இன்று… ‘ஆந்திர’ அனுமத் ஜெயந்தி! அஞ்சனை மைந்தன் அருள் பெறுவோம்!

ஆன்மிக கட்டுரைகள் விழாக்கள் விசேஷங்கள்

hanuman jayanthi

ஜெய் ஸ்ரீராம்  என சொல்லிடுவோம் !
ஜெயம் பெறுவோம் வாழ்வில் !

– கட்டுரை: கமலா முரளி

ராம நாமம் அற்புத சக்தி வாய்ந்தது . “ரா” என்பது அகங்காரத்தை அழிக்கும் அக்னி பீஜத்தையும், “ம” என்பது அன்பை விதைக்கும் அமிர்த பீஜத்தையும் உள்ளடக்கிய, நாமம் சொல்லுவோருக்கு அமைதியையும் வெற்றியையும் தரும் சக்தி வாய்ந்த மந்திரம் ஆகும் !

இராமன் வாகை சூடி விட்டான் என சீதாதேவிக்குச் சொல்லுவதற்காக அசோக வனம் சென்ற அனுமான் , ஒரே சொல்லில் அண்ணல் வெற்றி பெற்றதை அன்னைக்குச் சொல்லிவிட்டான் ! “ஸ்ரீ ராம ஜெயம் “ என ! இந்த திருமந்திரமே “ஜெய் ஸ்ரீராம்” என பாரதத்தின் பல்வேறு பகுதிகளில் முழங்கப் படுகிறது.

அனுமன் ராம நாமத்தை முப்பத்துமூன்று கோடி முறை ஜெபித்துள்ளார் என்று கூறப்படுகிறது. ராம மந்திரமும் , அனும மந்திரமும் சொல்லி ஜெபித்து, ராம பக்த அனுமனை வணங்கி வந்தால், மனோபலமும் கார்யசித்தியும் பெறலாம். மனக்கவலை நீங்கும். எடுத்த காரியம் வெற்றி பெறும்!

அனுமத் ஜெயந்தி

hanuman 2 2
hanuman 2 2

தமிழ்நாட்டில், அனுமத் ஜெயந்தி மார்கழி மாதம் கொண்டாடப்படுகிறது. தனுர் மாதத்தில், அமாவாசையும் மூல நட்சத்திரமும் இணைந்து வரும். அன்று, அனுமத் ஜெயந்தி வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அபிஷேகம், ஹோமம், லட்சார்ச்சனை , ராம ஜெபம் , ராமாயண , விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் என நிகழ்ச்சிகள் நடக்கும். முக்கியமான திருத்தலங்களில் சார்த்தப்படும் வடை மாலை மிகவும் பிரசித்தம். லட்சக்கணக்கில் மிளகு வடைகள் தயாரித்து, அனுமனுக்கு மாலையாகப் போட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாகத் தருவார்கள்.

சில திருக்கோவில்களில், ஒவ்வொரு அமாவாசை அன்றும், மாதா மாதம் மூல நட்சத்திரத்தன்றோ அனுமனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்கிறார்கள். 

பிற மாநிலங்களில் அனுமத் ஜெயந்தி

இந்தியா முழுதும் அனுமத் ஜெயந்தி சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. தமிழ்நாட்டில் தனுர் மாதமாகிய மார்கழி மாதத்தில் அனுமத் ஜெயந்தி கொண்டாடப்படுவதைப் போல கேரளாவிலும் தனுர் மாதத்தில் மூல நட்சத்திரத்துடன் கூடிய அமாவாசை தினத்தில் அனுமத் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி 11-12  தேதிகளில் தனுர் மாத அனுமத் ஜெயந்தி கொண்டாடப்பட்டது.

வடமாநிலங்களிலும், நேபாளத்திலும் சைத்ர மாதமாகிய சித்திரை மாதத்தில் பௌர்ணமி திதியில் அனுமத் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அன்று ராமநாம ஜெபம், சிறப்பு ஆராதனைகள், அனுமன் மூலமந்த்ர ஜெப பாராயணம், அனுமான் சாலிஸா பாராயணம் போன்ற நிகழ்ச்சிகளுடன் அனுசரிக்கப்படுகிறது. வடமாநிலங்களில் ஜாங்கிரி சிறப்பு பிரசாதமாக விநியோகிக்கபடுகிறது.

இந்த ஆண்டு ஏப்ரல் 26 -27 தேதிகளில் பல மாநிலங்களில் அனுமத் ஜெயந்தி கொண்டாடப்பட்டது.

கொரோனா தாக்கத்தில் இருந்து மக்களைக் காக்க வேண்டும் என்ற சிறப்பு வேண்டுதலுடன் ஏப்ரல் மாதத்தில் அனுமத் ஜெயந்தி வாழ்த்துகளைத் தலைவர்கள்  ( பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா,ராஜ்நாத் சிங்,காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பியூஷ் கோயல் ) தெரிவித்து இருந்தனர்.

கர்நாடகாவிலும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், அனுமத் ஜெயந்தி வைகாச மாதம் ( வைகாசி ) கிருஷ்ண பக்‌ஷ (தேய்பிறை ) தசமி திதியில் கொண்டாடப்படுகிறது.

ஆந்திரப்பிரதேசத்தில் அதாவது, தற்போதைய ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், 41 நாட்கள் விழாவாக அனுமத் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதம் பௌர்ணமியில் தொடங்கி, வைகாசி   கிருஷ்ண பக்‌ஷ ( தேய்பிறை ) தசமி திதி அன்று மிகச் சிறப்பான ஆராதனைகளுடன் முடிவடையும். சில தலங்களில், இன்னும் கூடுதல் நாட்களும் பாராயணங்களும், கதாகாலஷேபங்களும் ஏற்பாடு செய்கிறார்கள்.

