e0af81e0ae95e0af8de0ae95e0af81e0aeaee0af8d-e0ae85e0aeb0e0af81.jpg" style="display: block; margin: 1em auto">
ஆயர்ப்பாடியில் வாழ்ந்து வந்த ஒரு கணவனும் மனைவியும் கண்ணன் மீது பொறாமை கொண்டிருந்தார்கள். “இந்த யசோதையின் மகனின் அட்டூழியங்கள் எல்லை மீறிப் போகின்றன!
அவன் வீடு வீடாகச் சென்று விஷமம் செய்வதும், வெண்ணெய்ப் பானைகளையும் தயிர்ப் பானைகளையும் உடைப்பதும், ஆட்டம் போடுவதும் கொஞ்சம் கூட நன்றாக இல்லை!” என்று கண்ணனைக் குறை சொல்லி ஏசுவதையே தங்கள் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் அத்தம்பதியர்.
ஒருநாள் மாலை, அந்தக் கணவர் சந்தை வரை செல்ல வேண்டி இருந்தது. அதனால் தன் மனைவியை அழைத்து, “இப்போது நான் சந்தை வரை செல்லப் போகிறேன். பொழுது இருட்டி விட்டதால், அந்த யசோதையின் மகன் கண்ணன் வீடு வீடாகப் புகுந்து விஷமம் செய்யப் புறப்பட்டு விடுவான்.
அதனால் கதவை நன்றாகத் தாழ் இட்டுக்கொள். யாராவது கதவைத் தட்டினால் திறந்து விடாதே! நான் வந்து தட்டினால் மட்டும் தான் நீ கதவைத் திறக்க வேண்டும்!” என்று அறிவுறுத்திவிட்டுச் சென்றார். மனைவியும் கதவைத் தாழிட்டுக் கொண்டாள்.
அரை மணிநேரம் கழித்து யாரோ கதவைத் தட்டும் ஒலி கேட்டது. “யார் அது?” என்று உள்ளிருந்து இந்தப் பெண் கேட்க, “நான் தான் வந்திருக்கிறேன்!” என்று அவளது கணவரின் குரலில் பதில் வந்தது.
ஆஹா! நம் கணவர் தான் திரும்ப வந்துவிட்டார்!” என்று எண்ணி அந்தப் பெண் கதவைத் திறந்தவாறே, அவளது கணவர் வெளியே நின்று கொண்டிருந்தார். “சீக்கிரம் உள்ளே போய்க் கதவைத் தாளிட்டு விடுவோம்! கண்ணன் வரும் நேரம்!” என்று சொல்லிக் கொண்டே வேகமாக உள்ளே வந்து கதவைத் தாழிட்டுவிட்டார் அவளது கணவர்.
அதன்பின் கணவனும் மனைவியும் இணைந்து வீட்டினுள்ளே ஊஞ்சலாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது யாரோ கதவைத் தட்டும் ஒலி கேட்டது. “யார் அது?” என்று அப்பெண் கேட்க, “நான்தான் வந்திருக்கிறேன்!” என்று மீண்டும் அவளது கணவரின் குரலிலேயே பதில் வந்தது.
அவள் ஆச்சரியத்துடன் தன்னுடன் ஊஞ்சலில் அமர்ந்திருக்கும் தன் கணவனைப் பார்த்தாள். ஊஞ்சலில் இருந்த கணவர், “இது கண்ணனின் வேலையாக இருக்கும்! கதவைத் திறக்க வைப்பதற்காக என் குரலிலேயே பேசுகிறான்!” என்றார்.
இப்போது என்ன செய்வது?” என்று மனைவி கேட்க, அருகிலிருந்து ஒரு முறத்தை எடுத்துக் கொடுத்த கணவர், “நீ கதவைத் திறந்து வெளியே நிற்கும் கண்ணனை இந்த முறத்தால் அடித்துத் துரத்திவிடு!” என்றார்.
அவளும் கையில் முறத்தோடு போய்க் கதவைத் திறந்தாள். வெளியே அவளது கணவனைப் போன்ற உருவத்தோடேயே ஒருவர் நிற்பதைக் கண்டாள். கண்ணன் தான் மாறுவேடத்தில் வந்திருக்கிறான் என எண்ணி, வெளியே நிற்பவரை முறத்தால் அடித்தாள்.
வெளியே நின்றவரோ, “உன் கணவனான என்னை ஏன் அம்மா அடிக்கிறாய்?” என்று கதறினார். அவளோ, “நீ மாறு வேடத்தில் வந்தவன் என்று எனக்குத் தெரியும்!” என்று சொல்லி மேலும் அடித்தாள்.
இங்கே பார்!” என்றொரு குரல் வீட்டின் உள்ளிருந்து கேட்டது. திரும்பிப் பார்த்தாள் அப்பெண். ஊஞ்சலிலே கையில் சங்கு சக்கரங்களைத் தாங்கியபடி கண்ணன் அமர்ந்திருந்தான். “அப்படியானால் ஏற்கனவே உள்ளே வந்தவன் தான் கண்ணனா?
என்னிடம் அடி வாங்கியவர் உண்மையிலேயே என் கணவரா!” என்று உணர்ந்து திகைத்துப் போனாள் அப்பெண்.
அப்போது கண்ணன், “உங்கள் இருவருக்கும் அருள்புரியத் தான் இத்தகைய லீலையைச் செய்தேன்!” என்று சொல்லி, இருவரையும் அழைத்து, அவர்களுக்கு இம்மை மறுமை அனைத்துக்குமான நலன்களையும் அருளினான்.
அன்று முதல் அந்தத் தம்பதியர் தீவிர கிருஷ்ண பக்தர்களாக மாறி விட்டார்கள்.இப்படித் தன்னை வெறுக்கும் மனிதர்களிடம் தனது அழகு, குணங்கள், லீலைகள் ஆகியவற்றைக் காட்டி, அவர்களையும் பக்தர்களாக மாற்றி, வென்று எடுப்பவராகத் திருமால் திகழ்வதால் அவர் ‘சூர:’ என்று அழைக்கப்படுகிறார்.
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா”என்று இவ்வாற்றலை ஆண்டாளும் பாடி இருக்கிறாள்., “ஒருவரை வீழ்த்துவது சுலபம், வெல்வதே கடினம்!” என்று கூறுவார். அதாவது, தன்னை வெறுப்பவரைப் போரில் வீழ்த்துவது மிக எளிது, ஆனால் அந்த எதிரிகளின் மனங்களைக் கவர்ந்து அவர்களைப் பக்தர்களாக்கி வென்றெடுப்பதே அரிது.
வெறுப்பவர்களுக்கும் அருளும் வெண்ணெய் கிருஷ்ணன்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.