பக்தர்களுக்கு அருளும் பானக நரசிம்மர்!

விஷ்ணு ஆலயம்

பானகம் குடிக்கும் நரசிம்மர்..

ஆந்திர பிரதேசம், விஜயவாடா அருகிலுள்ள குண்டூர் மாவட்டத்தில் மங்களகிரி எனுமிடத்தில் யானை வடிவ மலையில் பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட பானக நரசிம்மர் திருத்தலம் அமைந்துள்ளது. இவரை வழிபட்டு இவருக்கு பானகம் பிரசாதமாக கொடுத்தால் சகல பிரச்சினைகளும் தவிடு பொடியாகும்…

மங்களகிரியில் மொத்தம் மூன்று நரசிம்ம சுவாமி கோயில்கள் உள்ளன. ஓன்று, மலையில் அமைந்துள்ள பானக நரசிம்மர் சுவாமி கோயில். இரண்டு, மலை அடிவாரத்தில் உள்ள லக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோயில். மூன்றாவது, மலை உச்சியில் உள்ள கண்டல நரசிம்ம சுவாமி

இந்த மலை யானை வடிவில் அமைந்துள்ளது. எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் இம்மலை யானை வடிவிலேயே காண்பது இதன் தனிச் சிறப்பாகும்.

இம்மலை உருவான கதை மிகவும் சுவாரசியமானது. பழங்காலத்தில் பாரியாத்ரா என்ற ஓரு அரசன் இருந்தான். அவனது மகன் ஹரஸ்வ ஸ்ருங்கி பல புனித இடங்களுக்கும் சென்று தவம் புரிந்து கடைசியில் புனிதக்ஷேத்ரமான மங்களகிரியை வந்தடைந்தான்.

அங்கு மூன்று ஆண்டு காலம் கடுமையான தவம் புரிந்தான். அப்பொழுது அனைத்து தேவர்களும் தோன்ற அவனிடம் அங்கேயே தொடர்ந்து தவம் புரியுமாறு கூறினர். அவனும் ஸ்ரீ மஹா விஷ்ணுவை நினைத்து தியானம் செய்தான். அப்பொழுது அவனது தந்தையான பாரியாத்ரா தன் மகனை தன்னோடு அழைத்துச் செல்ல வந்தான். ஆனால் ஹரஸ்வ ஸ்ருங்கியோ யானை வடிவம் பெற்ற மலையாக மாறி பகவான் ஸ்ரீ மஹா விஷ்ணுவின் இருப்பிடமாக உருவெடுத்தான். அங்குள்ள மக்கள் அந்த இறைவனை பானக நரசிம்ம சுவாமி என்று அழைத்தனர்.

சங்கு சக்கரத்தை இரு கைகளில் ஏந்தி, வாய் திறந்த முகம் மட்டும், தானாகத் தோன்றிய ஸ்வம்வ்யக்த அதாவது தானே தோன்றிய மூர்த்தமாக அமைந்து, பக்தர்கள் நிவேதனம் செய்யும் பானகத்தில் பாதியை மட்டும் அருந்தி அருட்பாலிக்கும் பானக நரசிம்மர் கோயில் இது

பானகமே பிரதான பிரசாதம்:

இந்த பானக நரசிம்மர் கோயிலில் பிரத்யோக உருவம் கொண்ட விக்ரஹம் எதுவும் கிடையாது. ஆனால் 15 செ.மீ. அகலம் உடைய வாய்ப்பகுதி மட்டும் உண்டு. கடவுளின் இந்த வாய்ப்பகுதியானது வெங்கலத் தகட்டினால் சுற்றி மூடப்பட்டிருக்கும். இந்த கோயில் உச்சி காலம் வரையே திறந்து வைக்கப்படும். ஏனென்றால் இரவில் தேவதைகள் வந்து பூஜை செய்வதாக ஐதீகம்.

அங்குள்ள அந்த நரசிம்ம சுவாமியின் வாயில் பானகம் எனப்படும் வெல்லம் கரைத்த நீர் தீர்த்தமாக விடப்படும். அப்படி விடும்பொழுது இறைவன் அதை நிஜமாகவே பருகுவது போல் “மடக் மடக்” என பருகும் சத்தம் கேட்கும். சற்று நேரம் கழித்து அந்த சத்தம் நின்று விடும். அப்படி அந்த சத்தம் நின்றதும் மிச்சம் உள்ள பானகம் அப்படியே வாய்வழியாக வெளியேறிவிடும். இது ஓரு நாள் இரு நாள் நடைபெறும் அதிசயம் அல்ல.

தினந்தோறும் எப்பொழுதெல்லாம் பக்தர்கள் நரசிம்மருக்கு பானகத்தை படைக்கின்றனரோ அப்பொழுதெல்லாம் இந்த அதிசயம் நடந்துகொண்டு தான் இருக்கின்றது. இப்படி இறைவன் வாயிலிருந்து வெளிவரும் பானகத்தை முக்கிய பிரசாதத் தீர்த்தமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஆச்சர்யமூட்டும் விஷயம் என்னவென்றால் இவ்வாறு பானகம் தினமும் பருகும் நரசிம்ம சுவாமி கோயிலில் ஓரு எறும்பு கூட கிடையாது. இவ்வளவு ஏன், அந்த கோயிலில் எங்கும் எறும்பு காணப்படுவதில்லை. பானகமே பிரதான பிரசாதம். இதனால் இந்த கடவுளுக்கு பானக நரசிம்மர் என்று பெயர் வந்தது.

ஆந்திர பிரதேசம், விஜயவாடா அருகே உள்ள குண்டூரிலிருந்து மங்களகிரி 13வது கி.மீட்டரில் உள்ளது.

Leave a Reply