இந்த ஆண்டு ஜூன் 04 ஆம்  தேதி கிருஷ்ண பக்‌ஷ ( தேய் பிறை ) தசமி திதி ஆகும்.

திருமலையில் அனுமத் ஜெயந்தி

இந்த ஆண்டு வைகாச மாதம் ( வைகாசி ) கிருஷ்ண பக்‌ஷ ( தேய்பிறை ) தசமி திதி நன்னாளில், ஜூன் 04 அனுமத் ஜெயந்தியைக் கொண்டாட திருமலா திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

அஞ்சனாத்ரி

அஞ்சனையின் மைந்தனான அனுமன்  பற்றிய குறிப்புகள் நமது புராணங்களில் விரவிக் கிடக்கின்றன. வாயுபுத்ரன் , மாருதி, பஞ்ரங்பலி என்று போற்றித் துதிக்கப்படும் அனுமன், சிறந்த பலசாலி, புத்திமான் !  பஞ்ச பூதங்களும் அவருக்குத் துணை நிற்கும் ! நவகோள்களும் அவர் பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்யும் ! ருத்ர அம்சம் பொருந்தியவர் ! விஷ்ணுவின் அவதாரமாகிய ராமனின் பக்தர் ! ராம நாமத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவர் ! அவர் பிறந்தது அஞ்சனாத்ரி மலையில் என அறியப்படுகிறது.

மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக் அருகில் அஞ்சனேரி என்ற இடத்தை அனுமன் பிறந்த இடமாக சில நூல்களும் ஆராய்ச்சியாளர்களும் கூறுகின்றனர்.

கர்நாடகா மாநிலம் , ஹம்பி , கங்காவதி தாலுக்காவில் அமைந்துள்ள கொப்பல் அஞ்சனாத்ரி அனுமன் மலைக்கோவில் மிகவும் பிரசத்தி பெற்றதாகும். இப்பகுதியே கிஷ்கிந்தா, இதுவே அனுமன் அவதரித்த இடம் என்றும் அறியப்படுகிறது. பாறைகள் நிறைந்த இந்த மலையில் கிட்டத்தட்ட 575 படிகள் ஏறி கோவிலை அடைய வேண்டும். கோவிலில், கண்ணாடிப் பேழையில் ராமசேது பாலத்தின் ஒரு கல், நீரில் மிதந்த படி  இருக்கிறது. பாறையில் வடிவமைக்கப்பட்ட அனுமன் சிலை, ராமர் மற்றும் சீதா தேவி சன்னதி காணப்படுகிறது.

திருமலை அஞ்சனாத்ரி

திருமலையின் ஏழு மலைகளில் ஒரு மலை அஞ்சனாத்ரி மலை என அறியப்படுகிறது. சமிபத்தில், ( ஏப்ரல் 22 )அனுமன் பிறந்த இடம் திருமலை அஞ்சனாத்ரி மலையே என திருப்பதி தேவஸ்தானம் சில ஆவண ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முன்னிலையில் ஏப்ரல் 22, 2021 அன்று இது குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது.

அதையடுத்து, வைசாக மாதம் , கிருஷ்ண பக்‌ஷ தசமி திதி நாளான ஜூன் 04 2021 முதல் ஜூன் 08 வரை, அன்னுமத் ஜெயந்தி திருவிழாவை சிறப்பாக நடத்தவும் ஏற்பாடு செய்துள்ளது. பால ஆஞ்சனேயர் மற்றும் அஞ்சனா தேவிக்கு அபிஷேகங்கள் மற்றும் பாராயணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 ஶ்ரீ ஹனுமான் மங்களாஷ்டகம்

வைஶாகே மாஸி க்ருஷ்ணாயாம் தஶம்யாம் மந்தவாஸரே
பூர்வாபாத்ர ப்ரபூதாய மங்கலம் ஶ்ரீஹநூமதே

கருணாரஸபூர்ணாய பலாபூபப்ரியாய ச
மாணிக்யஹாரகண்டாய மங்கலம் ஶ்ரீஹநூமதே  

ஸுவர்சலாகளத்ராய சதுர்புஜதராய ச
உஷ்ட்ராரூடாய வீராய மங்கலம் ஶ்ரீஹநூமதே

திவ்யமங்கலதேஹாய பீதாம்பரதராய ச 
தப்தகாஞ்சநவர்ணாய மங்கலம் ஶ்ரீஹநூமதே  

பக்தரக்ஷணஶீலாய ஜாநகீஶோகஹாரிணே
ஜ்வலத்பாவகநேத்ராய மங்கலம் ஶ்ரீஹநூமதே

பம்பாதீரவிஹாராய ஸௌமித்ரிப்ராணதாயிநே
ஸ்ருஷ்டிகாரணபூதாய மங்கலம் ஶ்ரீஹநூமதே

ரம்பாவந விஹாராய கந்தமாதநவாஸிநே
ஸர்வலோகைகநாதாய மங்கலம் ஶ்ரீஹநூமதே

பஞ்சாநநாய பீமாய காலநேமிஹராய ச
கௌண்டிந்யகோத்ரஜாதாய மங்கலம் ஶ்ரீஹநூமதே

கொரோனா தொற்றால் அவதியுறும் இக்காலகட்டத்தில், “ஜெய் ஸ்ரீராம் “ , “ஜெய் மாருதி” எனச் சொல்லி, நம் துன்பங்கள் தீர மாருதியைப் பூஜிப்போம் !

இன்று… ‘ஆந்திர’ அனுமத் ஜெயந்தி! அஞ்சனை மைந்தன் அருள் பெறுவோம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply