சட்டமும் கண்ணாடியும் இருக்க… ஓவியத்தில் இருந்து திடீரென மறைந்த கண்ணன்!

ஆன்மிக கட்டுரைகள் விழாக்கள் விசேஷங்கள்

டி.எஸ்.வேங்கடேசன்

மைசூரில், மிகப்பெரிய மாளிகையில் பிறந்தவர் ஸ்ரீ ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள். இவர், இறைவன் மேல் கொண்ட பக்தியின் காரணமாக தன் மாளிகையையும், சொத்துகளையும், பொதுமக்களுக்கு தானம் அளித்து விட்டு, ஊர் ஊராக சென்று இறைநாமத்தை பரப்பி, உபந்யாசங்கள் செய்து வந்தார்.

திருவிசலூரில், வெங்கடேச ஐயாவாள் தங்கியிருந்த போது அவருடைய உபந்யாசங்களையும், நாம மகிமையையும் கேட்டு, மக்கள் ஆனந்தப்பட்டனர். அப்போது, அந்த ஊரில் இருந்த சிலர், மிக ஆடம்பரமாக, கோகுலாஷ்டமி விழா கொண்டாடினர்;

கண்ணன் படத்தை ஊர்வலமாக கொண்டு வந்தனர். ஊர்வலம், ஸ்ரீ ஐயாவாள் வசித்த, குடிசை வீட்டை நெருங்கிய போது, கண்ணனை தரிசிக்கும் ஆவலில், வெகு வேகமாக வெளியே வந்தார் ஸ்ரீ ஐயாவாள்.

அவர் மீது பொறாமை கொண்ட ஊர்வலக்காரர்களோ, பக்தியில்லாத உங்கள் தீபாராதனைக்காக, கண்ணன் காத்திருக்கவில்லை. உங்கள் வீட்டில், தீபாராதனை எடுக்க முடியாது̷ 0; என்றனர்.

ஸ்ரீஐயாவாளோ அமைதியாக, என் பக்தியை பற்றி கண்ணனுக்கு தெரியும்… என்று கூறி, வீட்டினுள் சென்று விட்டார்.  ஊர்வலக்காரர்களோ, உங்களுக்கு பக்தி இருந்தால், எங்கே கண்ணனைக் கூப்பிடுங்கள்; வருகிறானா பார்க்கலாம்… என்று வம்பு செய்தனர்.

ஸ்ரீஐயாவாள், தயங்காமல், ஊர்வலத்தில் அவர்கள் சுமந்து வந்த படத்தில் இருந்த கண்ணன் படத்தை நெருங்கி, இந்தீவா எனும் ஸ்லோகத்தை மனமுருக சொல்லி, வீட்டின் உள்ளே சென்று விட்டார்.

ஊர்வலம் அடுத்த வீட்டு வாசலை நெருங்கியதும், படத்திலிருந்த கண்ணனை காணவில்லை; கண்ணாடியும் சட்டங்களும் மட்டுமே இருந்தன. ஊர்வலத்தில் வந்தவர்கள் நடுங்கிப் போய், ஸ்ரீஐயாவாளிடம் ஓடினர்.

அங்கே, அந்த படத்திலிருந்ததைப் போலவே, ஒரு கிருஷ்ண விக்ரகத்தை ஊஞ்சலில் வைத்து, மிகுந்த அன்போடு கண்ணனை புகழ்ந்து பாடி, துதித்துக் கொண்டிருந்தார்.

ஸ்ரீ ஐயாவாளின் தூய்மையான பக்தியைக் கண்டு, ஊர்வலம் நடத்தியோர், அவரிடம் மன்னிப்பு கேட்டனர். அடியாரின் பக்தியை வெளிப்படுத்துவதற்காக, கண்ணன் நடத்திய திருவிளையாடல் இது.

கடந்த, 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 18ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர், ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள். இவர் கண்ணனை புகழ்ந்து பாடிய துதிப்பாடல், டோலோ நவரத்ன மாளிகா எனப்படுகிறது.

Leave a Reply