ஒரு நாள் இலைகள் கூடி பேசிக்கொண்டிருந்ததாம். அப்போது “வாழை இலை சொன்னதாம்” நான் தான் எல்லோரையும் விட ‘சிரேஷ்டம்’ (சிறப்பு) யார் வீட்டில், எங்கு ,எந்த சாப்பாடு இருந்தாலும் எல்லாவிதமான ருசியான பதார்த்தங்களை முதலில் எனக்கு போட்டு, என் மூலம் தான் சாப்பிடுகிறார்கள் அதனால் நான் தான் சிரேஷ்டம் என்றதாம் .
வாழை இலையின் பக்கத்திலிருந்த வெற்றிலை குபீரென்று சிரித்து’ அட பைத்தியமே , ‘நீ என்ன ஸ்ரேஷ்டம்? நன்றாக சாப்பிட்டு முடித்ததும் உன்னை ‘குப்பைத் தொட்டியில் ‘அல்லவா வீசி எறிகிறார்கள், என கிண்டல் அடித்தது உன்னை விட நான் தான் சிரேஷ்டம், தெரியுமா? ‘மடத்து’ சமையல் ருசியில் அனைவரும் வயிறு நிறைய. ஏன் அதற்கு மேலும் நிறைய சாப்பிட்டு விடுவார்கள். மடத்து சாப்பாட்டின் ருசி அப்படிப்பட்டது, நெஞ்சு நிறைய சாப்பிட்டவர்கள் அடுத்து , அது ஜீரணமாக தேடுவது என்னைத்தான் வயிற்றிலிருக்கும் சாப்பாடு ஜீரணமாக நான் மிக, மிகத் தேவை அதனால் நான் தான் மிகச் சிரேஷ்டம் என பதிலளித்ததாம் வெற்றிலை.

இதைக் கேட்ட கருவேப்பிலை சொன்னதாம் என்ன? நீ தான் சிரேஷ்டமா? என்ன ஒரு முட்டாள் தனமாக பேசுகிறாய். ஜீரணமாக உன்னை உபயோகித்துவிட்டு சக்கையாக்கி!! உன்னை “தூ’ என துப்பி விட்டு போகிறார்கள். ரோடெல்லாம் உன்னால் அசுத்தம்.’நீ என்ன சிரேஷ்டம்? .என கூறிய கருவேப்பிலை, ‘ நான் தான் மிக மிக முக்கியமானவன், எங்கு சாப்பாடு நடந்தாலும், எந்த சமையல் ஆனாலும், நான் இல்லாமல் ருசிக்குமா? அனைத்து சமையலிலும் என் தாளிப்பு இல்லாமல் ருசிக்காது, அதனால் நான் தான் ஒசத்தி, சிரேஷ்டம் என்றதாம் கருவேப்பிலை.
வாழை இலையும் ,வெற்றிலையும் குபீரெனச் சிரித்ததாம். சமையல் ஆகும் வரைத் தான் உன் ஆட்டமெல்லாம், இலைக்கு வந்ததும் ,முதலில் உன்னை சாப்பாட்டில் இருந்து ஒதுக்கி வைத்து தானே சாப்பிடுகிறார்கள் ஒதுக்கப்பட்ட நீ என்ன சிரேஷ்டம்? எனச் சொல்லி கேலி செய்ததாம் இரண்டும்.

இதையெல்லாம் கேட்டும் மவுனமாக இருந்த ஒரு இலையை, பக்தர் எடுத்து தெய்வத்தின் மேல் சூட்டினார் , தெய்வத்தின் மார்பில் அமர்ந்த அந்த இலை சொன்னதாம் நான் துளசி
வாழை இலையே! நீ தான் ஒசத்தி ,சிரேஷ்டம் என பேசினாய், அகங்காரப்பட்டாய். அதனால் நீ குப்பை தொட்டிக்கு போனாய்.
வெற்றிலையே!! உன் கர்வப் பேச்சால் நீயும் அகங்காரம் கொண்டாய் அதனால் நீ தெருவிற்கு போனாய்.
கருவேப்பிலையே! ”நான்’ தான் சிரேஷ்டம் என அகங்காரப் பட்டாய், அதனால் இலையின் வெளியில் தள்ளப்பட்டாய்.
நான் அகங்காரத்தை விட்டேன்… அதனால் அந்த பகவானின் பாதம் சேர்ந்தேன் ‘ நான் துளசி’ என்றதாம்.

அகங்காரத்தை விட்டதால்தான் என்றும் அந்த ஆண்டவனை அலங்கரிக்கிறேன். துளசி இல்லாத ஹரி பூஜையே முழுமையாகாது, அவனுள் ஐக்கியமானேன் என பணிவாக சொன்னதாம் துளசி.
நான்” எனும் அகங்காரத்தை(அகந்தை) ஒழிந்தால் தான் , நாம் அந்த இறைவனின் திருவடியை அடைவோம் இறைவனின் அன்புக்கு பாத்திரமாவோம்.