காவிரியாற்றின் நடுவே சிறிய அளவில் இருந்த இக்கோயிலில், தற்போது ரூ. 1.50 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பாறையில் கூடுதலாக கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு கோயில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கோயிலின் முன் பக்தர்கள் தங்க வசதியாக மண்டபம், சுற்றுச்சுவர், வாகன நிறுத்துமிடம் போன்ற பல பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.
காவிரி ஆற்றின் குறுக்கே பாசூரில் ரூ. 400 கோடி செலவில் கதவணை மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி முடியும் நிலையில், கோயிலை சுற்றியுள்ள ஆற்றில் எப்போதும் தண்ணீர் தேங்கி நிற்கும் என்பதால், மின் வாரியம் சார்பில் காவிரிக் கரையிலிருந்து கோயில் வரை பத்து மீட்டர் அகலத்துக்கு வெள்ளம் வந்தாலும் பாதிப்பில்லாத வகையில் உயரமான பாலம் அமைக்கப்படுகிறது.
இக்கோயில் ஆன்மிக சுற்றுலாத் தலமாக மாற்றப்படுகிறது. கோயில் திருப்பணிகள் 90 சதவீதம் முடிந்த நிலையில், ஜூன் 12-ம் தேதி, கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் செயல்அலுவலர் அருள்குமார் செய்து வருகின்றனர்.