
Thank you for reading this Dhinasari News Article.
Don’t forget to Subscribe!
இருக்கன்குடி மாரியம்மன் கோவில், ஆடி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில், ஆடி பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில், இருக்கன்குடி மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத கடைசி வெள்ளி கிழமையில், இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி பெருந்திருவிழா கொண்டாடப்படும்.
இந்த ஆண்டு ஆடி பெருந்திருவிழா, இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அம்மன் சன்னதி முன்புள்ள கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து பக்தர்களின் ஓம்சக்தி, பராசக்தி முழக்கத்துடன் ஆடி பெருந்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு பூஜைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கொடியேற்றம் நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையர், அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி, சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வினோஜி, ஊராட்சி ஒன்றிய தலைவர் நிர்மலா கடற்கரைராஜ் உட்பட முக்கிய பிரமுகர்கள், கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி பெருந்திருவிழா வரும் 11ம் தேதி, ஆடி மாத கடைசி வெள்ளி கிழமையன்று சிறப்பாக கொண்டாடப்படும். அன்று, மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். இந்த திருவிழாவில், தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருநந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.