e0af8d-e0aeaee0af82e0aeaae0af8d.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ் கதைகள் பகுதி 54
அறிவழிய மயல்பெருக (திருச்செந்தூர்) திருப்புகழ்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
இறப்புத் துன்பம்
இத்திருப்புகழின் முதல் மூன்று வரிகளில் இறப்புத் துன்பம் சொல்லப்பட்டிருக்கிறது. அவ்வரிகள் வருமாறு.
அறிவழிய மயல்பெருக வுரையுமற விழிசுழல
அனலவிய மலமொழுக …… அகலாதே
அனையுமனை யருகிலுற வெருவியழ வுறவுமழ
அழலினிகர் மறலியெனை …… யழையாதே
செறியுமிரு வினைகரண மருவுபுல னொழியவுயர்
திருவடியி லணுகவர …… மருள்வாயே
அண்மைக் காலத்தில் மருத்துவமனைகள் பெருகிவிட்டதால் மூப்பின் காரணமாக உயிர் துறப்பவர்களின் துன்பத்தை நாம் காண்பது குறைந்து விட்டது. ஆனால் ஆன்மா பிரியும் காலத்தில் அறிவுகெட்டு, மயக்கமுற்று, நா குழறி, அவயவங்கள் அசைவற்று, புலன்கள் கலங்கித் துன்புறுவார்கள்.
மனைவி மக்கள் முதலியோர் உயிர் பிரியும்போது கதறி அழுவார்களேயன்றி, உயிர்க்கு உறுதி பயக்குந் தன்மையைத் தேடமாட்டார்கள். இயமனுடைய பாசக்கயிற்றினின்று விடுவிக்கவும் ஆற்றலற்று வாளா வருந்துவார்கள்.
அம் மரணகாலத்தில் காப்பாற்ற வல்லவர் முருகவேள் ஒருவரே யாவர். அருணகிரிநாதர் அருளிய, ஞானத்தை அளித்து, யமபயத்தை நீக்கி, அருள் நெறியிற் சேர்த்து, வினைப்பகையை அழித்தொழிக்கும் சீர்பாத வகுப்பில்
முதலவினை முடிவில்இரு பிறைஎயிறு கயிறுகொடு
முதுவடவை விழிசுழல வருகால தூதர்கெட
முடுகுவதும் அருள்நெறியில் உதவுவதும்” என்று முருகவேளின் அருளைக் குறிப்பிடுவார்.
தீவினையைச் செய்த பாவிகளை இயமதூதர்கள் வடவா முகாக்கினிபோல் கொதித்துப் பாசக்கயிற்றால் இறுக்கிக் கட்டிக் கொண்டு, தமது இயமபுரம் கொண்டுபோய்த் துன்புறுத்துவார்கள். புண்ணியஞ் செய்தவர்களை இயம தூதுவர்கள் உபசரித்து, சுகமான வழியில் கொண்டு போவார்கள்.
யமலோகத்திற்கும் மனிதலோகத்திற்கும் இடையிலுள்ள வழி, எண்பத்தாறாயிரம் யோசனைத் தூரம் எனச் சொல்லப்படுகிறது. அவ்வழியானது காடாகவும், கோரமாகவும், நாற்புறங்களிலும் தண்ணீரில்லாத வெளியாகவும் இருக்கிறது. அந்த வழியில் மரங்களின் நிழலுமில்லை; தண்ணீருமில்லை; களைப்படைந்தவனும் இளைத்தவனுமான மனிதன் இளைப்பாறத்தக்க வீடுகளுமில்லை.
யமனுடைய கட்டளையைச் செய்கின்ற யமதூதர்களால் ஆடவரும், மகளிரும் அப்படியே பூமியிலுள்ள மற்றவைகளும் அந்தவழியில் பலாத்காரமாகக் கொண்டுபோகப் படுகிறார்கள். எந்த மனிதர்கள் ஏழைகளுக்கு வண்டி, குதிரை முதலிய வாகனங்களைக் கொடுத்து உதவிசெய்கின்றார்களோ அவர்கள் அந்த வாகனங்களின்மேல் அந்த வழியில் துன்பமில்லாமற் செல்லுகிறார்கள். குடையைத் தானம் செய்தவர்கள் குடையினாலே வெய்யிலைத் தடுத்துக் கொண்டு செல்லுகிறார்கள்.
