உலகத்தில் காணப்படும் லக்ஷக்கணக்கான ஜீவராசிகளில் மனிதன் மிக உயர்ந்தவன். அதனால்தான் மனிதப் பிறவி கிடைப்பதற்கு அரிது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. மனிதப்பிறவி அடைந்தவன் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் விடுவது மிக அவிவேகமாகிவிடும்.
மனிதனாக பிறந்து ஞானத்தை அடையாதவன் பிராணிகளை விட தாழ்ந்தவன் என்று ஸ்ருதி கூறுகிறது. ஏனென்றால் பிராணிகளுக்கு ப்ரத்யவயம் (ஸ்ருஷ்டி வரிசையில் கீழான ஜன்மம் எடுத்தல்) கிடையாது. ஆனால் ஞானம் வராத மனிதன் பாவம் புரிந்தால் (மனிதனை விட தாழ்ந்த ஜீவராசிகளிடையே ஜனிப்பான்) அப்போது ப்ரத்யவயம் ஏற்படும். ஆதலால் ஞானத்திற்கு சமமான பொருள் வேறொன்றும் இல்லாததால் மனிதனுக்கு முக்கியமாக வேண்டியது ஞானம்.
ஞானம் என்றால் லௌகிக பொருள்களை தெரிந்து கொள்வது அல்ல. ஆத்மாவின் உண்மையான ஸ்வரூபத்தை தெரிந்து கொள்வதுதான் ஞானம். இந்த ஞானம் வந்த மனிதனுக்கு செய்ய வேண்டியதற்கோ அடைவதற்கோ வேறு ஒன்றும் கிடையாது.
அக்ஞானம் நிவ்ருத்தியானால் ஞானம் தானாகவே உண்டாகும். ஆதலால் அக்ஞானம் நிவ்ருத்தியாவதற்குத்தான் முயற்சி செய்யவேண்டும். இந்த அக்ஞானம் எத்தனையோ ஜன்மங்களாக சேர்ந்து வந்திருக்கிறது. அதை சுலபமாக அகற்றவும் முடியாது.
ஆகவே மனிதன் முதலில் ஸத்கர்மானுஷ்டானத்தினால் சித்த சுத்தியை சம்பாதிக்கவேண்டும். சித்த சுத்தி எவனுக்கு வரவில்லையோ எவ்வளவு தடவை தத்துவத்தை போதித்தாலும் அவனுக்குப் புரியாது. சித்த சுத்தி உடையவனுக்கு குரு ஒரு தடவை உபதேசம் செய்தாலும் அவனுக்கு தத்துவம் விளங்கிவிடும்.
சித்த சுத்தியை எப்படி அடைவது? பலனில் ஆசையில்லாமல் சத் கர்மாக்களை செய்தால்தான் சித்த சுத்தி ஏற்படும். பலன்களை எதிர்பார்த்து சத்கர்மாக்களை செய்தால் பலன் ஏற்படுமே தவிர சித்த சுத்தி ஏற்படாது.
எல்லோரும் இந்த தத்துவத்தை சரியாக தெரிந்து கொண்டு பலனில் அபேக்ஷையில்லாமல் சாஸ்த்ரோக்தமாக கர்மாக்களை செய்து சித்த சுத்தி (மனத்தூய்மை) பெற்று ஞானப்ராப்திக்கு வேண்டிய யோக்யதையை அடைய வேண்டும் என்று ஆசிர்வதிக்கிறேன்.
பலன் எதிர்பார்த்து செய்யும் காரியம்..! ஆச்சார்யாள் அருளுரை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.