e0af8d-e0ae95e0aebfe0aeb0e0af81.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ் கதைகள் பகுதி 48
வரைத்தடங் கொங்கை (திருப்பரங்குன்றம்) திருப்புகழ்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
முருகா! பிறவிக் கடலைக் கடந்து முத்திக் கரை ஏற, திருவடித் தாமரையாகிய தெப்பத்தை அருள்வாய் என திருப்பரங்குன்றம் உறை முருகப்பெருமானை அருணகிரியார் வேண்டுகின்ற திருப்புகழ் இது.
வரைத்தடங் கொங்கை யாலும்
வளைப்படுஞ் செங்கை யாலும்
மதர்த்திடுங் கெண்டை யாலும் …… அனைவோரும்
வடுப்படுந் தொண்டை யாலும்
விரைத்திடுங் கொண்டை யாலும்
மருட்டிடுஞ் சிந்தை மாதர் …… வசமாகி
எரிப்படும் பஞ்சு போல
மிகக்கெடுந் தொண்ட னேனும்
இனற்படுந் தொந்த வாரி …… கரையேற
இசைத்திடுஞ் சந்த பேதம்
ஒலித்திடுந் தண்டை சூழும்
இணைப்பதம் புண்ட ரீகம் …… அருள்வாயே
சுரர்க்குவஞ் சஞ்செய் சூரன்
இளக்ரவுஞ் சந்த னோடு
துளக்கெழுந் தண்ட கோளம் …… அளவாகத்
துரத்தியன் றிந்த்ர லோகம்
அழித்தவன் பொன்று மாறு
சுடப்பருஞ் சண்ட வேலை …… விடுவோனே
செருக்கெழுந் தும்பர் சேனை
துளக்கவென் றண்ட மூடு
தெழித்திடுஞ் சங்க பாணி …… மருகோனே
தினைப்புனஞ் சென்று லாவு
குறத்தியின் பம்ப ராவு
திருப்பரங் குன்ற மேவு …… பெருமாளே.
தேவர்களுக்கு வஞ்சனையைச் செய்த சூரபன்மன் இளமை பொருந்திய கிரவுஞ்சன் என்ற அசுரனோடு உலகம் நடுங்குமாறு போருக்கு எழுந்து சென்று, அண்டகடாகம் வரை அதாவது அண்டத்தின் எல்லை வரை அமரர்களைத் துரத்திச் சென்று, அந்நாளில் இந்திரனுடைய உலகமாகிய பொன்னுலகத்தை அழித்தபோது, அவ்வசுரன் மாளும்படி சுடுகின்ற மிகப் பெரும் வேகமுடைய வேலாயுதத்தை விடுத்தருளியவரே!
போருக்கு எழுந்து தேவர்சேனை நடுங்குமாறு வெற்றி பெற்று, வானத்தில் சினங்கொண்ட சங்கமேந்திய திருக்கையராகிய கண்ணபிரானுடைய திருமருகரே! தினைப்புனத்தில் சென்று அங்கு உலாவுகின்ற வள்ளியம்மையாருடைய இன்பத்தைப் புகழ்ந்து பேசிய திருப்பரங் குன்றத்தில் எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே!
அல்லல் படுகின்ற பந்தம் நிறைந்த பிறவிப் பெருங்கடலினின்றும் கரையேறுமாறு, இசை நூல்கள் இயம்புகின்ற பலவகையான சத்தங்களை யொலிக்கின்ற மணித் தண்டைகள் சூழ்ந்துள்ள தேவரீருடைய தாமரை போன்ற திருவடிகள் இரண்டையுந் தந்து உதவி அருள்புரிய வேணும்.
இந்தத் திருப்புகழில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா உம்பர் சேனையுடன் சங்கபாணியாக சண்டையிட்ட கதையை நாளைக் காணலாம்.
திருப்புகழ் கதைகள்: கிருஷ்ணன் சக்ரபாணியாக சண்டையிட்டது! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.