மூன்று மோக்ஷ சாதனங்களில் ஒன்றாக இருப்பது கர்ம மார்க்கம் – path of action. இது நம் இஷ்டப்படி, மனம் போனபடி கார்யம் செய்கிறதல்ல. இஷ்டமோ இஷ்டமில்லையோ, சாஸ்திரம் சொல்லி விட்டது என்பதால் செய்தேயாக வேண்டிய கர்மாக்களை இங்கே செய்கிறோம். மனசின் பற்று பாசங்களுக்கு இங்கே இடமில்லை. இது, சொந்த லாபம், ஜயம் கிடைக்குமா என்று பலனைப் பார்த்துச் செய்கிற கார்யமில்லை.
Disinterested action என்கிறார்கள். (Uninterested இல்லை. அப்படிச் சொன்னால் அக்கறை இல்லாமல் கார்யம் பண்ணுவது என்று அர்த்தமாகி விடும்.) Disinterested என்றால் ‘ஸ்வய உணர்ச்சிகளாலே, தன்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகளாலே பாதிக்கப்படாமல்’ என்று அர்த்தம். ‘தன்னுடைய சொந்த லாபங்களைக் கருதாமல்’ என்று அர்த்தம். ‘நிஷ்காம்யம்’ என்பது இதைத்தான்.
…நிஜமான கர்ம யோகத்தில் தன்னுடைய புலனின்பப் பலனை மட்டுமின்றி, உத்தம நோக்கத்தில் உதித்த லோக க்ஷேமம் என்ற பலனைக்கூடக் கருதக்கூடாது. ஆத்மாவைக் கடைத்தேற்றிக் கொள்ளும்போதே லோக க்ஷேமத்தையும் உத்தேசித்ததாகத்தான் சாஸ்திரங்கள் தார்மிக கர்மாக்களை வகுத்துக் கொடுத்திருக்கின்றன.
இதைப்பற்றி சந்தேகமே இல்லை. தனக்காகப் பண்ணுவது என்பது போய் உலகுக்காகப் பண்ணுவது என்று இவன் ஆரம்பித்தால்தான் உலகங்கள், உயிர்கள் எல்லாவற்றுக்கும் மூலமான, தாயும் தந்தையுமாக உள்ள ஈசுவரனின் அருள் இவனுக்குக் கிட்டி, மோக்ஷ வழிக்கு இவன் போக முடியும். ஆனாலும், ஒருவன் இப்படி ஸ்வதர்மாநுஷ்டானம் பண்ணும்போது, ‘நான் இப்படிப் பண்ணும்போது உலகத்துக்கு இந்த நல்லது ஏற்பட்டதா?’ என்று பலனைப் பார்த்துக் கணக்குப் போட்டுக்கொண்டே இருக்கக் கூடாது. லோக க்ஷேமத்துக்கென்றே சாஸ்திர கர்மாக்களைப் பண்ணினாலும், எந்த நன்மையான பலனை உத்தேசித்து அந்தக் கர்மாவை சாஸ்திரம் கொடுத்திருக்கிறதோ, அது ஈடேறாமலும் போகலாம். உத்தம லக்ஷியங்களுக்காகப் பல பேர் உயிர்த் தியாகம் பண்ணியும்கூட அவை நிறைவேறாமல் போவதையும் நாம் அவ்வப்போது பார்க்கிறோம்.
சாஸ்திரம் லோகக்ஷேம பலனை உத்தேசித்துக் கர்மாவைச் சொன்னாலும், நாம் அந்த உத்தேசத்தையே எப்போது பார்த்தாலும் நினைத்துக் கணக்குப் போடாமல் செய்தால்தான், இம்மாதிரியான சந்தர்ப்பங்களில், ‘நல்லதைச் செய்து என்ன கண்டோம்? இது கலி காலம். இந்த லோகத்தில் நல்லது எடுபடப் போவதில்லை. நாம் பாட்டுக்குச் சும்மாக் கிடப்போம்’ என்கிற ஆயாசம், மனக்கசப்பு, தோல்வி மனப்பான்மை முதலானவை ஏற்படாமல் இருக்கும். ஆகையால், இந்தப் பலனைக்கூட எதிர்பார்க்காமல், வெற்றியோ தோல்வியோ நாம் பாட்டுக்கு ‘சாஸ்திரம் சொல்லியது நாம் செய்கிறோம்’ என்று, அதன்படி செய்துகொண்டே போக வேண்டும்.
– ஶ்ரீ மகா பெரியவா (தெய்வத்தின் குரல் – நான்காம் பகுதி)
சமுதாய சேவையும் சித்த சுத்தியும்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.