அன்னதானம் செய்தவர்கள் அந்த வழியில் அன்னத்தைப் புசித்துக் கொண்டு பசியின்றிச் செல்லுகிறார்கள். வஸ்திரங்களைக் கொடுத்தவர்கள் வஸ்திரமுள்ளவர்களாகவும், வஸ்திரம் கொடாதவர்கள் நிர்வாணராகவும் செல்லுகிறார்கள். பொன்னைக் கொடுத்தவர்கள் அலங்கரிக்கப் பட்டவர்களாக சுகமாகச் செல்லுகிறார்கள்.
பூதானம் செய்தவர்கள் விரும்பிய எல்லாவற்றையும் அடைந்து இன்புற்று இனிது செல்லுகிறார்கள். தானியங்களைக் கொடுக்கிற மனிதர்கள் துன்பமின்றிச் செல்லுகிறார்கள். வீட்டைத் தானம் செய்கிற மனிதர்கள் விமானங்களில் மிக்க சுகமாகச் செல்லுகிறார்கள்; தண்ணீரைத் தானம் செய்தவர்கள் தாகமில்லாதவர்களாயும் மிக மகிழ்ந்த மனமுள்ளவர்களாகவும் செல்லுகிறார்கள்; விளக்கு தானம் செய்தவர்கள் பிரகாசமுள்ள வழியில் பிரகாசமுள்ள உருவத்துடன் செல்லுகிறார்கள்.
கோதானம் செய்தவர்கள் எல்லா பாவங்களாலும் விடுபட்டுச் சுகமாகச் செல்லுகிறார்கள். ஒரு மாதம் உபவாசம் இருப்பவர்கள் அன்னங் கட்டிய விமானத்தின் மீது செல்லுகிறார்கள். ஆறு நாளுக்கு ஒருதரம் உபவாசமிருப்பவர்கள் மயில்கள் பூட்டின விமானங்களின் மேல் செல்லுவார்கள். எந்த மனிதன் ஒரு வேளை சாப்பிட்டுக் கொண்டு மூன்று இரவுகளைக் கழிக்கிறானோ? இடைவேளைகளில் சாப்பிடுகிறதில்லையோ அவனுக்கு அழிவற்ற லோகங்கள் கிடைக்கின்றன.
தண்ணீர்ப் பந்தல் வைத்து கோடைக் காலத்தில் தாகத்தால் வாடும் மக்களுக்குத் தண்ணீரும் மோரும் கொடுத்து உதவிய உத்தமர்களுக்கு, அந்த யமலோகத்தில் புஷ்போதகை என்ற நதியை உண்டாக்கிக் கொடுப்பார்கள். அந்த நதியில் அவர்கள் அமிருதம் போன்ற குளிர்ந்த தண்ணீரைக் குடித்துக் கொண்டு சுகமாய் இருப்பார்கள்.
எவர்கள் தீவினைகளைச் செய்தவர்களோ அவர்களுக்கு அந்த நதியில் சீயானது குடிப்பதற்கு ஏற்படுத்தப் படுகிறது. மாமிசங்களைத் தின்றவர்கள் யமலோகத்தில் தமது மாமிசத்தைத் தானே யுண்டு தங்களுடம்பில் வடியும் உதிரத்தைக் குடித்துக்கொண்டுத் தீவாய் நகரத்தில் மல்லாக்கப் படுத்த வண்ணமாக பெருந்துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.
இதனை நன்கு உணர்ந்து கொண்டு நம்மை விட எளியோருக்கு பலவிதமான உதவிகள் செய்து வாழ்வதே நமது அறமாக இருக்கவேண்டும். இவ்வாறு வாழ முருகப்பெருமானை வணங்குதல் வேண்டும். இதனை கந்தரநுபூதியில்
கெடுவாய் மனனே, கதி கேள், கரவாது
இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடு வேதனை தூள்படவே
விடுவாய் விடுவாய் வினை யாவையுமே.
என அருணகிரியார் பாடுவார்.
திருப்புகழ் கதைகள்: மூப்புத் துன்பம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.