ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்!

செய்திகள்

திருக்கல்யாணம் முடிந்ததும் பெண்கள் புதுத்தாலிக்கயிறை அணிந்து பயபக்தியுடன் மங்கல மீனாட்சியை வணங்கினர்.

காலை 9.54 மணிக்கு மேல ஆடி வீதிக்கு வந்த சுவாமி – பிரியாவிடை திருக்கல்யாண மேடைக்கு வந்தனர். அவர்களைத் தொடர்ந்து மீனாட்சியம்மனும், அவரைத் தொடர்ந்து பவளக்கனிவாய்ப் பெருமாளும், கடைசியாக சுப்பிரமணிய சுவாமி தெய்வானையும் வந்தனர்.

மீனாட்சியம்மன் தங்கச் சரிகை பட்டுச் சேலையும், சுவாமி தங்கச் சரிகை பட்டு வேஷ்டியும் அணிந்திருந்தனர். சுவாமி சார்பில் பிரகாஷ் பட்டர் நீல வண்ண ஆடையுடனும், அம்மன் சார்பாக அசோக் பட்டர் மஞ்சள் நிற ஆடையுடனும் இடம் பெற்றிருந்தனர்.

சரியாக காலை 10 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க விநாயக பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. பாலிகை பூஜைக்குப் பின் சுவாமி, அம்மனாக அலங்கரித்திருந்த பட்டர்களுக்கு காப்புக் கட்டப்பட்டது.

அதன் பிறகு பவளக்கனிவாய்ப் பெருமாள் தனது தங்கையான அருள்மிகு மீனாட்சியம்மனை சுந்தரேசுவரருக்கு தாரை வார்க்கும் வைபவம் நடந்தது. இதையடுத்து பட்டர்கள் மாலை மற்றும் அங்கவஸ்திரத்தை மாற்றிக்கொண்டனர். 10.56 மணிக்கு மீனாட்சியம்மனுக்கு அணிவிக்கப்படும் வைரத்தாலி மல்லிகைப் பூ சுற்றப்பட்ட மாங்கல்யத்துடன் பக்தர்களிடம் கொண்டுவரப்பட்டது. அதை பக்தர்கள் தொட்டு வணங்கினர்.

பின்னர் வேதமந்திரங்கள், மங்கள மேளதாளங்கள் முழங்க சுந்தரேசுவரர் சார்பில் அவரது வேடமணிந்த பட்டரும், அம்மன் வேடமணிந்த பட்டரும் இணைந்து வைரத்தாலியை மூன்று முறை சுவாமியிடம் காட்டினர். பின்னர் அருள்மிகு மீனாட்சியம்மன் கழுத்தில் திருத்தாலியை காலை 10.58 மணிக்கு சூட்டினர். அப்போது திருமண மண்டப மேற்கூரையிலிருந்து பலவண்ணப் பூக்கள் கொட்டின. பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் திருக்கல்யாண காட்சியை தரிசித்தனர்.

நிகழ்ச்சியைத் தொடர்ந்து திருக்கல்யாணத்தை காண மேல, வடக்கு ஆடி வீதிகளில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் புதிய தாலிக்கயிறை அணிந்து கண்களில் ஒற்றிக்கொண்டனர்.

பின்னர் சுவாமியுடன் எழுந்தருளிய பிரியாவிடைக்கும் தாலி அணிவிக்கப்பட்டது. பகல் 11 மணிக்கு அம்மி மிதித்து, அருந்ததி பார்க்கும் வைபவம் நடந்தது. அதைத் தொடர்ந்து சுவாமி, அம்மனாக வேடமிட்ட பட்டர்கள் மணமேடையை மூன்று முறை வலம் வந்தனர். பின்னர் தீப ஆராதனைகள் நடைபெற்றன. 11.10 மணிக்கு மகாதீபம் காட்டப்பட்டது. இதையடுத்து மேடையின் கீழே மஞ்சள், தாலிக்கயிறு உள்ளிட்ட பிரசாதம் கோயில் சார்பில் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உ. சகாயம், மீனாட்சியம்மன் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் கருமுத்து தி.கண்ணன், கோயில் நிர்வாக அலுவலர் ஆர்.பத்மநாபன், நீதிபதிகள் சொக்கலிங்கம், பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அன்னதானம்: திருக்கல்யாணம் முடிந்த நிலையில் கோயில் சார்பில் தெற்கு ஆடி வீதியில் உள்ள திருப்பணி அமைப்புகளின் மண்டப மேற்கூரையில் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் அளிக்கப்பட்டது. அன்னதானத்தில் கலந்துகொண்டோர் நான்கு கோபுர வாயிலில் வைக்கப்பட்டிருந்த மொய் எழுதுவோரிடம் பணம் அளித்து மொய் எழுதினர்.

திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு முன்னதாக சுகி.சிவம் மீனாட்சி திருக்கல்யாணம் குறித்து சொற்பொழிவாற்றினார்.

பூப்பல்லக்கு: திருக்கல்யாண நிகழ்ச்சியை முன்னிட்டு இரவில் சுவாமி – பிரியாவிடை மற்றும் அம்மன் பூப்பல்லக்கில் மாசி வீதிகளில் எழுந்தருளினர். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலையில் திருத்தேரோட்டம் மாசி வீதிகளில் நடைபெறுகிறது.

செய்தி: தினமணி

Leave a Reply