மனிதநேயத்தின் உச்சத்தை வெளிப்படுத்துவது ராம காதை: பொன்னம்பல அடிகளார்

செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்

 

இதையொட்டி கம்பன் திருஅருட்கோயிலை அலங்கரித்து வழிபாடு செய்யப்பட்டது. லெட்சுமி கிருஷ்ணமூர்த்தி, ராதா ஜானகிராமன் ஆகியோர் மலர் வணக்கம் செலுத்தி, கம்பன் அருட்கவி ஐந்து பாடினர்.

பின்னர் நடைபெற்ற பாத்திறமலி பாட்டரசன் நிகழ்ச்சிக்கு, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமை வகித்தார். கண. சுந்தர் வரவேற்றார். நயம்மலி நாடக அணி என்ற தலைப்பில் அ.அ. ஞானசுந்தரத்தரசுவும், கலைமலி கற்பனை என்ற தலைப்பில் சொ.சேதுபதியும், இனிமைமலி ஈற்றடிகள் என்ற தலைப்பில் இரா. மணிமேகலையும், சுவைமலி சொல்லாட்சி என்ற தலைப்பில் மா. சிதம்பரமும் பேசினர்.

நிகழ்ச்சியில் பொன்னபல அடிகளாரின் தலைமை உரை:

காரைக்குடி கம்பன் கழகம், கம்பனை சிகரத்தில் ஏற்றிவைத்த புகழுக்கு உரியது. கம்பனின் ராம காதையை சிந்திக்காதவர்கள், எதிர்மறையாக பேசியவர்களையெல்லாம் தன்பால் ஈர்ந்த பெருமை காரைக்குடி கம்பன் கழகம் உள்ளிட்ட கம்பன் கழகங்களுக்கு உண்டு.

ஆன்மிகத்தையும் அறிவையும் இணைத்துச் சிந்திக்கிற மேடை கம்பன் கழகத்து மேடை.

எவருக்கும் கிடைக்காத அரிய நெல்லிக்கனியை அமுது என சொல்லாமல் ஒüவைக்கு கொடுத்தான் அதியமான். அவளும் அதை உண்டாள். இது சாகா மருந்து என உண்ட பின்பு சொன்னான். அப்போது ஒüவை, இதை தகடூரை ஆளும் நீ உண்டிருக்கலாமே என்றாள். அதற்கு அதியமான் சொன்னான், அன்னையே நான் தகடூரை மட்டும் ஆள்பவன், நீயோ தமிழ் உள்ளங்களை ஆள்பவள். நீ வாழ்ந்தால் தமிழ் வாழும் என்பதால் அந்த நெல்லிக் கனியை தந்தேன் என்றான்.

அப்படி தமிழைப் போற்றிய உலகில் நமக்கு கிடைத்த கனியமுது கம்பனின் ராம காதை. கடவுள் சராசரி மனிதனாய், இன்ப துன்பங்களை நுகர்ந்து, நடையில் நின்றுயர் நாயகனாக வாழ்ந்து காட்டியதுதான் கம்பராமாயணம்.

இந்த நாளின் சிந்தனைகளை இன்றைக்குத் தேவையான சிந்தனைகளை, மானுடத்தை தட்டி எழுப்புவதற்கு சரியான வழிகாட்டி ராம காதை. உண்மையான தலைமைப் பண்புக்கு இலக்கணம் திருநீலகண்டம்தான். பார்க்கடலைக் கடைந்தபோது நஞ்சு கிடைத்தபோது யாரும் உண்ணத் தயாராக இல்லை. உலகம் காக்கப்பட வேண்டும் என்ற நிலையில் தானே உண்டு உலகைக் காத்தார் திருநீலகண்டம். உலகைக் காக்க யாராவது ஒருவர் தியாகம் செய்யலாம், அதுதான் தலைமைப் பண்பு.

உலகை உருட்டிப் பார்த்த மாவீரன் அலெக்சாண்டர் வாழ்ந்த காலத்தில், டயோஜினிஸ் என்ற அறிஞர் அந்த மக்களால் புகழப்பட்டான். அலெக்சாண்டருக்கு உள்ளூர புழுக்கம். டயோஜினிûஸ நேரில் சந்தித்தபோது, மக்கள் என்னைவிட உன்னை அதிகம் புகழ்கிறார்களே ஏன் என்று கேட்டான். அதற்கு டயோஜினிஸ் பதிலளித்தான். நீ மண்ணை வென்றவன், நானோ என்னை வென்றவன். தன்னை வென்றவன்தான் தரணியை ஆள்வான் என்றான். அதனால்தான் நடையில் நின்றுயர் நாயகனாக காட்சி தருகிறான் ராமன்.

ராமன் நாளை அரசனாக அறிவிக்கப்படுகிறான் என்பதை மக்கள் விழாவாகக் கொண்டாடுகிறார்கள். ஆனால், கானகம் செல்லத் தயாராக இருக்கிறான் ராமன். சொன்னது யார் என்பதில் அவனுக்கு சர்ச்சை இல்லை, கேள்வியில்லை, தேர்தல் இல்லை, வாக்கெடுப்பு இல்லை. அரச பதவியா, கானகம் நோக்கிச் செல்வதா இரண்டும் ஒன்றுதான் அவனுக்கு. இரண்டையும் ஒன்றாக எண்ணிப் பார்க்கிற நிலைப்பாடு அவனுக்கு இருந்தது. அரச பதவி கிடைத்தபோது பரதன் அதை எட்டி உதைத்த போது ஆயிரம் ராமன் உனக்கு ஈடில்லை என்று கூறப்படுகிறது. துறவு நிலையின் பெருமை இது.

இந்த நிலைப்பாட்டை இந்த சமூகத்தில் பார்க்க முடிகிறதா? குடும்ப உறவே அந்நியமாகப் போய்விட்டது. உறவுகள் அந்நியப்பட்டிருக்கிற நாட்டில், எல்லா உறவுகளும் ஒன்றுக்கு ஒன்று தியாகம் செய்வதைத்தான் ராம காதையில் பார்க்க முடிகிறது. தனி மனித உறவுகளுக்கும், ஒரு நாட்டின் தலைமைக்கும் உள்ள நெருக்கத்தைக் காட்டுகிறது.

சமய நல்லிணக்கத்தை இப்போது காண முடியவில்லை. கம்பனின் ராம காதை உலகளந்த பார்வையைப் பார்க்கிறது. குகனொடும் ஐவரானோம் என்று கம்பராமாயணம் சொல்கிறது. சுக்ரீவன் விலங்கு, குகன் காட்டு மனிதன், வீடணன் அரக்கன். இப்படி உயிர்க் குலத்தின் பட்டியலில் உள்ள அத்தனையையும் உடன் பிறப்பாக, உறவாக ஏற்றுக்கொள்கிற மனிதநேயத்தின் உச்சத்தை வெளிப்படுத்தியதுதான் கம்பனின் ராம காதை என்றார் பொன்னம்பல அடிகளார்.

விழாவில், வேலூர் கம்பன் கழகத் தலைவர் எஸ்.என்.குப்புசாமி முதலியார், பேராசிரியர் நா.தர்மராசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நா.மெய்யப்பன் நன்றி கூறினார்.

செய்தி: https://dinamani.com/edition/Story.aspx?artid=393348

 

Leave a Reply