திருப்பணிகள் 2009-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. ரூ.1.50 கோடியில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன. கோயிலின் 2 ராஜகோபுரங்கள், விமானங்கள் உள்ளிட்ட அனைத்தும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
கோயில் மண்டப மேல்பகுதியில் புதிதாக ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளன. இதேபோல உள்பகுதியில் புதிதாக தரைதளம் அமைக்கப்பட்டுள்ளது. சுவாமி சன்னதி, அம்பாள் சன்னதி, நடராஜர் சன்னதி, சண்முகர் சன்னதி ஆகியவற்றில் ரூ.1.25 லட்சத்தில் பித்தளை தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. ரூ.6 லட்சத்தில் தேர் பழுது நீக்கப்பட்டு வருகிறது.
திருப்பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுவிட்டதால், இம் மாதம் 26-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக கோயிலில் 44 அடி உயர புதிய கொடிமரம் புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதையொட்டி சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகமும், சிறப்பு பூஜையும் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு பூஜை நடைபெற்று, சுவாமி சன்னதி முன் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
வெள்ளிக்கிழமை காலை யாகசாலை பூஜை தொடங்கியது. முதலில் அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்ணியாக வாஜனம், பஞ்ச கவ்யம், தனபூஜை, தவதானுக்ஞை, மகா கணபதி ஹோமம் ஆகியவை நடைபெற்றன. அதையடுத்து ஷோடச ப்ரமச்சாரி பூஜை, கஜ பூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை, கன்யா பூஜை, சுவாசினி பூஜை ஆகியவை நடைபெற்றன.
மாலையில் புனிதநீர் கலசம் யானையின் மீது ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதில் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். சிவ பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதேபோல இம் மாதம் 26-ம் தேதி காலை வரை பல்வேறு பூஜைகள் நடைபெறும். அன்று காலை 6 மணிக்கு எட்டாம்கால யாகசாலை பூஜை நடைபெறுகிறது. பின்னர் நாடி சந்தானம், ஸ்பர்ஸôஹுதி, திரவ்யாஹுதி, மஹா பூர்ணாஹுதி, யாத்ரா தானம் ஆகியவை நடைபெறும்.
காலை 9.45 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும். அதைத் தொடர்ந்து சுவாமிக்கும், அம்பாளுக்கும் மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெறும். இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறும். அதைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
https://www.dinamani.com/edition/Story.aspx?artid=3 64845