தில்லை பெருமாள் கோவில் பிரமோற்சவம் 100 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா?

செய்திகள்

 

நடராஜர் சன்னிதியின் எதிரில் கிழக்கு நோக்கி ராஜகோபுரத்துடன் கூடிய தனிக்கோவிலாக சுற்றுச்சுவருடன் அமைந்துள்ளது கோவிந்தராஜ பெருமாள் கோவில். இக்கோவிலில் தாயார், ஆண்டாள் சன்னிதி, பலிபீடம், கொடிமரம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவற்றுடன் உற்சவம் நடத்தும் வகையில் தனிக்கோவிலாக உள்ளது.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோவில் தில்லை சித்திரக்கூடம் எனவும் அழைக்கப்படுகிறது. இரண்டாம் நரசிம்ம வர்ம பல்லவனால் கி.பி.717-782ல் கட்டப்பட்டது. இரண்டாம் குலோத்துங்கன், கிருஷ்ணதேவராயர் மற்றும் அவரது தம்பி அச்சுதராயர் உள்ளிட்டோரும் திருப்பணிகள் மேற்கொண்டுள்ளனர். குலசேகர மற்றும் திருமங்கை ஆழ்வாரால் பாடல் பெற்ற தலம். இத்தகைய சிறப்பு பெற்ற தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் பிரமோற்சவம் நடந்து 100 ஆண்டுக்கு மேலாகிறது.

1995-96ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்ததோடு சரி. பக்தர்களின் கோரிக்கை ஏற்று அரசு தமிழகத்தில் 100 ஆண்டுகள் பழைமையான கோவில்களுக்கு திருவிழாக்கள் மற்றும் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளது. ஆனால், தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் பிரமோற்சவம் மற்றும் கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருப்பது, பக்தர்களின் மனதை வெகுவாக பாதித்துள்ளது. தீட்சிதர்கள் பிரமோற்சவம் நடத்துவதற்கு தடையாக இருந்து வருவதாக நீண்டகால குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில், பொதுதீட்சிதர்களே முன்னின்று நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, கேட்டு பார்த்தும் பலன் கிடைக்கவில்லை.

பிரமோற்சவம் நடத்த வேண்டும் என, அறநிலையத் துறைக்கு பல தரப்பில் இருந்தும் சமீபத்தில் கோரிக்கை வைக்கப்பட்டதால் கடந்தாண்டு பிரம்மோற்சவத்திற்கான ஏற்பாட்டில் அறநிலையத்துறை இறங்கியது. அப்போது தங்களை கலந்தாலோசிக்காமல் திருவிழா நடத்துவது நல்லதல்ல என, தீட்சிதர் தரப்பு எதிர்ப்பு தெரிவித்து, ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தனர். இருதரப்பை அழைத்து பேசி முடிவுக்கு வர அறநிலையத் துறை செயலருக்கு அதிகாரம் வழங்கி ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி கோவிந்தராஜ பெருமாள் கோவில் அறங்காவலர்கள் மற்றும் தீட்சிதர்கள் என, இரு தரப்பையும் அறநிலையத்துறை செயலர் விசாரணை நடத்தி வருகிறார்.

நடராஜர் கோவில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு அந்த பிரச்னை கோர்ட் தீர்ப்பை எதிர்பார்க்கும் பரபரப்பான நிலையில், பெருமாள் கோவில் பிரமோற்சவ விவகாரமும் இறுதி கட்டத்திற்கு வந்து விட்டதாக அறநிலையத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே இந்த 2011 ஆண்டில் பெருமாள் கோவில் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என பக்தர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

 

Leave a Reply