முருகப் பெருமானுக்கு உகந்த பங்குனி உத்திரம் குலதெய்வ வழிபாட்டிற்கும் மிகவும் சிறந்ததாக விளங்குகிறது. திருநெல்வேலி மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பங்குனி உத்திர விழா மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. குலதெய்வம் மற்றும் குல சாஸ்தா திருக்கோவிலை வழிபடும் நாளாக இந்தப் பங்குனி உத்திர திருநாள் அமைந்திருக்கிறது. பங்குனி உத்திர நாள் அன்று மக்கள் தங்கள் குலதெய்வம் மற்றும் குல சாஸ்தா கோவில்களுக்குக் குடும்பத்துடன் சென்று வழிபடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். தங்கள் குல தெய்வம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அன்று ஒன்று கூடி பொங்கல் வைத்தும், படையல் இட்டும், தேங்காய் உடைத்தும், மொட்டை அடித்தும், காது குத்தியும், பால்குடம் எடுத்தும் தங்கள் குலதெய்வங்களை பங்குனி உத்திர விழா வினை மிகவும் சிறப்பாக வழிபடுகிறார்கள்.
பங்குனிஉத்திரம் விசேஷ சிறப்புகள்…
பங்குனி உத்திர நாளன்று தெய்வத் திருமணங்கள் நடந்திருப்பதால் தெய்வீக மாதம் என்று அழைக்கப்படுகின்றது. பங்குனி உத்திரத்தில் முருகப்பெருமான் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட நாளாகும். வள்ளி அவதரித்த தினமாக மற்றும் பார்வதி தேவியை பரமேஸ்வரன் கரம்பிடித்த நாளாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது. மதுரை மாநகரில் மீனாட்சிதேவி – சுந்தரேசர் திருக்கல்யாண வைபவம் பங்குனி உத்திரத்தன்று சிறப்பாக நடைபெறுகிறது.. தேவேந்திரன்- இந்திராணி திருமணம் நடைபெற்ற நாளாகவும் திகழ்கிறது. இராமபிரான் சீதாதேவியை கைப்பிடித்த நன்னாள் மற்றும் லட்சுமணன்- ஊர்மிளை, பரதன்- மாண்டவி,, சத்ருக்னன்- ச்ருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த தினம். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் – ரங்கநாதர் திருக்கல்யாண வைபவம் நிகழ்ந்த திருநாளும் பங்குனி உத்திர நாள் ஆகும்.
சுவாமிமலையில் முருகப் பெருமான் பிரணவ மந்திரத்தை உபதேசித்த நாள் பங்குனி உத்திர நாள் ஆகும். பங்குனி உத்திரத்தில்தான் கேரளாவில் பந்தளராஜன் மகனாக ஐயப்பன் அவதரித்தார்.
பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன் “பல்குநன்” என்று பெயர் பெற்ற தினமாக மற்றும் பிரம்மன் தன் நாவில் சரஸ்வதியை வைத்த தினமாகவும் பங்குனி உத்திரம் திகழ்கிறது.
பங்குனி உத்திரத்தில்தான் காரைக்கால் அம்மையார், முக்தி பெற்ற நாளாகும்.
மிகவும் சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திரம் திருமண விரதம் மற்றும் கல்யாண விரதம் என்றும் சொல்லப்படுகின்றது. இந்த தினத்தில் சிவபெருமானையும், கந்தனின் திருமணக் கோலத்தையும் வணங்கி வழிபட திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறும் என்ற நம்பிக்கையோடு மக்கள் வழிபடுகின்றனர்.
தெய்வீக திருமணங்கள் பங்குனி உத்திரத்தன்று தான் நடைபெற்றதால் அனைத்து கோவில்களிலும் பங்குனிஉத்திரம் அன்று மிகப் பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது ஆண்டாள் ஸ்ரீரங்கநாதரை கைபிடித்து மணந்த நாளும் பங்குனி உத்திரம் அன்றுதான் என்பதால் ஸ்ரீரங்கத்தில் மிகப்பெரிய வைபவமாக கொண்டாடப்படுகிறது. காஞ்சி போன்ற க்ஷேத்திரங்களில் ஸ்ரீரங்கநாதர் ஆண்டாள் திருமணத்தை வைணவர்கள் தாயார் திருமண உத்சவங்களாகவும் – பெரும்பாலும் அனைத்து ஆலயங்களிலும் திருமண நிகழ்ச்சியாகவும் கொண்டாடுகின்றனர்.
பங்குனி உத்திரத்தில் சந்திரன் உத்திர நட்சத்திரத்தின் ராசியான கன்னிக்கு செல்கிறார். அதனால் மனதுக்கு உகந்த திருமணம் நடந்தேறும் என்பது ஐதீகமாக கருதப்பட்டு வருகிறது..
பங்குனி உத்திரம் இன்று
விரதம் இருக்கும் முறை…
இந்த பங்குனி உத்திர விரதத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அனுஷ்டிக்கலாம். பங்குனி உத்திரம் அன்று விரதம் இருப்பவர்கள் முழு உபவாசம் இருப்பது நல்ல பலனைத் தரும். அன்றைய தினம் மனதில் பக்தியோடு முருகப் பெருமானை நினைத்து அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி வணங்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும்திருமுருகாற்றுப்படை,, கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் போன்ற நூல்களை படிப்பது சிறப்பானதாகும். ‘ஓம் சரவண பவ’ என்னும் மந்திரத்தை நாள் முழுக்க சொல்ல வேண்டும். ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு விரதம் இருப்பது சிறப்பாகும். வயதானவர்கள் உடல் நலம் பாதிப்புள்ளவர்கள் அவர்களுடைய உடல்நலத்திற்கு ஏற்றவாறு பால், பழம் போன்றவற்றை எடுத்துக்கொண்டு விரதம் இருக்கலாம்.
நாள் முழுவதும் விரதம் இருந்து மாலையில் முருகனுடைய திருக்கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து விரதத்தை முடிக்க வேண்டும். அருகில் முருகன் கோவில் இல்லாதவர்கள் சிவன் அல்லது பெருமாள் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசனம் செய்யலாம் . கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே தெய்வத்தை வணங்கி தீபம் ஏற்றி பிரசாதம் வைத்து வழிபடுவதும் சிறப்பாகும்.
இந்த விரதம் மேற்கொண்டால் விரைவில் தோஷங்கள் விலகி விரைவில் திருமண யோகம் மற்றும் செல்வ செழிப்பு உண்டாகும்.
மேலும் 48 ஆண்டுகள் தொடர்ந்து பங்குனி உத்திர விரதமிருப்பவர்கள் பிறப்பற்ற முக்தி நிலை அடைவார்கள் என்று விரத நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் பங்குனி உத்திரத் திருவிழா மிகவும் சிறப்பாககொண்டாடப்படுகிறது. 10 நாட்களுக்கு கோலாகலமாக கொண்டாடப்படும் இந்தத் திருவிழாவில் வேண்டுதல் நிறைவேற்ற பக்தர்கள் காவடி எடுத்தும் பாதயாத்திரையாக நடத்தும் தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்
பங்குனி உத்திரத்தில் விரதம் இருந்தால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் மற்றும் திருமண தடைகள், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். வறுமை நீங்கி செல்வம் பெருகும்.
பங்குனி மாத உத்திர திருநாளில் இறைவனை பக்தியோடு வழிபட்டால் வாழ்க்கையில் என்றென்றும் மகிழ்ச்சி நிலைக்கும் என்பதால் மக்கள் இந்த விசேஷ நாளில் மிகவும் பக்தியுடன் வழிபட்டு பல நன்மைகளை பெறுகின்றனர்.