்து மா சாகரம். சகர புத்திரர்கள் தோண்டியதால் அதற்கு சாகரம் எனப் பெயர் வந்தது. அதில் பயணம் செய்து இறுதியில் கபில முனிவரின் ஆசிரமத்தை அடைந்தான். அங்கு குதிரை இருப்பதையும் பக்கத்தில் பெரிய சாம்பல் குவியலயும் கண்டான். எல்லாவற்றயும் புரிந்து கொண்டவன் கபில முனிவரை துதி செய்தான்.

இதன் பிறகு ஒரு பகீரதப் பிரயத்தினத்திற்கு பின்னர் கங்கை பூமிக்கு வந்தது. அதனை நாளைக் காண்போம்.

திருப்புகழ் கதைகள்: கங்கை பூமிக்கு வந்த வரலாறு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply