நவாவரண பூஜையும் அதன் பலனும்…

ஆன்மிக கட்டுரைகள்

சுப்ரஸ்ஸன்னா மகாதேவன்

50" />நவாவரண பூஜையும்,பலனும்.

ஸ்ரீ சக்ரத்தில் மத்தியில் திரிகோண மையத்தில் சிவசக்தியாக இருப்பவள் ஸ்ரீகாமேஸ்வரர்ஸ்ரீ மாதா லலிதை.

நலங்கள் யாவும் நல்கும் நவாவரண பூஜை

ஸ்ரீ சக்ர நாயகி, அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியாக விளங்குபவள், வேதங்கள் போற்றும் வேதநாயகி, அனைத்துலகையும் ஈன்றவள், அனைத்து உயிரினங்களுக்கும் அன்னையாக விளங்குபவள், மஹா மஹா சக்ரவர்த்தினியாக ஈரேழு பதினான்கு லோகங்களையும் அரசாட்சி புரிபவள் – ஸ்ரீ மாதா லலிதா மஹா திரிபுரசுந்தரி

அம்பிகையே அனைத்திற்கும் காரணியாக எண்ணிப் போற்றி வழிபடும் சாக்த வழிபாடு எனும் முறைப்படி செய்யப்படும் பூஜைகளில் முதன்மையானதாகவும், மிக மேன்மையானதாகவும் விளங்குவது ஸ்ரீ நவாவரண பூஜையாகும்.

ஸ்ரீ மாதா லலிதாம்பிகை, க்ஷூர சாகரம் எனும் அலகிலாத (infinite) எல்லைகளுடைய பாற்கடலின் நடுவே, ஸ்ரீ நகரம் எனும் ஸ்ரீ சக்ரத்தின் நடுவே கற்பக விருட்சங்கள் நிறைந்ததும், சிந்தாமணி எனும், கேட்டவுடன் வரமளிக்கக் கூடிய கற்களால் ஆன கருவறையில், மந்த்ரிணி, வாராஹி, அச்வாரூடா எனும் தனது சக்தி பரிவாரங்களுடன் மஹா ராஜ ராஜேஸ்வரியாக, திரிபுர சுந்தரியாக, பஞ்ச ப்ரஹ்ம ஆசனத்தில் அமர்ந்து அகிலங்கள் அனைத்தையும் பரிபாலனம் செய்து வருகின்றாள்.
ஸ்ரீ நகரம் அல்லது ஸ்ரீ சக்ரம் ஸ்ரீ நகரம் அல்லது ஸ்ரீ சக்கரம் அல்லது ஸ்ரீ யந்திரம் என்பது பொன்னாலும், ரத்தினங்களாலும் இழைக்கப்பட்ட ஒரு அற்புதமான கோட்டை. அந்தக் கோட்டையினுள் ஒன்பது பிரகாரங்களின் வாசல்கள் உண்டு. ஒன்பது பிரகாரங்களுக்கும் மத்தியில் அம்பிகை கொலுவீற்றிருக்கின்றாள்.

ஸ்ரீ யந்திரத்தில் நாற்பத்து மூன்று முக்கோணங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு முக்கோணத்திலும் ஒவ்வொரு அம்பிகை ஸ்ரீ மாதா லலிதாம்பிகைக்கு சேவை புரிவார்கள். அம்பிகையின் குதிரைப் படையை அச்வாரூடா, யானைப் படையை கஜமுகி, மந்திரியாக மந்த்ரிணீ போன்ற அம்பிகைகள் பரிபாலனம் செய்கின்றார்கள்.

ஸ்ரீ நகரத்தின் நடுவே, கோடி சூர்ய பிரகாசத்துடனும், கோடி சந்திரர்களின் குளிர்ச்சியுடனும், பக்தர்களை எப்பொழுதும் பார்த்துக்கொண்டிருக்கும் – இமை மூடாத மீனைப் போன்ற கண்களுடனும், மாதுளைம்பூவை ஒத்த நிறத்துடனும், பொன்னும், வைரமும், ரத்தினங்களும் இழைக்கப்பட்ட கிரீடத்துடனும், அனைவருக்கும் அபயம் எனும் வகையில் காக்கும் கரமும், ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களை அழிக்கும் வகையில் பாசமும் அங்குசமும் கொண்டு, வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை அருளும் வகையில் அமைந்து ஸ்ரீ மாதா பராபட்டாரிக்கா லலிதாம்பிகை அருள்பாலிக்கின்றாள்.
ஸ்ரீ நவாவரண பூஜை ஸ்ரீ சக்ரத்தினுள்ளே இருக்கும் அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் மற்றும் நடுநாயகமாக விளங்கும் ஸ்ரீ மாதா லலிதாம் பிகைக்கும் அனைத்து பூஜை அம்சங்களும் இணைந்த வகையில் செய்யப்படுவது ஸ்ரீ நவாவரண பூஜை ஆகும்.

நவ (ஒன்பது) ஆவரணங்களில் (வரிசையில்) உள்ள தெய்வங்களுக்கான பூஜை, அர்ச்சனை, தர்ப்பணம் போன்ற பூஜைகள் நடத்தப்படும். ஒவ்வொரு ஆவரணத்திற்கும் உரிய பூஜை முடிந்ததும் ஒரு தீபாராதனை நடைபெறும்

புரஸ்சரணை என்பது உடனடி பலன் தரும் பூஜா முறையாகும். அதில் பூஜை, அர்ச்சனை, ஹோமம், தர்ப்பணம், பலி, போஜனம் எனும் வரிசை கிரமமாக அமைந்தது. புரஸ்சரணையை ஒத்தது ஸ்ரீ நவாவரண பூஜை. இதில் யாகம் ஒன்று என்பது நேரடியாக இல்லாவிட்டாலும், பூஜை செய்யும் சாதகன் தன்னைத்தானே பூஜை முறையால் ஹோமாக்னி போல் இருப்பதே இதன் சிறப்பம்சம்.

பூஜையும், தர்ப்பணமும் ஒரே நேரத்தில் இணைந்து செய்யப்படும் பூஜை, நவாவரண பூஜை தவிர வேறு எந்த வகையிலான பூஜையிலும் கிடையாது. பூஜைக்கு மலரும், தர்ப்பணத்திற்கு இஞ்சி துண்டத்தில் நனைத்த பாலையும் ஒரு சேர அர்ச்சிப்பது (பூஜயாமி தர்ப்பயாமி நம:) இந்த பூஜையில் மிக மிகச் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்த பூஜை குரு ஸ்துதியில் ஆரம்பித்து குரு வந்தனத்தோடு முடிவதும் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
ஸ்ரீ நவாவரண பூஜையில் உள்ள பூஜைகள் :

மண்டப ப்ரவேச பூஜை, பூத சுத்தி, ஸங்கல்பம், குரு ஸ்தோத்ரம், அமரும் ஆசனத்திற்குரிய பூஜை, பூஜகர் தன்னைத்தானே மந்திர மண்டலத்திற்குள் உட்படுத்திக்கொள்ளும் பூஜை, திக் பந்தனம், ப்ராண ப்ரதிஷ்டை, ஸ்ரீ நகரத்திற்குரிய பூஜை, ஸகலவிதமான நியாஸ பூஜைகள், கலச பூஜை, சங்குக்குரிய பூஜை, விசேஷ அர்க்கியம் எனும் பிரஸாதமாகத் தரக்கூடிய, அஷ்டகந்தம் எனும் வாசனை திரவியங்கள் கலந்த பாலுக்கு உரிய பூஜை, ஆவாஹன உபசார பூஜை, மங்களாராத்ரிகம் எனும் பூஜை (சத்துமாவை விளக்காகக் கொண்டு தீபாராதனை செய்வது), சதுராயதனம் எனும் சிறப்பு பூஜை, குரு மண்டல பூஜை, அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆவரணங்களுக்கான, ஒன்பது வரிசைகளுக்கான பூஜை, பஞ்ச பஞ்சிகா பூஜை எனும் பஞ்ச ப்ரஹ்மாசனத்திற்குரிய பூஜை, ஸ்ரீ மாதா லலிதாம்பிகை சிறப்பு பூஜை, தூப தீப நிவேதன பூஜை, பலிதானம், குரு வந்தனம், ஸூவாஸினி பூஜை, கன்யா பூஜை, வேதார்ப்பணம் (வேதகோஷம்), நிருத்யார்ப்பணம் (நாட்டியம்), கானார்ப்பணம் (பாடல்) என்று மிக அழகியதொரு வரிசையில் ஸ்ரீ நவாவரண பூஜை அமைகின்றது.
பூஜை பிரஸாதம் :

பூஜையின் நிறைவில் பிரஸாதமாக, ஸாமான்யர்க்கியம் எனும் வலம்புரிச் சங்கில் உள்ள பூஜை செய்யப்பட்ட தீர்த்தம் தெளிக்கப்படும்.

விசேஷ அர்க்கியம் எனும் பூஜை செய்யப்பட்ட பால் விநியோகிக்கப்படும். இவ்விரு பிரசாதம் பெறுவது பெரும் புண்ணியம், காஞ்சி காமாட்சி ஆலயத்தில் பெளர்ணமி இரவும் காஞ்சிபுரத்தின் இரண்டாவது ஆவரணஎல்லை யான செங்கல்பட்டு அருகில் செம்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி,ஔஷத லலிதா திரிபுரசுந்தரி ஆலயத்தில் பிற்பகல் 12 மணிக்கு நவாவரண பூஜை நடைபெற்று பிரசாதம் பெறுவது அவள் அருளின்றி கிட்டாது.

இவ்விரண்டையும் பெறுபவர்கள் அம்பிகையின் பரிபூரணமான அருளையும், நவாவரண பூஜையின் முழு பலனையும் பெறுவார்கள் என்று இந்த பூஜையின் பலஸ்துதியில் உள்ள ஸ்லோகம் கூறுகின்றது.

உடல் சுத்தத்திற்கு சங்கு தீர்த்தமும், உள்ளுறுப்புகளை (மனதை – உள்ளத்தை) சுத்தம் செய்ய பூஜிக்கப்பட்ட பாலும் கொடுக்கப்படுகிறது.

வேத புராண இதிகாசங்களில் ஸ்ரீ நவாவரண பூஜை :

இந்த பூஜையின் மகத்துவம் ஸ்ரீ ஸூக்தம், ஸ்ரீ தேவீ ஸூக்தம் போன்ற ச்ருதிகளிலும், தேவீ உபநிஷத், கேனோபநிஷத், பஹ்ருவ்ருசோபநிஷத், பாவனோபநிஷத் போன்ற உபநிஷதங்களிலும், பிரம்மாண்ட புராணம் (ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம்) போன்ற புராணங்களிலும், துர்கா சப்த சதீயிலும், ராமாயணம், மஹா பாரதம் போன்ற இதிகாசங்களிலும் காணப்படுகிறது.

ஸ்ரீமத் பாகவதத்தில் ருக்மிணி விவாகத்திற்கு முன்னதாக தேவி வழிபாடு செய்ததாகவும், ராமாயணத்தில் ராமர் அம்பிகையை வழிபட்டே வெற்றி கொண்டதாகவும், மஹாபாரதத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு துர்கை வழிபாட்டினை உபதேசம் செய்ததால் ஜெயம் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

தேவிக்குரிய பூஜைகளை பல்வேறு ஆர்ணவங்கள், வேதங்கள், புராணங்கள் கூறுகின்றன.

பரமசிவன் பார்வதி தேவிக்கு பல்வேறு தந்திரங்களை உபதேசித்த பின்னர், தேவி கேட்டுக்கொண்டதற்கு இணங்க அனைத்து தந்திரங்களின் சாரமாக ஸ்ரீ வித்யா எனும் ஸ்ரீ தந்திரத்தை உபதேசம் செய்தார். இதுவே ஸ்ரீ புர உபாஸனை அல்லது ஸ்ரீ சக்ர உபாஸனை அல்லது ஸ்ரீ வித்யா உபாஸனை என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்ரீ புர உபாஸனையை தத்தாத்ரேயர், தனது தத்த ஸம்ஹிதையில் த்ரிபுர உபாஸனை உட்பட அனைத்தையும் சுமார் 18000 ஸ்லோகங்களில் மிக விரிவாகக் கூறியுள்ளார். தத்தாத்ரேயரிடமிருந்து பரசுராமர் வித்தைகள் அனைத்தையும் கற்று சுமார் 6000 ஸுத்திரங்களாக சுருக்கி எழுதியுள்ளார். பரசுராமரின் சிஷ்யர் ஸசு மேதஸ் என்பவர் மேலும் சுருக்கமாக தத்தருக்கும் ஸ்ரீ ராமபிரானுக்கும் இடையே நடைபெறும் சம்பாஷணை வடிவில் நூல் இயற்றினார். இதுவே பரசுராம மஹா கல்ப தந்திரம் அல்லது ‘பரசுராம கல்ப சூத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது.

தற்காலத்தில் செய்யப்படும் அம்பிகைக்குரிய அனைத்து பூஜை அம்சங்களும் இந்த பரசுராம தந்திரத்தை ஒட்டியே செய்யப்படுகிறது. ஸ்ரீ லலிதோபாக்யானம், ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம், சௌந்தர்ய லஹரி, அபிராமி அந்தாதி ஆகிய நூல்களில் தேவியினுடைய பூஜை மிக அழகாக விளக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ வித்யா உபாஸனை :

உபாஸனை என்றால் ஒரே தெய்வத்தை மனதில் மேன்மையானதாக இருத்திக்கொண்டு அந்த தெய்வத்தையே சதா சர்வ காலமும் நினைந்து போற்றி வழிபாடு செய்வதாகும். ஸ்ரீ வித்யா என்பது அம்பிகையின் மூல மந்திரங்களில் மிக மேன்மையானது. பதினாறு எழுத்துக்களைக் கொண்ட மந்திரம் ஸ்ரீ வித்யா எனப்படும். இந்த மந்திரம் அம்பிகையே அனைத்திற்கும் காரண காரணியாக விளங்குகின்றாள் என்பதை எடுத்துக்காட்டும் மிகச் சிறப்பு வாய்ந்த மந்திரம்.

ஸ்ரீ நவாவரண பூஜையை தகுந்த குருவிடம் ஸ்ரீ வித்யா உபதேசம் எடுத்துக்கொண்டவர்கள் மட்டுமே செய்யவேண்டும்.

பூஜை செய்யும் போது பூஜகன் மந்திரங்களால் சூழப்பட்டு, அஹமேத்வம் எனும் சொல்லுக்கிணங்க பூஜகனே அம்பிகையாக மாறிச் செய்வது தான் இந்த பூஜையின் மிக முக்கியமான அம்சமாகும். பூஜகன் பூஜனை மந்திரத்தினால் மானஸீகமாக தன்னை பூஜையில் எரித்துக்கொள்வதே இந்த பூஜையின் யாகமாகக் கருதப்படுகிறது. ஆகையினாலேயே இந்த பூஜை “ஸ்ரீவித்யா மஹா யாக க்ரமம்” என்று போற்றி அழைக்கப்படுகிறது.

ஸ்ரீ என்றால் செல்வங்களை வாரிவழங்கும் லக்ஷ்மிக்குரிய அக்ஷரம். வித்யா என்றால் கலை. இந்த பூஜையைக் காண்பதால் வாழ்விற்குத் தேவையான செல்வம், புகழ் தரும் கலை எனும் வித்தை தன்னாலேயே உண்டாகும் என்பது மரபு.
ஸ்ரீ நவாவரண பூஜையில் முத்திரைகள் :

இந்த பூஜையில் முத்திரை மிக முக்கிய இடம் பெறுகிறது.

ஸ்ரீ தஷ்ணாமூர்த்தியானவர் சனத்குமாரர்களுக்கு சின் முத்திரையின் (ஆட்காட்டி விரலும் கட்டை விரலையும் இணைப்பது) மூலமாக, பேசாமல் பேசி பொருளுணர்த்தி உபதேசம் செய்வது போல, இந்த பூஜையில் அம்பிகைக்கு முத்திரைகளால் பூஜைகளைச் செய்வது மிக மேன்மையானதாக அமைகின்றது. ஆகையினால்தான், நவாவரண பூஜை ஆரம்பித்தது முதல் இறுதி வரை பூஜகன் பூஜை மந்திரங்களைத் தவிர வேறேதுவும் பேசாமல் இருக்க வேண்டும் என்று இந்த பூஜை வரையறுக்கிறது.
ஸ்ரீ நவாவரண பூஜையை தரிசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்

ஆவரணம்

1 நற்குழந்தைப் பேறு

2 அனைத்து தோஷங்களும் நீங்குதல்

3 குழந்தைகளின் கல்வி மேம்படுதல்

4 நல்ல இல்லற வாழ்க்கை

5 அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெறுதல்

6 உத்தியோகம், வியாபார அபிவிருத்தி

7 ஸகல நோய்களும் நீங்குதல்

8 வேண்டுவன அனைத்தும் பெறுதல்

9 ஆனந்தமான, வசதியான அமைதியான வாழ்வு
ஸ்ரீ நவாவரண பூஜை பரார்த்த பூஜை, பராபரா பூஜை, ஸபர்யா நியாஸ பூஜை, தக்ஷாணாச்சாரம், வாமாசாரம் போன்ற பல்வேறு முறைகளில் பல்வேறு இடங்களில் செய்யப்படுகின்றது.
அனைத்து தெய்வங்களுக்கும் மேலான ஒரே தெய்வமான அம்பிகையை, ஏகாக்ரமாக (ஒரே மனதாக) பூஜையில் ஈடுபாடு கொண்டு செய்யப்படுவது,

இம்மை மறுமை இரண்டிலும் சுபம் அளிக்கவல்லது,

மனம், வாக்கு, காயம் (மூன்று) எனும் முப்பொறிகளாலும், ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களை அறுக்கக்கூடியது,

பிரம்மச்சரியம், இல்வாழ்வு, வானப்ரஸ்தம், சன்னியாஸம் என்ற சதுர் (நான்கு) வர்ணத்திற்கும் பொதுவான பூஜை, சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுஜ்யம் எனும் நான்கு நற்பதவிகளைத் தருவது,

பஞ்ச (ஐந்து) தன்மாத்திரைகளாலும் (கண், காது, மூக்கு, வாக்கு, சருமம்) பூஜை செய்யப்படுவது, பஞ்ச (ஐந்து) யக்ஞத்தினால் (பிரம்ம யக்ஞம், தேவ யக்ஞம், பூத யக்ஞம், பிதுர் யக்ஞம், மானுஷ்ய யக்ஞம்) செய்யப்படும் பூஜையை விட மேலானது,

காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாத்சர்யம் எனும் ஆறுவகை பகைகளைக் களைவது, மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா எனும் மனித உடலில் உள்ள ஆறுவகைச் சக்கரங்களை உயிர்ப்பித்துத் தூண்டி பூஜைகளைச் செய்யப்படுவது,

உலகம் ஏழுக்கும் (பூலோகம், புவலோகம், சுவலோகம், மஹாலோகம், சனலோகம், தவலோகம், சத்யலோகம்) அதிபதியாக விளங்குபவளும், காப்பவளும் பின் கரந்து விளையாடுபவளும் ஆகிய அம்பிகையைத் தொழுது பணிவது,

அஷ்ட – எட்டு – (தனம், தான்யம், நிதி, பசு, புத்திரர், வாகனம், ஆற்றல், தைரியம்) ஐஸ்வர்யங்களைத் தருவது, அஷ்டமா (எட்டு) சித்திகளை (அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிரார்த்தி, பிராகாம்யம், ஈசித்வம், வசித்வம்) அருளூவது,

குபேரனுக்கு நிகரான செல்வங்களை நிறைக்கும் நவ (ஒன்பது) நிதிகளை (சங்க நிதி, பதுமநிதி, மகா பதுமம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலம், வரம்) தரவல்லது ஸ்ரீ நவ (ஒன்பது) ஆவரண (வரிசை) பூஜை.
ஆவரணம் என்பதற்கு வரிசை என்று ஒரு பொருளும், அடைப்பு அல்லது மறைப்பு என்று ஒரு பொருளும் உண்டு.

நம் மனதில் உள்ள அழுக்கான ஒன்பது திரைகளை, மறைப்புகளை விலக்கி நிர்மலமான பேரானந்தம் தரும் அம்பிகையின் ஸ்வரூபத்தை தரிசனம் செய்வது இந்த பூஜையின் மிக முக்கிய தாத்பர்யம்.

ஸ்ரீ நகரத்தின் மத்தியில் ஸ்ரீ லலிதாம்பிகை அமர்ந்திருப்பதை, கூர்மாசனத்தில் (ஆமை) உள்ள ஸ்ரீ நகர – ஸ்ரீ யந்திர – ஸ்ரீ மஹா மேரு – ஸ்ரீ சக்கரத்தை முழுமையாக தரிசனம் செய்து, ஸ்ரீ யந்திரத்தின் உச்சியில் ஸ்ரீ மாதா லலிதாம்பிகை அமர்ந்திருப்பதாக மனதில் இருத்தி தரிசனம் செய்பவர்களுக்கு எல்லையில்லா பேரருளை வாரிவாரி அம்பிகை வழங்குவாள் என்பது நிதர்சனமான உண்மை.
இந்த பூஜையை பார்ப்பவர்களும், கேட்பவர்களும், பூஜைக்கான பொருள் வழங்குபவர்களும், எங்கிருப்பினும் இந்த பூஜையை மனதால் நினைப்பவர்களுக்கும் ஸர்வ ரோக நிவாரணமும், ஸகல செல்வங்களையும் ஸ்ரீ மாதா லலிதாம்பிகை அருளுவாள் என்பது சத்யபூர்வமான உண்மை.

Leave a Reply