புதுக்கோட்டை நகரின் நாற்புறமும் சக்தி விளங்கும் சக்தி பீடங்களாகத் திகழும் அம்பிகைகளின் திருக்கோயில்கள் அமைந்த பெருமை புதுக்கோட்டை நகருக்கே உரிய பெருஞ்சிறப்பு. அவற்றில் புதுக்கோட்டை திருக்கோயில்க ளைச் சார்ந்த திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் எழுந்தருளியுள்ள இத்திருத்தலம் எல்லா வகையிலும் ஏற்றம் பெற்றதாகும்.
வரலாற்றில் அறுதியிட்டுக் கூற முடியாததும், நீண்ட நெடுங்காலமாக பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி பக்தர்கள் இதய பீடத்தில் நீங்காது இடம் பெற்று கைமாறு கருதாது கார்மேகம் போல் மாரியாய் அருள் மழை பொழியும் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் பிற கோயில்களுக்கு சிகரம் வைத்தாற் போல திகழும் இக்கோயிலில் அருள் பொழி்யும் எழில் கோலத்தில் அம்மன் வீற்றிருக்கிறாள்.
இத்தகைய சிறப்புமிக்க இக்கோயிலில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி காலையில் இருந்தே நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், மஞ்சள் ஆடையில் பால்குடம் ஏந்தியும் கோயிலுக்குச் சென்று தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்
நகரெங்கும்அன்னதானம்,தண்ணீர் பந்தல்கள்,பல்வேறு இசை ஒளி கள் காணப்பட்டது .இதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் தொடங்கி அதிகாலை 4 மணிவரை புதுக்கோட்டை மாலையீடு, ராஜகோபாலபுரம், டிவிஎஸ் கார்னர், நிஜாம் பாக்கு தொழிலாளர்கள், அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள், சாந்தநாதபுரம் நான்காம் வீதி, பூங்காநகர், மச்சுவாடி, காமராஜபுரம்பிருந்தாவனம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக் கான பக்தர்கள், மின் அலங்கார ஊர்திகளில் வைக்கப்பட்ட அம்மன் உருவச்சிலையுடன் யானை, சௌரட் குதிரையிலும் பூத்தட்டு ஏந்தி கோயிலுக்குச் சென்று பூக்களை காணிக்கையாகச் செலுத்தி வழிபட்டனர்.அதே வேளையில் நகரின் பல்வேறு பகுதிகளில் கரகாட்டம், ஒயிலாட்டம், இன்னிசை கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் விடியும் வரை நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.