e0af8d-e0aea4e0af8ae0aeb4e0af81.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ் கதைகள் பகுதி 68
அனைவரும் மருண்டு – திருச்செந்தூர்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
பெருநோய் என்பது ஒரு கொடிய நோய்; அதற்குத் தொழுநோய் என்று ஒரு பெயரும் உண்டு; ஏனைய நோய்கள் இந்தக் கொடிய நோயைக் கண்டால் தொழும். அதனால் தொழு நோய் எனப்பட்டது.
இந்த நோயினால் பீடிக்கப்பட்ட ஒருவனைக் கண்ட எல்லோரும் அருவருப்புறுவர். இந்த நோய் நமக்கு ஒட்டி விடக் கூடாதே என்று அகலுவர்; அஞ்சுவர். இந்த நோயின் கொடுமையை அருணகிரியார் இந்தப் பாடலில் இரண்டு அடிகளில் கூறுகின்றார்.
இந்த நோய் வருவதற்கான காரணங்கள் மூன்று என நமது ஆன்மீகப் பெரியவர்கள் கூறுவர். முதலாவதாக சிவஞானிகளாகிய உத்தம பக்தர்கள் மனம் கலங்குமாறு அபாண்டமான பழிச்சொல் கூறி எவன் பழிப்பானோ அவனுக்கு இந் நோய் அணுகும் என்பர்.
அடியார் மனம் சலிக்க எவராகிலும் பழிக்க
அபராதம் வந்துகெட்ட – பிணிமூடி
அனைவோரும் வந்து சிச்சி எனநால்வரும் பழிக்க
அனலோடுஅழன்று செத்து – விடுமாபோல்
(திருப்புகழ் 1203 அடியார் மனம் – பொதுப்பாடல்கள்)
இரண்டாவதாக உத்தமமான பதிவிரதைகளின் மனம் கொதிக்குமாறு எவன் நடப்பானோ அவனுக்கு இக் கொடிய நோய் சாரும். மூன்றாவதாக முன் சொன்ன இரண்டு பாவங்கள் இப் பிறப்பிலேயே வந்து சாரும்.
நாலடியாரில் ஒரு கருத்து சொல்லப்படுகிறது. முற்பிறப்பில் பத்துக் கால்களையுடைய நண்டைப் பிடித்து பத்துக் கால்களையும் ஒடித்து உண்டவனுக்கு கை கால்களில் உள்ள விரல்கள் அழுகி சங்குபோல் மழுமழு என்று இருக்கத் துக்கத்தைத் தரும் இத்தொழுநோய் வந்து இப் பிறப்பில் துன்புறுத்தும் என்பதே அந்தச் செய்தியாகும். இதோ அப்பாடல்,
அக்கேபோல் அங்கை ஒழிய விரல்அழுகித்
துக்கத் தொழுநோய் எழுபவே-அக்கால்
அலவனைக் காதலித்துக் கால் முறித்துத் தின்ற
பழவினை வந்துஅடைந்தக் கால்.
இத்தகைய பெருநோயாளன் அருகில் வந்தபோது, அருவருத்து, வெகுண்டு, அவனை எட்டிப் போ என உரைப்பார்கள். அவனோ கண்டவர்கள் கடிந்துரைக்கும் குறிப்பறிந்து விலகிப் போகாமல் அவர்கள் பின்னர் சென்று வீண்தொந்தரவு தருவான். தொழுநோயினால் நிணங்கள் மிகுந்து, சதைகள் அழுகி உதிரமும் சீழும் வடிந்து, அதனால் பிணநாற்றம் வீசும். அந்த நாற்றத்தைக் கண்டு எல்லோரும் மிகவும் பழித்து விலகிப் போவார்கள். அது கண்டு பிணியாளன் பெரும் வேதனையுறுவான்.
தொழுநோயினால் ஏற்பட்ட புண்களில் புழுக்கள் பல நெளிந்து வெளிப்படவும், ஆழமான குழிகள் விழுந்து எலும்புகள் தெரிந்து, அந்த எலும்புகள் நிலைகுலைந்தும் நோயாளன் துன்பமுறுவான். நோயால் துன்பமுற்ற இந்த உடம்பை மேலும் மேலும் சுமந்து நோயாளன் திரிவான்.
நோயுற்று, புண்பட்டுப் புழு நெளியப் பெருந் துன்பமுற்றாலும் “இந்த உடம்பு இனி வேண்டாம்; மாள்வது நலம்” என்று துணியமாட்டான். இன்னும் சிலகாலம் வாழவேண்டும் என்றே இப் பாரமான உடம்பைச் சுமந்துகொண்டு தடுமாறித் திரிவான். வீடுகள் தோறும் சென்று, அவரவர்கட்கு ஏற்றவாறு இன்னுரைக் கூறி, பின்னர் வேறு வேறு புதிய புதிய வீடுகட்குச் சென்று உணவு அருந்தி அலைவான். இதனை அருணகிரியார் வேறு ஒரு திருப்புகழில்
அசனம் இடுவார்கள் தங்கள் மனைகள் தலைவாசல் நின்று
அநுதினமும் நாணம் இன்றி அழிவேனோ
(திருப்புகழ் 134 கருவின் உருவாகி – பழநி) -என்று பாடுவார்.
இனி தொழுநோய் யாருக்கெல்லாம் வரும்… என்ன அறிகுறி? அறிவியல் என்ன சொல்லுகிறது? நாளைக் காணலாம்.
திருப்புகழ் கதைகள்: தொழு நோயாளன்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.