ஹனூமத் ஜயந்தியை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாற்றப்பட்டது.
நாமக்கல் நகரில் மிகவும் புகழ் பெற்ற ஆஞ்சநேயர் திருக்கோயில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் உருவான 18 அடி உயர ஆஞ்சநேயர் நின்ற நிலையில் சாந்த ஸ்வரூபியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆண்டு தோறும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் ஹனூமத் ஜயந்தி விழா இங்கே கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு ஹனூமத் ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை இன்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஹனூமத் ஜயந்தி விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைகளால் கோக்கப்பட்ட மிகப்பெரும் மாலை சார்த்தப்பட்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. ஹனுமானுக்கு வடைமாலை மிகவும் பிடித்தமானது என்பதால், பல்வேறு தலங்களிலும் இன்று வடைமாலை, வெற்றிலை மாலை அலங்காரம் நடைபெறுவது வழக்கம். நாமக்கல் ஆஞ்சநேயர் விஸ்வரூபி என்பதால், மிகப் பெரும் மாலையைச் செய்து அவருக்கு சமர்ப்பிக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து இன்று முற்பகல் 11:00 மணிக்கு நல்லெண்ணை, பஞ்சாமிர்தம், சீயக்காய்த்துாள், 1,008 லிட்டர் பால், தயிர், திருமஞ்சனம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இதன் பின்னர் அனுமானுக்கு தங்கக்கவசம் சார்த்தப்பட்டு மகா தீபாராதனை நடைபெறும். இதனை முன்னிட்டு ஆலயத்தில் பக்தர்கள் பெருமளவில் கூடியிருந்து, அனுமனை தரிசித்து வருகின்றனர்.
முன்னதாக, ஒரு லட்சத்து எட்டு வடைகளைத் தயார் செய்வதற்காக அன்பர்கள் குழு இரு தினங்களுக்கு முன்பே திருவரங்கம் உள்ளிட்ட தலங்களில் இருந்து நாமக்கல்லுக்குச் சென்று வடை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டது.